சனி, 30 ஏப்ரல், 2022

தமிழர்கள் இந்தி படிக்கலாம்! எப்போது?

[படம்: 'வினவு']

"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் படி" என்கிறார் ஒருவர். அது ஆகச் சிறந்ததொரு அறிவியல் மொழி என்பது அவருக்கு மறந்துபோனது.

"இந்தி தெரியாதென்றால் இந்தியாவிலிருந்து வெளியேறு" என்று மிரட்டுகிறார் இன்னொருவர்.

இவர்களில் ஒருவர் நடுவணமைச்சர். மற்றொருவர் மாநில அமைச்சர்.

இந்தியில் பேசும்படி, ஒரு கன்னடப் பெண் அவளின் தாய் மண்ணிலேயே(பெங்களூரு) இந்தி வெறியர்களால் மிரட்டப்படுகிறாள்[இவையெல்லாம் அண்மைக்கால நிகழ்வுகள் மட்டுமே. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய தலைமை அமைச்சரோ அமைதி காப்பதன் மூலம் அவர்களின் செயலுக்கு அங்கீகாரம் வழங்குகிறார்].

ஒரு தமிழனாக நாம் முன்வைக்கும் கேள்விகள், மேற்கண்ட அமைச்சர்களின் திமிர்ப் பேச்சுக்கு  எதிர்வினையாக அமையக்கூடும்.

***இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அல்லது அதை வைத்துப் பிழைப்பு நடத்தும் பிரமுகர்களே,

"இந்தி படி... படி" என்று ஓயாமல் கூச்சலிட்டுக்குஒண்டிருக்கும் நீங்கள் எங்களின் தாய்மொழியாகிய தமிழைப் படித்தீர்களா?[குறைந்தபட்சம் ஒரு 'தமிழ் மொழியாக்கக் கருவி'யையேனும் கைவசம் வைத்திருக்கிறீகளா?] இல்லையென்றால், எங்களளவில் அயல் மொழியான இந்தியைப் படிக்கச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?["வணக்கம்" சொல்வது, திருக்குறளிலிருந்தும் புறநானூற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுவது எல்லாம் ஏமாற்று வேலைகள்].

இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் கோடி கோடி கோடிக் கணக்கில் செலவிட்டிருக்கிறீர்கள்[நாடறிந்தது]. அதற்குச் சமமான தொகையை எங்களின் தமிழ் வளர்ச்சிக்குச் செலவிடுங்கள். உங்கள் இந்தியைவிடவும் பழைமையும் பல வளங்களும் நிறைந்த தமிழை இந்தியாவின் ஆட்சி(மற்ற மாநில மொழிகளும் இடம்பெறலாம்) மொழி ஆக்குங்கள். இவற்றைச் செய்து முடித்த பிறகு, "இந்தி படி" என்று எங்களிடம் நீங்கள் வேண்டுகோள் வைக்கலாம். நாங்களும் பரிசீலிப்போம். "வெளியேறு" என்று மிரட்டவெல்லாம் வேண்டாம். மிரட்டினால்.....

"நாங்கள் வெளியேறுவது தவிர்க்க இயலாதது என்றால், உங்களை முதலில் வெளியேற்றுவோம்" என்று நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும். அது நம் இரு தரப்பினருமே விரும்பத்தக்கதாக அமையாது.

"எங்கும் இந்தி, எதிலும் இந்தி" என்று கூச்சலிட்டுக்கொண்டே, தொடருந்துத் துறை[ரெயில்வே], அஞ்சலகங்கள், வங்கிகள் என்று அனைத்து நடுவணரசு அலுவலகங்களிலும் 90% இந்தியைத் திணித்துவிட்டீர்கள்[35 விழுக்காட்டினர் மட்டுமே பேசுகிற இந்தியைப் பெரும்பான்மையினர் பேசுகிற மொழி என்று சொல்லி இதைச் செய்து முடித்தீர்கள். ஆட்சியமைப்பதற்கு மட்டுமே 'பெரும்பான்மை-சிறுபான்மை' பார்ப்பது பொருந்தும். மொழி வளர்ப்பில் இது தவிர்க்கப்படுதல் வேண்டும்].

பொது நிறுவனங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல; அவை இந்த நாட்டின் பொதுச் சொத்து. இங்கெல்லாம் ஏற்கனவே திணிக்கப்பட்ட இந்தி அகற்றப்படுதல் வேண்டும்[அங்கிலம் போதும். இதனால் ஆங்கிலேயருக்கு நாம் மீண்டும் அடிமை ஆகிவிட வாய்ப்பே இல்லை. நமக்கென்று ஒரு பொது மொழி தேவை என்றால், நிபுணர்களின் உதவியுடன், சம அளவில் அனைத்து மாநில மொழிகளையும் ஒருங்கிணைத்து 'இணைப்பு மொழி' ஒன்றை உருவாக்குங்கள்].

அகற்றிய பிறகு, "இந்தி படி" என்று எங்களிடம் நீங்கள் கோரிக்கை வைக்கலாம். நாங்களும் அதைப் பரிசீலிப்போம்.

ஆக, மேற்குறிப்பிட்டவற்றைச் செய்து முடிக்காமல், இந்தி மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என்ற வெறியுடன் தொடர்ந்து செயல்படுவீர்களேயானால்.....

"சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட அவலத்தைத் அன்புகொண்டு நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்" என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

நன்றி!

==========================================================================