"அனைத்தையும் தோற்றுவித்தவர் என்று சொல்லப்படுகிற இவர் தோன்றியது எப்படி? எக்காலத்தும் இருந்துகொண்டே இருப்பவர் என்றால் அது எப்படிச் சாத்தியமாயிற்று?" என்றிவை மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் கேட்கப்பட்ட கேள்விகள். உரிய ஆதாரங்களுடன் இவற்றிற்குப் பதில் தந்தவர் எவருமில்லை.
"கடவுள் எப்படி இருப்பார்?" -கடவுளைப் புரிந்துகொள்ள ஆசைப்பட்டவர்கள் எழுப்பிய கேள்வி இது.
நேரடியாகப் பதில் தர இயலாத நிலையில், சுற்றிவளைத்துச் சொல்லப்பட்ட பதில், "சக்தியே கடவுள்" என்பது.
சக்தி[ஆற்றல்] என்பது பொருள்களின் இயக்கத்தால் அல்லது, அவை இணைவதால் வெளிப்படுகிற ஒன்று. அதை[சக்தி]க் கடவுள் ஆக்கினால், அவர் உருவாவதற்குப் பொருள்கள் தேவை என்றாகிறது. 'பொருள்களைப் படைத்தவர் கடவுள்' என்னும் கருதுகோளுக்கு இது முரணானது.
இதைப் போலவே, "அன்பே கடவுள்' என்று சொல்லி அன்புக்குள் கடவுளைத் திணித்தார்கள்.
அன்பு என்பது ஓர் உணர்ச்சி. அது புலன்களால் உணரப்படுகிற ஒன்று. எந்தவொரு புலனாலும் இன்றுவரை உணரப்படாத கடவுளை 'அன்பு' என்னும் உணர்வுக்குள் அடக்குவது அறிவுடைமை அல்ல.
"ஆசை, பாசம் போன்ற குணங்கள், வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாய் அமைந்தவை. இதே போல, அன்பு, கருணை, ஆராயும் அறிவு போன்றவை மனிதர்களுக்கு இயற்கையாய் வாய்த்தவையே.
கெட்ட குணங்களைத் தவிர்த்துவிட்டு, நல்லனவற்றைத் தேர்வு செய்து, "அன்பே கடவுள்; அவன் அருள் வடிவானவன்" என்றெல்லாம் சொல்வது, உரிய ஆதாரங்களுடம் கடவுளின் 'இருப்பை' விவரிக்க இயலாதவர்கள் மேற்கொள்ளும் 'சமாளிப்பு' ஆகும்.
"கடவுள் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்" என்கிறார்கள். இங்கும் அதே கேள்விதான். தூணுக்குள்ளும் துரும்புக்குள்ளும் அவரை ஏன் திணிக்கிறார்கள்?
"அவன் அணுவிலும் இருப்பான்" என்றார்கள்... என்கிறார்கள்.
"நம் உள்ளத்துக்குள்ளேயும் இருக்கிறான்; அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கிறான்" என்றிப்படி இந்தத் திணிப்பு வேலை தொடர்ந்தது. இதன் விளைவு.....
கல்லையும் மண்ணையும் உலோகங்களையும் கடவுள்களாக்கிக் கும்பிடும் மூடப்பழக்கம் வெகு வேகமாகப் பரவியது. விலங்குகள் பறவைகள் என்று ஐந்தறிவு உயிரினங்களுக்கும் 'கடவுள் அந்தஸ்து' வழங்கப்பட்டது.
இவற்றை வழிபடுவதும் தொடர்கிறது.
நம்மவர்கள் நிலை இதுவாக இருக்க, அயல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் கடவுளைத் திணிக்காமல், அவற்றின் தோற்றம் பற்றி நுணுகி நுணுகி ஆராய்ந்தார்கள்; இடைவிடாத ஆய்வுகளின் பலனாக அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை என்று கண்டறிந்தார்கள்.
அவ்வளவில் மன நிறைவு பெறாமல் அணுக்களைச் சிதைத்து ஆராய்ந்ததன் பலனாக, அவற்றிலிருந்து, 'கதிரியக்கம், அணு மின்சாரம்...' என்று மனித குலத்துக்குப் பயன்படும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள்.
அணுவுக்குள்ளே 'புரோட்டான்', 'நியூட்ரான்', 'எலக்ட்ரான்' என்று எதையெதையோ கண்டு பிடித்ததோடு, அவை குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றுக்குள் கடவுளைத் திணிக்கும் கூமுட்டைத்தனமான செயல்களை அவர்கள் செய்யவில்லை.
நம்மவர்களோ இந்தத் திணிப்பு வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்..
உலக அளவில், பன்னாட்டு மனிதர்களுக்குக் கேள்வி கேட்கத் தெரிந்திருக்கிறது.
ஏதோ ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், "இதனால் என்ன பயன்?" என்று கேட்கிறார்கள்.
உதாரணமாக, மின்சாரம் கண்டறியப்பட்டபோது, "இதனால் பயன் என்ன?" என்று கேட்டார்கள். விளையும் பயன்கள் கண்டுபிடிப்பாளர்களால் பட்டியலிடப்பட்டன.
கடவுளைக் கண்டுபிடித்ததாகச் சொன்னவர்களிடம், "அந்தக் கடவுளால் என்ன பயன்" என்று பக்தர்கள் எவரும் கேள்வி எழுப்பியதில்லை[பயம் காரணம்]. அவரை வழிபட்டதால் விளைந்த நன்மைகள் பற்றி விலாவாரியாக எந்தவொரு ஆன்மிகவாதியும் விளக்கிச் சொன்னதாகவோ, ஆதாரங்களுடன் நிரூபித்ததாகவோ தெரியவில்லை. தற்செயலான நல்ல நிகழ்வுகளையெல்லாம் அவரால்[கடவுளால்] நிகழ்ந்ததாகக் கதையளந்து கேட்பவர்களை முட்டாள்களாக ஆக்கிக்கினார்கள்... ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது கடவுள் பயத்தினால்தான் என்ற ஒரு தவறான நம்பிக்கையும் பரப்பப்படுகிறது.
நாம் மேலே குறிப்பிட்டது போல், அன்பு, கருணை, பாசம், உதவும் குணம் என்றிவை எல்லாம் மனிதர்களுக்கு இயற்கையாய் அமைந்தவை என்று நம்பலாம். ["இயற்கையாய் அமைவது எப்படி நிகழ்ந்தது என்பதை அறிந்து சொன்னவர் எவருமில்லை]. இவை கடவுளின் 'கருணைக் கொடைகள்' அல்ல.
ஆக, நாம் இங்கு சொல்ல நினைப்பது, காட்சிக்கு உள்ளாகும் எந்தவொரு படைப்பாயினும், அதை 'அதுவாகவே' அறிய முற்படுவதும், ஆராய்வதும் அறிவுடைமை ஆகும்; அவற்றுக்குள் கடவுளைத் திணிப்பது அறியாமையின்பாற்பட்டது.
==========================================================================***இது இன்னும் விரிவாக எழுதுதற்குரிய பதிவு. வாசிப்போர் உணர்வு சலித்தலுக்கு உள்ளாவர் என்றஞ்சித் தவிர்க்கப்பட்டது.