வியாழன், 19 டிசம்பர், 2024

படுத்தும் கடவுளும் பாடாய்ப் படுத்தும் ஆன்மாவும்!!!

னிதன் மரணிக்கும்போது அவன் உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறுவது உண்மையா?

உண்மைதான் என்றால் உடம்புக்குள் எப்போது எப்படி அது புகுந்தது என்னும் கேள்விகளுக்கு இன்றளவும் விடை இல்லை.

ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டைக்குள் நுழையும்போதே[கருவுறுதல்] ஆன்மாவும் நுழைந்ததாகக் கொண்டால், அது புகுந்த நாளிலிருந்து செத்துச் சுடுகாடு போகும்வரை உடம்புக்குள் என்ன செய்துகொண்டிருந்தது?

நம்மை இயக்குவது, சிந்திக்கத் தூண்டுவது போன்ற அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே காரணமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு இங்கு என்ன வேலை?

மூளையின் செயல்களை அது தன்னுள் பதிவு செய்து பாதுகாக்கிறது என்றால், உறங்கும்போது, அல்லது மூளை செயலிழக்கும்போது[சில நேரங்களில்], கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருதல் வேண்டும்; வருவதில்லை.

அடுத்த நம் ஐயம்.....

எதனுடனும் ஒட்டாமல் தனித்திருக்கும் ஆன்மா சிந்திக்குமா?

ஊஹூம்... உறுதிப்படுத்தினாரில்லை.

சிந்திப்பதோ செயல்படுவதோ இல்லாமல் வெறுமனே உடம்புக்குள்  இருந்துகொண்டிருக்கும்[எந்த இடத்தில்?] அது, இறப்பு நேர்ந்து உடல் மண்ணில் கலக்கும்போதோ எரிக்கப்படும்போதோ வெளியேறுகிறது என்கிறார்கள்.

ஆவியாகவா? புகை போலவா?

புகை வடிவில் ஒழுங்கற்ற புகைப்படக் காட்சிகளைக் காட்டி இதுதான் ஆன்மா என்று ஏமாற்றுவோர் உண்டு.  

ஆன்மா நீரில் கரையாது; நெருப்பில் அழியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

இதெல்லாம் முடியாது என்றால், அவர்களில் எவரும் தம் ஆறாவது அறிவால் அறிந்துணர்ந்து பிறருக்கு உணர்த்தியது எப்படி?

இவர்கள் மந்திரவாதிகளோ?!

மரணத்திற்குப் பிறகு மீண்டும் இன்னொரு உடம்புக்குள் ஆன்மா புகும்[மறுபிறப்பு] என்றும் சொல்கிறார்கள்.

புகும்வரை அது எங்கெல்லாமோ இலக்கின்றி அலைந்து திரிகிறது என்றும் கதைக்கிறார்கள்.

திரிவது நாட்கணக்கிலா, ஆண்டுக்கணக்கிலா, யுகக்கணக்கிலா?

திரியவிடுபவர் கடவுளா?

திரிவது தண்டனையா, பிறவிகளுக்கிடையேயான ஓய்வுக் காலமா?

எதற்கும் சரியான பதில் இல்லை.

அனுமானத்தின் மூலம் ஆன்மாவின் இருப்பு அறியப்பட்டதாம்.

எப்படி அனுமானித்தார்கள்?

தொலைவில் புகை வெளியேறுவது தெரிந்தால் அங்கே நெருப்பு எரிகிறது[கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும்] என்று நம்புகிறோம். இது அனுமானம்.

இதைப் போன்றதொரு எடுத்துக்காட்டைச் சொல்லி ஆன்மாவை அனுமானிப்பது சாத்தியப்பட்டதில்லை.

ஆன்மா கடவுளின் ஒரு கூறு என்றும் பொய் பரப்புகிறார்கள்..

கடவுளே எப்படியிருக்கிக்கிறார், எப்படித் தோன்றினார் என்பதெல்லாம் உறுதி செய்யப்படாத நிலையில் ஆன்மா இருப்பதாகச் சொல்லித் திரிவது அறிவீனத்தின் உச்சம் ஆகும்.

ஆன்மா இருப்பதாகச் சொல்வதும், அதை நம்புவதும் ஏராள மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக உள்ளது.

ஆகவே, அறிவியல் ரீதியாகக் கடவுளும் ஆன்மாவும் நிரூபிக்கப்படும்வரை, மனநிறைவு தரும் வகையில் வாழ்ந்து முடிக்க முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.