அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 27 ஏப்ரல், 2022

'பசவராஜ் பொம்மை'க்குப் 'பாடம்' கற்பித்த பசுமாடு!!!

'கர்னாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விஜயாப்புராவில் கொட்டகைகளில் மாடுகள் இருந்தன. அங்குச் சென்ற பசவராஜ் பொம்மை மாடுகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்துக் 'கோ பூஜை' செய்தார். அப்போது ஒரு மாடு திடீரென அருகில் இருந்த விவசாயியை முட்டித் தள்ளியது. மாடு முட்டியதில் அருகிலேயே இருந்த பசவராஜ் பொம்மையும் சற்றுத் தடுமாறினார். 

அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காவல்துறையினர் பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றனர்[பசவராஜ் பொம்மை, மாடுகளுக்குக் 'கோ பூஜை' செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் கடந்த தன் பிறந்த நாள் அன்று மாடுகளைத் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது].'

இது இன்று, 'தினத்தந்தி' சுடச் சுட வழங்கிய காலைச் செய்தி[https://www.dailythanthi.com/News/India/2022/04/27002412/First-Minister-Basavaraj-escapes-unscathed-after-being.vpf   -ஏப்ரல் 27,  2022 00:24 AM]

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்த நாளிதழ். 

நம் கேள்வி:

இந்தச் செய்தி வெறும் பரபரப்பை மட்டும்தான் ஏற்படுத்தியதா?

பசுவுக்குச் சிந்திக்கும் அறிவோ, 'கோமாதா' என்று கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றி வழிபடுதற்குரிய தகுதியோ பெற்றது அல்ல; 'பத்தோடு பதினொன்று' என்னும் அளவுக்குப் பிற உயிரினங்களைப் போலவே அதுவும் ஓர் ஐந்தறிவு ஜீவன்தான் என்னும் பகுத்தறிவுப் பாடத்தைக் கற்பிக்கவில்லையா?

முதல்வர்[கர்னாடகா] அவர்களே,

மக்களைப் பயனுள்ள வகையில் சிந்திக்கத் தூண்டும் பொறுப்பு,  மாநில முதலமைச்சரான உங்களுக்கு உண்டு. அவர்கள் முட்டாள்களாகவே இருந்துகொண்டு இருந்தால்தான் உங்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்றவும், அதைத் தக்கவைக்கவும் முடியும் என்று நம்புகிறீர்களா?

ஒரு விலங்கை வழிபடுவதால் என்ன நன்மை என்று ஒரு நாளும் நீங்கள் சிந்தித்ததே இல்லையா? தீமை மட்டுமே விளையக்கூடும் என்பதையாவது இன்று புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பது நம் நம்பிக்கை.

ஏதும் விசேடம் என்றால், உங்களின் சொந்தபந்தங்களுக்குக் 'கறி விருந்து' படைக்கத் தவறுவதில்லை. அந்த விருந்துகளுக்கு மூலாதாரமே ஆடுகளும் கோழிகளும்தான். அந்த இரண்டும்தான் பசு மாட்டைவிடவும் அதிகம் பயன் தருபவை. அவற்றை நீங்கள் 'மாதா பிதா' என்று எந்தவொரு பெயரிலும் கொண்டாடுவதில்லையே, ஏன்?

நீங்கள் உங்களின் குலதெய்வமாகக் கருதுகிற பசுமாட்டிடம், "ஓ கோமாதாவே, இன்று ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஒரு லிட்டர் பால் கொடு" என்று கோரிக்கை வைத்தால் அதை அது நிறைவேற்றுமா?

சோதனை முயற்சியாக இப்படியொரு கோரிக்கையை முன்வைப்பீர்களா முதலமைச்சர் அவர்களே?

'இந்தியா பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் வங்காளதேசத்தையும் பாகிஸ்தானைவிடவும் கீழே கிழே இடம்பெற்றுள்ளது' என்பது அண்மைக்காலப் புள்ளிவிவரம் தரும் தகவல்.

குரங்கு, நாய், பன்றி, பாம்பு, பசுமாடு என்று நீங்களும் உங்களைப் போன்ற இந்துத்துவாக்களும்  ஐந்தறிவு உயிரினங்களை வழிபடுவது தொடருமேயானால்.....

இந்தியா, வளரும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை அடைவது மட்டுமல்ல, 'வளரவே வளர வாய்ப்பில்லாத நாடுகள்' என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டால், அந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைக் கைப்பற்றும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமில்லை என்பதை அன்புகொண்டு புரிந்துகொள்ளுங்கள் முதல்வர் அவர்களே!

==========================================================================