பக்கங்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2022

'உக்ரைன்' போருக்குப் பின் புடினுக்குப் புத்தி பேதலிக்கும்!?


'உக்ரைன்' போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது இப்போது எவருக்கும் தெரியாது.

போரில் தோற்றால்.....

ஒரு வல்லரசின் அதிபர் என்ற முறையில் ஒரு சின்னஞ் சிறிய நாட்டிடம் அடைந்த தோல்வியைப் 'புடின்' அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது.  அதன் விளைவு அவரின் மனநிலை பாதிக்கப்படலாம். 

போரில் வென்றால்.....

கட்டுக்கடங்காத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்.

கொஞ்சம் நாட்கள் கழித்துத்தான் இயல்பு நிலைக்குத் திரும்புவார்[இப்போது போரின் வெற்றியைப் பற்றி அல்லாது வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் அவர் இல்லை]. 

அந்நிலையில், தான் நிகழ்த்திய போரால் உக்ரைன் மக்கள் பட்ட விவரிப்புக்கு அடங்காத துன்பங்கள் பற்றி, ஊடகங்களில் வெளியான செய்திகளை நினைவுகூர்ந்து சிந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையும்.

அப்போது அவர் அறிய நேரும் துயரச் செய்திகள் கீழ்க் கண்பவையாகவும், இவை போன்றவையாகவும்  இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

*ரஷ்ய ராணுவத்தினரின் வன்முறையிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்கள்.

*நகரங்களிலும் கிராமங்களிலும் சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் மக்களின்   சடலங்கள் தெருக்களில் சிதைந்து சிதறிக் கிடந்தன.

"உக்ரைனில் இருந்து வரும் அகதிகளில் பெரும்பான்மையான பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டுப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 

*ரஷ்யப் படைவீரர்களின் தாக்குதலுக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தண்ணீர், உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

*உணவும் உறக்கமுமின்றி, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். மெத்தை மற்றும் போர்வைகளால் மூடப்பட்ட உருளைக்கிழங்கு அடுக்குகளில்கூட ஒளிந்திருந்து ரஷ்ய ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

*போர்க் கைதிகளில், பெண்கள் ஆண் குழுக்களின் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டுத் துன்புறுத்தல்களுக்கும் கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்... படுகிறார்கள்.

*UNICEFஇன் அவசரகாலத் திட்டங்களின் இயக்குனராக 31 ஆண்டுகள் பணியாற்றிய 'மானுவல் ஃபோன்டைன்', "பணிக் காலத்தில் மிகக் குறைந்த நேரத்தில் இவ்வளவு சேதம் ஏற்பட்டதை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன்" என்றார்[ஊடகப் பேட்டி].

அவர் மேலும் கூறுகையில், "3.2 மில்லியன்  குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் போதிய உணவு இல்லாத நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 1.4 மில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள். 4.6 மில்லியன் மக்கள் மாசடைந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

*ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கியேவுக்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் புகைப்படக் கலைஞர் 'மிகைல் பாலிஞ்சக்' எடுத்த புகைப்படம் உலகையே திகிலடையச் செய்தது. அதில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களின் உடல்கள் போர்வையின் கீழ் மூடப்பட்டிருந்தன. பெண்கள் நிர்வாணமாக இருந்தனர். அவர்களின் உடல்கள் ஓரளவு எரிக்கப்பட்டிருந்ததாகப் புகைப்படக்காரர் கூறினார்.

*பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷ்ய வீரர்களால் தாங்கள் அனுபவித்த அட்டூழியங்களைக் காவல்துறை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கூற முன்வந்துள்ளனர்.  

*கூட்டுப் பலாத்காரம், துப்பாக்கி முனையில் நடக்கும் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கற்பழிப்புகள் ஆகியவை பற்றிய தகவல்கள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்படுகின்றன.

