‘ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மசூதியிலிருந்து புறப்பட்டு, நெடுந்தொலைவிலுள்ள ஆலமரம் ஒன்றின் அருகிலிருக்கும் கிணற்றடிக்குச் செல்வது அவர் வழக்கம். அந்தக் கிணற்று நீரில் குளிப்பார்; தன் குடல், கும்பி[இரைப்பை] ஆகியவற்றை வாந்தி எடுத்து, அவற்றின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து அருகிலிருந்த நாவல் மரத்தில் தொங்கவிட்டுக் காய வைப்பார்; மீண்டும் விழுங்கிவிடுவார்!’
மேற்கண்ட இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் 96 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான்[மறைவு: 1918] என்றால் நீங்கள் நம்புகிறீர்களா?
இது போன்ற இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.
மூன்று அங்குல அகலமும் இருபத்திரண்டு அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியை விழுங்கி அரை மணி நேரம் போல வயிற்றுக்குள் வைத்திருந்து கக்குவாராம். ‘தவ்தி’ எனப்படும் இந்த யோகப் பயிற்சியை அவர் அடிக்கடி செய்வதுண்டாம். [இதுவும் தொண்டை முதலான உறுப்புகளைச் சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையோ?]
தவ்தி யோகம் மட்டுமல்லாது, உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியாகக் கழற்றிப் பின்னர் ஒன்று சேர்க்கும் ‘கண்ட யோகப் பயிற்சி’யிலும் அவர் வல்லவராம்.
கொஞ்சமே கொஞ்சம் எண்ணையில் தண்ணீர் கலந்து விளக்கு எரித்திருக்கிறாராம்!
வெறும் கைகளையே செக்கில் இட்டு, கோதுமை இல்லாமலே அவர் அரைத்துக் கொடுத்த கோதுமை மாவை ஊர் எல்லையில் கொட்டி வைக்க, கிராமத்தில் பரவியிருந்த காலரா நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம்[ஒட்டுமொத்த உலகிலிருந்தும் கொரானாவை விரட்டச் சொல்லி மானசீகமாக் கும்பிட்டுக்குங்க].
தொலை தூர ஊர் ஒன்றில், உலைக்களத்தில் தவறி விழுந்த ஒரு கொல்லனின் குழந்தையைத் தன் இருப்பிடத்தில் இருந்தவாறே ‘துனி’ எனப்படும் நெருப்புக் குண்டத்தில் கைவிட்டு மீட்டார்.
பேய் மழை பெய்வித்து, இவர் வாழ்ந்த ஊரையே வெள்ளக் காடாக மாற்றிய வருண பகவானின் கோரதாண்டவத்தை, “நிறுத்து உன் சீற்றத்தை” என்று இடிமுழக்கம் செய்து தடுத்து நிறுத்தினார்.
கடுமையான ஆசாரங்களை அனுசரிக்கும் ஓர் அந்தணர், தயங்கியவாறே இந்த மகானைத் தரிசிக்க வந்தபோது, மகான் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை; ராமச்சந்திர மூர்த்தி நின்றுகொண்டிருந்தார்! ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை அந்தணர் வணங்கி எழுந்த போது அங்கே அந்த மகானே நின்றுகொண்டிருந்தார்!
'நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்ட இவர், 1886 ஆம் ஆண்டு, “நான் கடவுளைக் காணச் செல்கிறேன். திரும்பி வரும்வரை என் உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி உயிர் துறந்து, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.
இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அதிசயங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்த மகான்தான், “அல்லாவும் நானே! ராமனும் நானே!” என்று முழக்கமிட்டவர்.
நாம தேவர், கபீர் என்னும் ஞானிகளைப் போல இவரும் ஒரு குழந்தையாக ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த போது கண்டறியப்பட்டார். இவரின் பெற்றோர், பிறந்த இடம் பற்றிய விவரங்களை எவரும் அறியார்.
அளப்பரிய அதிசயங்களை நிகழ்த்திய இந்த மகானின் சமாதியைத் தினம் தினம் சுமார் 50,000 பேர் ‘ஷீர்டி’ சென்று வணங்கிச் செல்கிறார்கள்[வியாழன், சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகுமாம்].
இந்த மகான் ஷீர்டி சாயி பாபா என்பது புரியாதவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.
ஆதார நூல்
‘சாய்’ என்றால் மகான் என்று பொருள்.
இவர் மகான்களுக்கெல்லாம் அப்பாவாகத் திகழ்ந்தாராம். அதனால், ‘சாயி பாபா’ என்று அழைத்தார்களாம்.
இந்த நாட்டில், நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து, காவியுடுத்து, மழையையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மரத்தடியில் ஐந்தாறு நாட்கள் போல எதையாவது முணுமுணுக்கத் தெரிந்தால் அவன் யோகி ஆகிவிடலாம்.
மாந்திரீகங்களும் மாயாஜால வித்தைகளும் கற்றுக்கொண்டால் அவன் மகான் ஆகிவிடலாம்.
“அவர் கட்டித் தழுவினால் தீராத நோய்கள் தீரும்; கை உயர்த்தி ஆசீர்வதித்தால் பாவங்கள் விலகும்” என்பன போல் ‘கட்டுக்கதைகள்’ பரப்ப ஏஜண்டுகள் இருந்தால் வெகு விரைவில் பிரபலம் ஆகிவிடலாம்.
மேலே குறிப்பிடப்பட்டது போல, அவர் அதிசயங்கள் பல நிகழ்த்துவதாகப் பக்கம் பக்கமாக இட்டுக்கட்டி எழுதுவதற்குத் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற வார இதழ்கள், மற்றும் இவை போன்ற இன்ன பிற ஊடகங்களின் ஆதரவும் இருந்தால் வி.வி.வி.ஐ.பிகள் தேடி வந்து காலில் விழும் அளவுக்குப் புகழின் உச்சியைத் தொடலாம்; கோடிகள் சேர்க்கலாம்.
ஷீர்டி சாயி பாபா அதிர்ஷ்டசாலி. ஆனாலும்..........
“நான் சொர்க்கத்திலிருந்து வந்தவன், நானே அல்லா, நானே ராமன், நானே எல்லாம்” என்று சொல்லிக்கொண்ட இவரை மகான் என்று புகழ்வது பேதைமையின் உச்சம் என்கிறேன் நான். நீங்கள்.....?
======================================================================