புதன், 13 ஏப்ரல், 2022

'மூளையில் ELECTRODE CHIP'... மனிதர்களை 100% 'புனிதர்கள்' ஆக்குமா?

க்கவாத நோயாளி ஒருவரின் மூளையில் அறுவைச் சிகிச்சை மூலம் மிகச் சிறிய 'கம்ப்யூட்டர் சிப்' பொருத்தப்பட்டது.

கணினியிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. கட்டளைகளுக்கேற்ப மூளையில் பொருத்தப்பட்டிருந்த ELECTRODE CHIP செயல்படுவது தெரியவந்தது.

பக்கவாத நோயாளியின் கைகளை அசைக்குமாறு அதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆணைக்கிணங்க, நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டுக் கைகளை அசையச் செய்தது அந்தத் துக்கிளியூண்டு சிப்!

மாரடைப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்கு வலது கை செயல் இழந்தது. இவரின் மண்டை ஓட்டுக்குள் சிறிய ELECTRODE CHIP பொருத்தியதோடு, கையில் தோலுக்குள் 'இயங்கு சக்தி'யைப் பெறுவதற்காக மின்கலமும்[பேட்டரி] பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சையின் மூலம் பெண்ணின் கைகள் இயங்க ஆரம்பித்தன.

"இவை, இந்த ஆய்வு தொடங்கப்பட்ட நிலையிலான சிறு சிறு வெற்றிகள் மட்டுமே" என்கிறது, இந்த ஆய்வு முயற்சியில் ஈடுபட்ட 'மாசாசூசெட்ஸ் பயோடெக்' நிறுவனம்.

100 மின் முனைகளை[எலக்ட்ரோடுகள்]க் கொண்டுள்ள இந்தச் 'சிப்பு' குறித்த மேலும் பல ஆய்வுகளை வேறு பல நிறுவனங்களும் நிகழ்த்திகொண்டிருக்கின்றன.

ஆய்வுகளில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிகள் கிட்டுமாயின்.....

*முடமானவர்களை, 'சூப்பர் மேன்'களாக மாற்ற முடியும்.

*பேச இயலாதவர்களைப் பேசச் செய்வது சாத்தியப்படும்.

*குறைகளற்ற மனிதர்களின் அறிவு நுட்பத்தையும் செயலாற்றும் திறனையும்கூட மேம்படுத்த முடியும்.

*வியத்தகு அளவில் நினைவாற்றலை மேம்படுத்த இயலும்.

*மூளையின் சேமிக்கும் திறன் வெகுவாகக் கூடும்.

*பல மொழிகளைக் கற்பது, தொழில்நுட்ப அறிவை அதிகரிப்பது என்று பல சாதனைகள் நிகழ்த்த இந்தச் சிப்பு பயன்படும்.

*மனிதர்களிடம் உள்ள வேண்டாத குணங்களை இல்லாமல் செய்வதுகூட சாத்தியமாகக்கூடும்.

இப்படியாக, இதனால் மனிதர்கள் பெறும் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த ஆராய்ச்சியை, விஞ்ஞானி 'டிமோதி சர்ஜனர்', நரம்பியல் வல்லுனர் 'டாக்டர் பிலிப் கென்னடி', சிக்காக்கோ ஆராய்ச்சி நிலைய இயக்குநர் 'டாக்டர் ஜீவ்ரைமர்' போன்றவர்கள் முனைப்புடன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்களாம்.

எனினும், மண்டையில் 'சிப்' பொருத்திக்கொண்டவர்களில் சிலர் இறந்துபோனதால், பக்க விளைவுகளே இல்லாமல் ஆராய்ச்சியைத் தொடரும் முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது செய்தி.

"எல்லாம் சரி, 'அது' விசயத்தில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் மூளையில் 'சிப்' பொருத்துவார்களா என்று உங்களில் இளவட்டங்களும், நடுத்தரங்களும்[சில கிழங்களும்தான்!] உள்ளுக்குள் முணு முணுப்பதை அனுமானிக்க முடிகிறது.

கவலை வேண்டாம். விஞ்ஞானிகளும் பாலுணர்வுப் பலவீனங்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. 'அது'க்கான 'எலக்ட்ரோடு சிப்' பொருத்துவதற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது 100% உறுதி!

==========================================================================

உதவிய நூல்: 'கிரிஜா ஜின்னா'வின் 'செய்தித் தூறல்கள்'; நாயகி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை. முதல் பதிப்பு: 2009.