*"எங்களின் அவசரகால ஹாட்லைனுக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து உதவி கோரிப் பல அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடல் ரீதியாக உதவுவது சாத்தியமில்லை. சண்டையின் காரணமாக எங்களால் அவர்களை அடைய முடியவில்லை” என்று லா ஸ்ட்ராடா உக்ரைனின் தலைவர் 'கேடரினா செரெபாகா' கூறினார், 

*'உக்ரேனிய நகரமான 'சபோரிஜியா'வில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் வருகிறார்கள். அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைப்பது தவறு. ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலால் விளைந்த பயங்கரங்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கும் பாவிகள் அவர்கள் என்பதே பொருந்தும்.'

*அவர்களின் முகங்களில் நீங்காத நிழலாய் ஒட்டிக்கொண்டிருந்தது பல நாள் அதிர்ச்சி.

*அந்தக் கும்பலில் ஒரு ஜோடி[மரியுபோலிலிருந்து தப்பிவந்தவர்கள்]யினர் சொல்கிறார்கள்.....

"நாங்கள் எங்களின் முழு வாழ்நாளைக் கழித்த எஙகளின் நகரம் இப்போது எலும்புக் கூடுகள் நிறைந்த பேய் நகரமாகக் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் சாம்பல் மேடுகள். கிட்டத்தட்ட எங்கள் வாழ்க்கையும் சாம்பலானது என்றால் அது மிகையல்ல."

*'ஸ்கை' நிருபர் மார்க் ஸ்டோணிடம் ஒரு நோயாளி சொன்னது:

"வெடிகுண்டு ஒன்று விழுந்ததில், எங்கள் வார்டில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் உடைந்தன. 

எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை; சென்ட்ரல் ஹீட்டிங் இல்லை; நோயாளிகள் படுத்துக்கொள்ளப் போதிய இடவசதி இல்லை. கடும் குளிர். போர்த்துக்கொள்ளக் கொஞ்சம் போர்வைகள் மட்டுமே இருந்தன.

இந்தக் குண்டுகள் மற்றும் பல்வேறு பீரங்கிகளை நினைத்து மக்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையின் ஜன்னல்களிலிருந்து பல மாடிக் கட்டிடங்கள் எரிவதை நாங்கள் பார்த்தோம்.

மக்கள் அழுவதை எங்களால் கேட்க முடிந்தது. அது கொடுமையாக இருந்தது. மேலும் அவர்கள் பயந்து ஒதுங்குவதற்காக மருத்துவமனைக்குக் குழந்தைகளுடன் வருகிறார்கள். 

வந்தவர்களில் பலரும் காயம் அடைந்தவர்கள். சிலருக்குக் கைகளோ கால்களோ இல்லை.

அது ஒரு பேய் நகரம். ஒன்பது மாடிக் கட்டிடங்களின் எலும்புக்கூடுகள்.

குண்டுகள் வெடித்தபோது, பலர் தாங்கள் பதுங்கியிருந்த கட்டடங்களின் அடித்தளங்களிலேயே நசுங்கிப் பிணம் ஆனார்கள். "

இவ்வாறான கொடூர நிகழ்வுகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் 'புடின்' அவர்கள், "நானா, ஏதுமறியாத அப்பாவி மக்கள் இத்தனைக் கொடூரமான துயரங்களை அனுபவிக்கக் காரணமானேன்" என்று வருந்துவார்; அவரின் மனசாட்சி வாட்டி வதைக்கும்; மனநிலை பாதிக்கப்பட நிறையவே  வாய்ப்பு உள்ளது!

மேலே இடம்பெற்ற துயர நிகழ்வுகள் கீழ்க்காணும் ஊடகச் செய்திகளிலிருந்து திரட்டிச் சுருக்கிப் பதிவு செய்யப்பட்டவை.

https://news.sky.com/story/ukraine-war-couple-who-survived-45-days-of-hell-in-war-torn-mariupol-tell-of-their-escape-12591999   

https://timesofmalta.com/articles/view/putin-honours-brigade-accused-of-ukraine-atrocities.949081

https://edition.cnn.com/2022/04/14/europe/ukraine-russia-atrocities-eyewitness-intl-cmd/index.html

https://www.aljazeera.com/news/2022/4/6/mariupol-mayor-accuses-russia-of-atrocities

https://www.theguardian.com/world/2022/apr/03/all-wars-are-like-this-used-as-a-weapon-of-war-in-ukraine

==========================================================================