கொஞ்சம் சுருக்கி, சற்றே மாற்றியமைக்கப்பட்ட[கருத்துப் பிறழ்வின்றி] அதன் வடிவம் உங்களின் வாசிப்புக்காக:
'வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில நிகழ்வுகள் நமது நம்பிக்கையைத் தகர்த்துவிடும் ஆற்றல் கொண்டவை.
இப்படிப்பட்ட பல அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம். அப்படிப்பட்ட அனுபவத்தை நானும் பெற்றிருக்கிறேன்.
அது நிகழ்ந்தது 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியில்.
இந்த நாள் என் நினைவை விட்டு அகலாத நாள்.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள்[சிலருக்குத் தீக்காயம்] வெளியே வர முடியாமல் வகுப்பறைகளுக்குள்ளேயே கருகி உருக்குலைந்துபோனார்களே, அந்த விபத்து அந்த நாளில்தான் நிகழ்ந்தது.
நீங்காத அந்த நினைவுதான் அவ்வப்போது என்னைப் பெரும் துயரத்துள் ஆழ்த்துகிறது.
ஒரு தாயின் இடத்தில் இருந்து அந்தக் குழந்தைகளின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்து அழுவது எனக்கு வழக்கமாகிப்போனது.
அழுகையைக் கட்டுப்படுத்தவும், அந்த நினைப்பிலிருந்து விடுபடவும் நான் படாதபாடு படுகிறேன்.
குழந்தைகளுக்கு உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் சரி, வலியால் அழுதாலும் சரி நாம் துடித்துப்போகிறோம்.
ஒரே இடத்தில் எரியும் நெருப்புக்குள் சிக்கிய அந்தக் குழந்தைகள் "ஐயோ" என்று அலறிக் கூக்குரல் எழுப்பிக் கதறி அழுத கொடூரக் காட்சி இன்றெல்லாமும் நம்மைக் கதறி அழவைக்கிறது.
காலிலோ, கையிலோ லேசாக அடிபட்டால்கூட "அம்மா... அம்மா..." என்றுதான் எந்தவொரு குழந்தையும் அழும். உடல்களைத் தீ நாக்குகள் சுவைத்துக்கொண்டிருந்தபோது அத்தனைக் குழந்தைகளும் "அம்மா.... அம்மா...." என்று எப்படிக் கதறித் துடித்து இருக்கும்? இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது.
94 குழந்தைகள் ஒன்றாக எரிந்து மடிந்தனவே! ஆசிரியர்கள், அல்லது பணியாளர்கள், அல்லது காப்பாற்ற முயன்றவர்கள் என்று எந்த ஒருவருக்கும் சிறு பாதிப்புக்கூட இல்லையே, அது எப்படி?
"எதுவும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அல்லா, ஏசு, விநாயகர், பெருமாள்... என்று எந்தவொரு கடவுளும் ஏன் காப்பாற்ற வரவில்லை?" என்ற கேள்விகள்தான் இன்றளவும் என் நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கின்றன.
கடவுள் இருக்கிறானா? இல்லையா? என்று காயம்பட்ட மனம் கேட்கிறது. விடை இல்லை.
நேற்றுவரை நூறு சதவீதமாக இருந்த கடவுள் நம்பிக்கை இன்று ஒரு சதவீதம்கூட இல்லை. முற்றிலுமாகக் கடவுள் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.
***இளகிய நெஞ்சத்தவரும், சீரிய சிந்தனையாளருமான 'குஷ்பு' அவர்களைப் போற்றுவோம்! அவரின் எதிர்காலம் நனி சிறந்திட வாழ்த்துவோம்!!
==========================================================================