புதன், 11 டிசம்பர், 2024

நடிகர் அஜித் குமாருக்கு மனநோயா!?!?!

சில வாரங்களாகச் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித் அவர்களின் பெயர் ‘கடவுளே, அஜித்தே’ என்பது அதிகம் பகிரப்படும்[ட்ரெண்டிங்] வாசகமாக இருந்துவருகிறதாம்[தினகரன் செய்தி].

இதையறிந்த அஜித் குமார் நேற்றிரவு, ‘சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் அநாகரீகமாகவும், தேவையே இல்லாமலும் ‘க… அஜித்தே’[தன் பெயருக்கு முன்னால் ‘கடவுள்’ சேர்க்காதது கவனிக்கத்தக்கது] என்ற இந்த முழக்கம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் எனக்குத் துளியளவும் உடன்பாடில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டு அளவிறந்த தன் மனவேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர் அஜித்தின் இந்தச் செயல் நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.

கடவுளின் அவதாரம் என்றில்லாமல், தானே கடவுள் என்பதாக மக்களை நம்பவைக்க ஈனச் செயல்களில் ஈடுபடும் போலிச் சாமியார்கள் நிறைந்த இந்த உலகில் இப்படியொரு உத்தமக் குணத்தவனா என்று வியக்கத் தூண்டுகிறது.

மனநோயாளியோ என்று சந்தேகப்படவும் தோன்றுகிறது.

விமர்னங்களையும் கண்டனங்களையும் அலட்சியப்படுத்தி[ஆதிக்கச் சக்திகளின் ஆதரவுடன்] கோடிகளை அள்ளிக் குவிப்பதிலேயே குறியாக இருக்கும் கெடுமதியாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்தினால் அது வெகுவாக நீளும்.

அவர்களில் குர்மீத் ராம் ரஹீம், அசாராம் பாபு, ராதே மா, நித்தியானந்தா, சச்சிதானந்தகிரி, பாபா ஓம், சாய்பாபாக்கள், ஜக்கி வாசுதேவன் போன்றவர்கள் பலராலும் அறியப்பட்டவர்கள்.

கண்டனங்கள் குறித்துக் கொஞ்சமும் அஞ்சாமல், மூளைச்சலவை செய்து கொத்தடிமைகளை உருவாக்குவதோடு, அவர்களையே பயன்படுத்தி, மிகப் பல காணொலிகளை வெளியிட்டும் பின்னூட்டங்களைப் பதிவு செய்தும், தான் கடவுளுக்குச் சமமானவன் என்னும் பிம்பத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்வதில் பெருமளவு வெற்றியும் கண்டிருப்பவர்[ஊடக விளம்பரங்களுக்காகக் கோடிகளில் செலவிடுபவர்] வெள்ளியங்கிரி ஆண்டவர் ஜக்கி வாசுதேவன்.

எண்ணற்ற அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, தனக்குத்தானே கடவுளின் குரு என்று பரப்புரை செய்து, மானாவாரியாய்ச் சம்பாதித்துக் கிஞ்சித்தும் மன உறுத்தல் இல்லாமல் கோடிகளில் புரளும் இவரோடு ஒப்பிடும்போது மலையளவு உயர்ந்து நிற்கிறார் அஜித்!

                   *   *   *   *   *

https://www.dinakaran.com/gosh-ajith-slogan-me-disturbing/