அது தொடர்பாக இருவரும் மோதிக்கொண்டபோது, ஒருவர் மற்றொருவரால் கொல்லப்படுகிறார்.
இது தொடர்பான வழக்கில்.....
‘தீர்ப்பு வழங்கும்போது ராமாயணக் கதை நிகழ்வை மேற்கோள் காட்டுகிறார் நீதிபதி. “ராமர் வனவாசம் சென்றபோது அவரது சகோதரர் பரதன் அரியணை ஏற மறுத்தார். ராமரின் செருப்பை அரியணையில் வைத்து ஆட்சியை நடத்தினார். இது ஒரு சகோதரனின் அன்பைக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் நிலத்துக்காக உங்கள் சகோதரரைக் கொன்றீர்கள்” என்று அறிவுறுத்தியதோடு, குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்தார் என்பது செய்தி’[தினத்தந்தி].
“ராமாயணக் கதையை நீதிபதி மேற்கோள் காட்டியது வரவேற்கத்தக்கது. இது இனியேனும் இம்மாதிரியான குற்றங்கள்[கொலை] நிகழாதிருக்க உதவும்” என்று இதை வாசிப்பவர்கள் நினைக்கக்கூடும்.
அடியேன் இதற்கு விதிவிலக்கானவன்.
ராமாயணத்தில் உள்ள இந்த நிகழ்வை வாசிக்காதவர்களோ, வாசிக்கக் கேட்காதவர்களோ இல்லை என்றே சொல்லலாம். அத்தனைப் பிரபலம் ராமாயணம்[இன்றளவும் திரும்பத் திரும்ப இந்தக் கதை காணொலிகளில் இடம் பெறுவது அறியத்தக்கது].
இருந்தும், நம் மக்களின் மனங்களில் சிறிதளவேனும் பாதிப்பை ஏறபடுத்தியதா என்றால் இல்லை என்பதே உண்மை. சொத்துக்காக நிகழ்த்தப்படும் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
தூக்கில் தொங்கவிருக்கும் ஒரு குற்றவாளியிடம் இம்மாதிரிக் கதைகளைச் சொல்வதால், உச்சக்கட்ட வேதனையில் இருக்கும் குற்றவாளி பெறும் பயன் ஏதுமில்லை.
ராமாயணக் கதை நிகழ்வுகளில் மிகப் பல[பரதன் ராமனின் செருப்பை அரியணையில் இருத்தி ஆட்சி செய்தது உட்பட] நடைமுறை சாத்தியம் அற்றவை.
இது வாழும் முறைகளைக் கற்றுக்கொடுக்கிற காவியம் அல்ல. பெருமளவில் பொழுதுபோக்குக்குப் பயன்படுகிற ஒன்று மட்டுமே.
நீதிபதி அவர்கள் இனியேனும் இம்மாதிரியான ஒன்றுக்கும் உதவாத கதைகளை மேற்கோள் காட்டாமல், உண்மையான பாசப் பிணைப்புடன் வாழும் சகோதர்கள் பற்றிய உண்மை நிகழ்வுகளை உதாரணமாகக் காட்டினால் அது ஓரளவுக்கேனும் மனித மனங்களைப் பக்குவப்படுத்தக்கூடும் என்பது என் எண்ணம்; அறிவுரையோ பரிந்துரையோ அல்ல.
* * * * *