தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்காமல் கோவணம்கூட... மன்னித்திடுக, செருப்பு அணியமாட்டேன் என்று ‘பாஜக’ அண்ணாமலை சபதம் செய்திருக்கும் நிலையில், ஒன்றிய அரசால் இந்த ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு[தேர்தல் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரேனும்] நிறையவே வாய்ப்புள்ளது[காலில் செருப்பில்லாமல் அ.மலை ஊரூராய் அலைவதைப் ‘பாஜக’ மேலிடம் தாங்கிக்கொள்ளாது].
அண்ணாமலை என்னும் தங்களின் அடிமையைத் தூண்டிவிட்டு, கொஞ்சம் உண்மையும் கலந்த பொய்யான குற்றச்சாட்டுகளைத் ‘திமுக’ மீது சுமத்தி, அவற்றை மறுப்பதற்கான அவகாசம்கூடத் தராமல் அதன் தலைவர்களை நிலைகுலையச் செய்து, அந்த அரசைக் கவிழ்ப்பது ஒன்றிய அரசால் ஏறத்தாழ முடிவு செய்யப்பட்ட ஒன்று.
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்குப்[குறிப்பாகப் பெண்களுக்கு] போதிய பாதுகாப்பு இல்லை; ஊழல் மலிந்துவிட்டது; குடிமகன்களின் எண்ணிக்கை நாளும் கூடிக்கொண்டேபோகிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால், தமிழர்கள் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் ‘திமுக’வைப் புறக்கணித்துவிட வாய்ப்புள்ளது.
அவ்வப்போது புறக்கணிப்பது போல் பாசாங்கு செய்தாலும், மோடி வகையறாக்களின் கொத்தடிமைகளாக இருந்து பழக்கப்பட்ட[அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்றவற்றின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாததால்] எடப்பாடியாரின் ‘அதிமுக’வுக்குக் கொஞ்சமும் அருகதை இல்லை.
'நாம் தமிழர்’ கட்சியின் சீமான் இனப்பற்று உள்ளவர்தான் என்றாலும் தமிழர் நலன் பேணுவதற்கான பயனுள்ள நல்ல திட்டங்களை வகுக்கவோ, அவற்றைச் செயல்படுத்துவதற்கோ போதிய அறிவாற்றலும், செயலாற்றும் வல்லமையும் இல்லாதவராகத் தெரிகிறார்; முரட்டுத்தனமாய் மனம்போன போக்கில் வறட்டுக் கூச்சல் போடுகிறார். தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை இவர் பெறுவாரா என்பது விடை தெரியாத கேள்வி.
காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமைக் கட்சிகள் போன்ற அகில இந்தியக் கட்சிகளுக்குப் போதிய தமிழினப் பற்றோ மொழிப்பற்றோ இல்லை. தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதைத் தவிர ஆட்சிபீடத்தில் அமரும் கனவும் இவர்களுக்கு இல்லை.
திருமாவளவன் சுத்தத் தமிழன் என்பதோடு ஆக்கபூர்வமாகச் செயல்படும் திறமையும் உள்ளவர். ஆயினும் அவர் தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்பதால், மேம்பட்டவர்கள் என்று சொல்லப்படும் சாதிக்காரர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது சாத்தியப்படாது.
மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்கள் எனினும், வன்னியர்களில் கணிசமானவர்களின் ஆதரவைத் தக்க வைப்பதிலேயே ராமதாசும் அன்புமணியும் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதால், ‘பாமக’வுக்கும் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பு அமையப்போவதில்லை.
கொங்கு வேளாளர், நாடார்கள், முக்குலத்தோர் போன்றவர்களின் சாதிக் கட்சிகளின் நிலையும் இதுவே.
ஒன்றிய அரசால் ‘திமுக’ ஆட்சி கவிழ்க்கப்பட்டு. தமிழ் மாநிலத்துக்கான தேர்தல் நடைபெறுமானால், கோடி கோடியாய்ப் பணத்தை அள்ளி அள்ளித் தெளித்துப் பெரும்பான்மை பெற்றுத் தமிழர்களை ஆள்வது ‘பாஜக’வினருக்குச் சாத்தியப்படவும்கூடும்.
ஆனால், அவர்கள் ஆட்சியமைத்தால்.....
தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, அனைத்துத் துறைகளிலும் இந்தியே ஆதிக்கம் செலுத்தும்; மதவெறியர்களின் கொட்டம் அதிகரிக்கும். மூடநம்பிக்கைகளின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகும். மொழி&இனப் பற்றில்லாத அண்ணாமலை போன்றவர்களே[வடபுல ‘பாஜக’ தலைவர்களின் கட்டளைப்படி] இந்த மாநிலத்தை ஆளுவார்கள். தமிழரின் இனப்பற்றும் படிப்படியாச் சிதைக்கப்பட்டு, ஒரு காலக்கட்டத்தில் இந்த இனமே இல்லாமல்போகும்.
இத்தகையதொரு அவலநிலையை நினைவுகூரும்போதெல்லாம் நெஞ்சு நடுங்குகிறது; கண்கள் கலங்குகின்றன.
* * * * *
"உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல”!