வியாழன், 7 ஏப்ரல், 2022

"வெறும் சூரிய ஒளியில் D வைட்டமின் இல்லை"..... மருத்துவத்துறை!

***உடலில் எலும்புகள் மற்றும் பற்களின் இயல்பான வளர்ச்சிக்கும், சில நோய்களுக்கு எதிரான ஆற்றலைப் பெறுவதற்கும் உடலில் போதுமான அளவு வைட்டமின் 'D' இருத்தல் மிக அவசியம். உடலுக்குப் போதுமான வைட்டமின் 'டி' கிடைக்கவில்லையென்றால் எலும்புகள் மென்மையாகும்; உடையவும்கூடும்***
'சூரிய ஒளியில் D  வைட்டமின் உள்ளது' என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவத்துறை.

சூரிய ஒளியில் புற ஊதாக் கதிர்கள்[Ultra-Voilet] உள்ளன.

அலை நீளத்தைப் பொருத்து இவற்றை 3 வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

C வகை அலைகள் தீங்கு விளைவிப்பவையாகும். பூமியைத் தாக்காதவாறு இவற்றை ஓசோன் படலம் தடுக்கிறது.

A வகை அலைகளும் B வகை அலைகளும் பூமியை அடைகின்றன. இவற்றில் B வகை அலைகளால் கெடுதல் ஏதும் இல்லை.

இந்த B வகை ஊதாக் கதிர்களில்தான் D வைட்டமின் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது தவறாகும்.

உண்மையில், நம் மேற்புறத் தோலில் உள்ள இரண்டு அடுக்குகளில் வைட்டமின் D தயாரிக்கப்படுகிறது. அதற்கு, மேற்படி புற ஊதாக் கதிர்கள் உதவுகின்றன என்பதே உண்மையாகும்.

D  வைட்டமின் பெற வெள்ளைத் தோல் கொண்டவர்கள் 20 நிமிடங்கள் போல் சூரிய ஒளியில் இருந்தால் போதும். கறுப்புத் தோலர்கள் அரை மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் காய்வது நல்லது என்கிறது மருத்துவ உலகம்.

நாள் தவறாமல் வெய்யிலில் காய்வீர்! எலும்புகளைத் திடப்படுத்துவீர்!! பற்களைப் பலப்படுத்தி, நடுத்தர வயதிலேயே 'பொக்கை வாயர்' ஆவதைத் தவிர்ப்பீர்!!!

==========================================================================நன்றி:

'எது எப்படி ஏன் தெரியுமா?' -என். ராமதுரை அவர்கள்; சேகர் பதிப்பகம், சென்னை.