46 வயதான இவரை[படத்தில் இருப்பவர்]த் தாக்கிய 'புற்றுநோய்' இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. அதாவது, புற்றுநோய்ச் செல்கள் அவற்றின் முதன்மை இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவிய நிலை இது. இத்தகைய நிலையில் சிகிச்சையின் மூலம் நோயாளியைப் பெரும்பாலும் குணப்படுத்த முடியாது.
இவரைப் பரிசோதித்த ஒரு மும்பை மருத்துவர், "புற்றுநோய்க் கட்டிகள் மற்றும் நிணநீர்க் கணுக்கள் பரவிய நிலையில் காணப்படுவதால், இது கடைசிக் கட்டப் புற்றுநோயாக இருக்கலாம்" என்றார்.
மும்பையிலுள்ள பிரபல டாடா மெமோரியல் மருத்துவமனையின் (டிஎம்ஹெச்) டாக்டர் தேவயானி இவருக்குத் தேவையான சில பரிசோதனைகளைச் செய்தார். இவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் பயாப்ஸி உட்பட வேறு சில முக்கியமான சோதனைகளுக்குப் பிறகு, இவருக்குப் புற்றுநோய் இறுதிக் கட்டத்தில், அதாவது நான்காவது கட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2021 பிப்ரவரி முதல் இவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கீமோதெரபி மற்றும் டார்கெட்டட் தெரப்பி முதலான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.
ஒரு புற்று நோயாளி, மரணத்திற்கு முன்னரான எஞ்சிள்ள வாழ்நாள் பற்றி நினைத்துப் பார்த்து, மனம் கலங்கிப்போய் அழுது கண்ணீர் வடிக்கும் நேரம் இது. ஆனால், இவரின் மனதிடமோ வியக்கத்தக்கதாக இருந்தது. இவர் சொல்கிறார்.....
"இன்னும் சில வருடங்கள் நான் வாழ்வேன். அந்தச் சில வருட வாழ்க்கையில் என்னுடைய முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிவிடுவேன்.
இப்படி நினைப்பதால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இது 'மரணம்' மற்றும் 'நம்பிக்கை' ஆகியவற்றுக்கு இடையே உள்ள நிலை. நான் விரும்பினால், மரண பயத்தைப் பீதியாக மாற்றி என்னையும் என் குடும்பத்தையும் துன்பத்தில் ஆழ்த்தலாம்.
ஆனால், அச்சம் என்பதை அகராதியில் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துக்கொண்டு, என் வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றும் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன்.
புற்றுநோய்க் கவலையிலிருந்து விலகி இந்த நாட்களை நான் கோவாவில் கழிக்க நினைத்தேன்.
இதை மனைவியிடம் சொன்னேன். CT ஸ்கேன் செய்தபிறகு, மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையத்தை அடைந்தோம். சில மணி நேரம் கழித்து நாங்கள் கோவாவில் இருந்தோம். ஏன் தெரியுமா? எவ்வகையிலும் புற்றுநோய்ப் பயம் என்னை ஆட்கொள்ளவதை நான் விரும்பவில்லை.
சிகிச்சையின் பக்க விளைவுகளால் என் உடல் முழுவதும் எண்ணற்ற காயங்கள் உண்டாகியிருந்தன. அவற்றில் வலி இருக்கிறது. ஆனால் இந்த வலி என் மீது ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை.
மரணத்தின் நிதர்சனத்திலிருந்து தப்ப நினைப்பது சாத்தியமற்ற ஒன்று என்பது எனக்குத் தெரியும். நாம் பிறக்கும்போதே, இறப்பும் முடிவாகிவிட்டது. எது நிச்சயமோ அதைப் பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும்? இந்தப் பயத்தை மகிழ்ச்சியளிக்கும் இனிய தென்றலாய் மாற்றுவது கோவாவில் சாத்தியப்படும் என்றும் நம்பினேன்.
என் நம்பிக்கை பொய்க்கவில்லை.
நாங்கள் நான்கு இரவுகளைக் கோவாவில் இனிமையாகக் கழித்தோம். மருந்துகளைச் சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும் என்பதை மறக்கவில்லை. இதனாலெல்லாம் நோய் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல்போனது.
எல்லாக் கடற்கரைகளிலும் பொழுதைக் கழித்தோம்; கடலில் குளித்தோம்; இரவுகளின் பெரும்பகுதி கடற்கரையில் கழிந்தது. டிஸ்கோவிற்குச் சென்றோம்; நிறைய சாப்பிட்டோம்.
மும்பை திரும்பியதும் ஓ.பி.டியில் இருக்கும் டாக்டரிடம் என்ன பேசலாம் என்று சிரித்துக்கொண்டே திட்டமிட்டோம்.
கோவாவில் அரபிக்கடலின் நீல அலைகளுக்கு மேல் பாராசெயிலிங்(கடல் என்பதால் பாராசெயிலிங். மற்ற இடங்களில் பாராகிளைடிங் என்கிறோம்) செய்யச் சென்றுகொண்டிருந்தபோது, 'மேலே போகும்போது உங்கள் மூச்சு நின்றுவிடுமோ?' என்று என் மனைவி கவலைப்பட்டார்.
சிரித்துக்கொண்டே, "அப்படி மரணம் வந்தால், அதைவிடச் சிறந்த மரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் நான் இப்போது சாகப் போவதில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது" என்று நான் பதிலளித்தேன்.
நாங்கள் மகிழ்ச்சியுடன் 'பாராசெயிலிங்' செய்தோம்.
இப்போது நாங்கள் மலைப்பிரதேசங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை மரண அனுபவம் என்பது எனக்கு இல்லை. வாழ்ந்த அனுபவம் மட்டுமே உள்ளது. இனியும் நான் வாழப்போகும் கதையை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது உங்களுக்கு நான் சொல்ல நினைப்பது.....
"புற்றுநோய்க்கு ஆளான எவரொருவரும் என்னைப் போலவே வாழலாம் நண்பர்களே."
==========================================================================
உதவி: https://www.bbc.com/tamil/india-61246585[28 ஏப்ரல் 2022]