மோடி திருச்சி வந்தாராம்[பல்கலை. பட்டமளிப்பு விழா].
அவரை வரவேற்கத் தன் அப்பாவுடன் சென்ற துவாரகா மதிவதனி என்னும் சிறுமி, “தாத்தா... தாத்தா, மோடி தாத்தா, இந்தி படிக்கணும்னு எனக்கு ஆசையோ ஆசை. ஆனா, அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தர்றதில்ல. அதனால மோடித் தாத்தா நீங்க பள்ளிக்கூடம் கட்டி எனக்கு இந்தி கத்துக்க வசதி பண்ணித்தரணும் தாத்தா. பள்ளிக்கூடம் கட்ட அப்பாகிட்ட சொல்லி இடம் ஏற்பாடு பண்ணுறேன்” என்கிற வாசகம் எழுதிய அட்டையை மோடிக் கடவுளிடம்[கடவுளால் அனுப்பப்பட்டவர்] காட்டினாளாம்[இது தொடர்பான மற்றச் செய்திகள் கீழே, முகவரி உட்பட].
துவாரகா மதிவதனி 2ஆம் வகுப்புப் படிக்கிற குட்டிப் பாப்பா. வயசு 7 இருக்கலாம். இத்தனைச் சின்ன வயசுல இந்தி கற்பதன் சாதக பாதகங்கள் இவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. படிக்கணும்கிற ஆசை ஏற்படவும் வழியே இல்லை. நவோதயா பள்ளியில் இந்தி கற்பிப்பது, அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது பற்றியெல்லாம் அறிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை.
எனவே, அரசுப் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை என்பதைக் கண்டிப்பதற்காக ஒரு சிறுமியை வைத்து நடத்தப்பட்ட ஓரங்க நாடகம் இது என்று உறுதிபடச் சொல்லலாம்.
கதை, வசனம்[இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது], தயாரிப்பு எல்லாமே மோடி.
இயக்கம் மட்டும் நம்பர் 1 கொத்தடிமை அண்ணாமலை. உதவி இயக்குநர் போலீஸ்காரர் விஜயசேகரன், பெண்ணின் தந்தை [‘பாஜக’காரரோ!?].
மோடியும் அண்ணாமலையும் இணைந்து இப்படியொரு நாடகத்தைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றியது அவசியம் அற்றது.
மோடி இந்த நாட்டின் பிரதமர்; சர்வ அதிகாரங்களும் இவர் வசம்தான்.
தமிழ்நாடு அரசைக் கலைத்து, தமிழ்நாடு அரசின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயப் பாடம் ஆக்கலாமே?[அரசியல் சாசனம் எல்லாம் மோடிக்கு ஒரு பொருட்டே அல்ல].
லாமே என்ன லாமே, தி.மு.க. அரசின் ஆட்சிக்காலம் முடிவதற்குள்ளாகவே இது நடக்கக்கூடும்.
* * * * *
நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். வேட்டைக்காரனிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மகள் துவாரகா மதிவதனி, இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த ஆண்டு நவ., 30ல் வடக்கு பொய்கைநல்லுார், கோரக்கர் சித்தர் கோவிலுக்கு வந்த பா.ஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், 'நம்ம மோடி தாத்தாகிட்ட சொல்லி, நாகையில் நவோதயா வித்யாலயா பள்ளிக்கூடம் கட்டித் தரச் சொல்லுங்க மாமா' என, தன் கையால் எழுதிய அட்டையை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு ஜனவரி 2இல் திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக 38ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பிரதமர் மோடி வந்தபோது, அவரை வரவேற்க அப்பாவுடன் சென்றார், துவாரகா மதிவதனி.