முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் மேரு மலையை மத்தாக நிறுத்தி வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி, பாற்கடலைக் கடையோ கடை என்று கடைந்தபோது வெளியான அமிழ்தத்தை, அதி பிரமாண்டமான ஒரு கலயத்தில் நிரப்பி வைத்தார்கள்.
தங்களுக்கான பங்கைப் பெற்றிடத் தேவர்கள் காத்திருந்தபோது, அமுதப் பானையை[கலயம்] அசுரர்கள் ‘அலேக்’ செய்து அண்டவெள்ளியில் ஓடிக்கொண்டிருக்க, அவர்களைத் தேவர்கள் தடுக்க இரு தரப்பினருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு, 12 ஆண்டுகள் போரிட்டுக்கொண்டார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.
கடவுள் திருமாலின் வாகனமான கருட பகவான் அமுதப் பானையைச் சுமந்துகொண்டு வானத்தில் பறந்து சென்றபோது, மேற்கண்ட நான்கு இடங்களில் அமுதம் சிந்தியது என்பது இன்னொரு கதை.
அமிழ்தத் துளிகள் நேரடியாகச் சொர்க்கத்திலிருந்து விழுந்தன என்பதாக மற்றுமொரு கதையும் சொல்லப்படுகிறது[இவற்றில் எந்தக் கதை உண்மையானது என்று ஆராய்ச்சி செய்தால் நீங்கள் ‘பாவி’ ஆவீர்கள்].
அடுத்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மேற்கண்ட இடங்களில் கும்பமேளா கொண்டாடப்படவுள்ளது. அங்குச் செல்லவிருக்கும் பயணிகளின் வசத்திக்காக, இரண்டு மாதக் காலத்திற்கு இங்கே[தென்னிந்தியா] சில ஊர்களுக்கிடையே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அங்கே அனுப்பப்படவுள்ளன[விவரம் கீழே*].
இங்குள்ள மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கி, ரயில்களை அங்கே அனுப்புவது தேவையா?
தேவையே.
கும்பமேளாவில் கலந்துகொள்வதன் மூலம், கலந்துகொள்பவர்கள் புனிதர்கள் ஆகி, புண்ணியம் சேர்க்கிறார்கள்.
2003ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் தேதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்துகொண்டு புண்ணியம் சம்பாதித்தார்கள். 2013இல்[பெப்ரவரி 10] நடைபெற்ற கும்பமேளாவில் கலந்துகொண்டவர்கள் சுமார் மூன்று கோடிக்கும் அதிகம்.
இவற்றைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க பயன் ஒன்றுள்ளது. அது...
கோடிக்கணக்கிலான பக்திமான்கள் கலந்துகொள்வதால் ஏற்படும் மிகக் கடும் நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் நூற்றுக்கணக்கானவர்கள், நேரடியாக[வாழ்நாளெல்லாம் நல்ல பல காரியங்கள் செய்து புண்ணியம் சேர்ப்பது எளிதல்ல], அதாவது, குறுக்கு வழியில் சொர்க்கம் சேர்கிறார்கள் என்பதே.
1954இல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர்[கூகுள் தேடலில் கிடைத்த தகவல்]. மற்றக் கும்பமேளாக்களிலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழந்தார்கள் என்பதைவிடவும் நேரடியாகச் சொர்க்கம் சேர்ந்தார்கள் என்றே சொல்லலாம்.
‘பாரத்’இல் பல்வேறு ஊர்களுக்கிடையே சென்றுவரும் அனைத்து ரயில்களையும் உத்தரப்பிரதேசத்திலுள்ள மேற்கண்ட புனிதத் தலங்களுக்கு அனுப்பி வைத்தால், புனிதப் பயணர்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பல மடங்காக அதிகரிக்கும் என்பதோடு, நெரிசலில் சிக்கி உயிரிழந்து சொர்க்கம் சென்றடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
எனவே, ஒன்றிய அரசு இது தொடர்பான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.
* * * * *
*திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 6.50, காலை 10.36, இரவு 7.15 மணிக்கும், காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு காலை 6.15, பிற்பகல் 2.50, இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் டிச.26 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. அதுபோல், காட்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 9.30 மணிக்கும் மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பகல் 12.45 மணிக்கும் புறப்படும் மெமு ரயில் டிச.28 முதல் மாா்ச் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.