கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், ‘மனிதம்’ போற்றும் படைப்புகளைப் பதிவு செய்வதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

செவ்வாய், 24 மார்ச், 2020

கிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை!

வரலாற்றுப் பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவள் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன.

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாகப் பிறந்த கிளியோபாட்ரா  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களைப் போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியைக் கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11  மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.

14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள்.  எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தாலமியைத் திருமணம் செய்துகொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்குப் பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து  மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இ ருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரைக் காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரைத் தன் காதல் வலையில்  வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்குப் பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்குத் தப்பினாள்.

சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்தக் காலத்தில் தனது 2 சகோதரி கள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண் டாள்.

இந்நிலையில் கிளியோபாட்ராவுக்குச் சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர்  எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை
பிடிக்கப்பட்டனர்.

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பைக் கடிக்க  வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள்  என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.

சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார்  செபர். எகிப்தின் பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின்  வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
===============================================================
நன்றி: தமிழ்முரசு http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12