செவ்வாய், 24 டிசம்பர், 2024

காந்தி, சங்கரலிங்கனார், Dallewal... இத்தனை மன வலிமை எப்படி வாய்த்தது இவர்களுக்கு!?

1933ஆம் ஆண்டில் காந்தியடிகள் 21 நாட்கள்[தீண்டாமை எதிர்ப்பு > மூன்றாவது முறையாக]  உண்ணாநோன்பு மேற்கொண்டார். அப்போது அவரின் வயது 63[வாழ்ந்தது 78 ஆண்டுகள்].

அறுபதைக் கடந்த முதுமைப் பருவத்தில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது ஒரு சாதனை[“உண்ணாவிரதம் மட்டுமல்ல, அது ஒரு மனவிரதமும்கூட” என்றார் அவர்].

இந்தவொரு வயதில் இத்தனை நாட்கள் விரதம் இருந்த பிறகும் உயிரோடு இருந்ததற்கு அவரின் மன வலிமை முக்கியக் காரணம் ஆகும்.

{இப்படியொரு அசாத்திய மன வலிமை இருந்ததால்தான், மதராசு மாநிலம்(மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி, சங்கரலிங்கனாரால் 76 நாட்கள் உண்ணாவிரதமிருக்க முடிந்தது[விரிவான செய்தி கீழே*]. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால் அவரின் ஆயுள் முடிந்துபோனது}

காந்தியடிகளைப் போலவும் சங்கரலிங்கனாரைப் போலவும் முதுமைப் பருவத்தில் நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார் பஞ்சாப் மாநிலத்தைச்  சேர்ந்த விவசாயி Dallewal.

அவரின் வயது இப்போது 70. ஒன்றிய அரசிடம் முக்கியக் கோரிக்கை ஒன்றை முன்வத்து[பஞ்சாப் & அரியானா எல்லைப் பிரச்சினை] 27ஆவது நாளாக உண்ணாநோன்பைத் தொடர்கிறார்.

அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

உரிய நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

விவசாயி மிகப் பல ஆண்டுகள் உயிர் வாழ நம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

                                   +++++++++++++++++++++++++++++++++++++++

*சங்கரலிங்கனார் (Sankaralinganar, 1895 - 13 அக்டோபர் 1956) என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன், உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர்[வயது 61]. இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர்.[1][2][விக்கிப்பீடியா]. இறப்பதற்குச் சிறிதுக் காலம் முன்பே அவர் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் அப்புறமும் பல ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருப்பார்.