திங்கள், 25 ஏப்ரல், 2022

'புனிதம்' பொய்யர்களின் புகலிடம்!!!

கராதிகளெல்லாம், 'புனிதம்' என்னும் சொல்லுக்குத் 'தூய்மை', 'தெய்வீகத்தன்மை' என்று பொருள் தருகின்றன.

தூய்மை என்னும் பொருள் ஏற்கத்தக்கது. 'தெய்வம்' இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரை 'தெய்வீகத்தன்மை'யை ஏற்க இயலாது.

'மனிதத்தன்மையே' புனிதம் என்கிறார் 'மனிதம் புனிதம்'[2021 வெளியீடு ஐஸ்வர்யா பப்ளிகேசன்ஸ், குரோம்பேட்டை, சென்னை] என்னும் நூலாசிரியர் நா.பெருமாள்.

மனிதத்தன்மையை மனிதம் என்றே சொல்லலாம். அதற்குப் புனிதம் என்னும் வெளிப்பூச்சு தேவையில்லை.

ஆக, தூய்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லை[ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது], கடவுளைக் கற்பித்துப் பக்தி நெறி பரப்பிய மதவாதிகள், 'தெய்வீகத் தன்மை' என்ற ஒன்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அறியத்தக்கது.

ஆளுக்கொரு நூலை[வேதம் என்னும் பெயரில்] எழுதிவைத்துக்கொண்டு, 'இது கடவுளால் அருளப்பட்டது என்று பரப்புரை செய்த மதவாதிகள்தான், 'புனிதம்' என்னும் சொல்லுக்கு இந்தப் புதிய பொருளை[தெய்வீகத்தன்மை]ச் சேர்த்தவர்கள்.

தூய்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட சொல்லுக்குத் 'தெய்வீகத் தன்மை'யை ஏற்றியதோடு,

கடவுளைப் புகழ்ந்து பேசுகிறவர்களைப் 'புனிதர்கள்' ஆக்கினார்கள். 

அசுத்தம் நிறைந்த ஆற்று நீரைப் புரியாத மந்திரங்களைச் சொல்லிப் 'புனித நீர்'  ஆக்கினார்கள்.

அதைக் கோபுரக் கலசங்கள் மீது கொட்டி மந்திரம் ஓதினால், லட்சக்கணக்கானவர் கூடி நின்று மெய் மறந்து வழிபடுகிறார்கள்.

சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிலைகள் மீது ஊற்றினால் அவற்றில் தெய்வம் குடியேறிவிடும் என்று நம்ப வைத்தார்கள். அதை நம்புகிறவர்கள் கோடானு கோடிப் பேர்.

இந்த உண்மையைச் சொல்லித் "திருந்துங்கள்" என்று சொல்கிறவர்கள் 'நாத்திகர்கள்' ஆக்கப்பட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகிறார்கள். திருந்தவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பவர்கள் 'யோக்கியர்கள்', 'உத்தமர்கள்' என்றெல்லாம் போற்றிப் புகழப்படுகிறார்கள்.

ஆக, இல்லாத தெய்வீகத்தன்மைக்குப் புனிதம் என்றொரு சொல்வடிவம் தந்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் மகா மகா மகா புத்திசாலிகள்தான்!!!

==========================================================================