ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்துச் சென்ற நிலையில், ‘ஒன்றாக வாழ்தல்’ என்னும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான் ‘இந்தியா’ என்னும் இந்த நாடு.
என்றேனும் ஒரு நாளில், ஏதேனுமொரு விரும்பத்தகாத சூழலில்[ஆதிக்க வெறியர்களால் உருவாகிக்கொண்டிருக்கிறது] அனைத்து மாநிலங்களும் தனித்தனி நாடாக ஆகுமேயானால் ‘இந்தியா’ என்றொரு நாடே இல்லை[இந்திய வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கத்தரித்து எடுத்துவிட்டால் மிஞ்சியிருப்பது எதுவும் இல்லை] என்றாகும்.
முன்பு இங்கே தனித்தனி நாடுகள் பல[இன்று மாநிலங்கள்] இருந்தமை இயற்கை நிகழ்வு. இந்தியா உருவாக்கப்பட்டது ஒரு செயற்கை நிகழ்வு.
செயற்கையாக உருவாக்கப்பட்டதைச் சிதைப்பது சாத்தியம். இயற்கை தானாக அழிந்தால்தான் உண்டு.
எனவே, முதலில் மரியாதை செலுத்த வேண்டியது மாநிலங்களுக்கு; அங்கெல்லாம் வாழும் இனங்களுக்கு; அவர்கள் பேசும் மொழிகளுக்கு.
இந்தவொரு கோணத்தில் சிந்தித்தால், மாநில அரசின் விழாக்களின் தொடக்க நிகழ்வுகளில் பாடப்பட வேண்டியவை அந்தந்த மாநிலங்களுக்குரிய வாழ்த்துப் பாடல்களே.
தமிழ்நாட்டுக்குரிய வாழ்த்துப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து.
எனவே, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் முதலில் பாடப்பட வேண்டியது தமிழ்த்தாய் வாழ்த்துதான். தேசியக் கீதம் இதற்கு அடுத்ததாகவோ, நிகழ்வின் முடிவிலோ பாடப்படலாம்[முடிவில் பாடுவது முன்பு வழக்கத்தில் இருந்தது].
இது குறித்து, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி முடிவெடுப்பது உடனடித் தேவையாகும்.
* * * * *
தொடர்புடைய ஊடகச் செய்தி:
மதுரையில் தனியார் அமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோருடனான ஆர்.என்.ரவியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒரு நட்சத்திர விடுதி[த.நா.அரசுக்குக் கூடுதல் செலவு.தேவையா?]யில் நேற்று நடைபெற்றது.
ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியின் தொடக்கமாக, தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்று அறிவித்தார்கள்.
தனியார் கல்லூரி மாணவிகள் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தை..’[தமிழ்த்தாய் வாழ்த்து] என்று பாடத் தொடங்கினர். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘தேசிய கீதம்… தேசிய கீதம்…’ என்று சத்தம் எழுப்பினர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல் வரியுடன் அப்படியே நிறுத்திவிட்டுத் தேசியக் கீதத்தை மாணவிகள் முழுமையாக பாடினர்[தேசியக்கீதத்தை இரண்டாவதாகப் பாடினால் அதன் மதிப்பு குறந்துவிடுமா?]. இதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட ஆரம்பித்து, உடனடியாக முதல் வரியுடன் நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, ஆளுநன் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது. மதுரையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் துவங்கிப் பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்//
https://www.dinakaran.com/governor_tamil_mother_greetings_stop/