வெள்ளி, 1 ஏப்ரல், 2022

குறையே இல்லாத கடவுளும் பல குற்றங்கள் புரிந்த மதவாதிகளும்!!

'குர்ஆன் அல்லது திருக்குர்ஆuoன் (அரபு: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுகச் சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு' என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.  (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D)

'பைபிளை யார் எழுதியதென்று நமக்குச் சரியாகத் தெரியாது என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஆனால், யார் எழுதியதென்று பைபிளிலேயே பல இடங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “நெகேமியாவின் வார்த்தைகள்,” ‘ஏசாயா பார்த்த தரிசனம், “யோவேல் என்பவருக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி” போன்ற வார்த்தைகளுடன்தான் பைபிளின் சில பகுதிகள் ஆரம்பமாகின்றன.—நெகேமியா 1:1; ஏசாயா 1:1; யோவேல் 1:1.'

'ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவின் பெயரில்தான் தாங்கள் எழுதியதாகவும், அவர்தான் தங்களை வழிநடத்தியதாகவும் அநேக பைபிள் எழுத்தார்கள் ஒத்துக்கொண்டார்கள். எபிரெய வேதாகமத்தை எழுதிய தீர்க்கதரிசிகள் 300-க்கும் அதிகமான தடவை “யெகோவா சொல்வது இதுதான்” என்று அறிவித்தார்கள். (ஆமோஸ் 1:3; மீகா 2:3; நாகூம் 1:12) மற்ற எழுத்தாளர்களுக்கு தேவதூதர்கள் மூலமாகக் கடவுளுடைய செய்தி கிடைத்தது.—சகரியா 1:7, 9.'

'இந்து மத வேதங்கள் யாராலும் எழுதப்படவில்லை. அது எனது என்று கூற எவரும் இல்லை. மனிதன் பல கோடி ஆண்டுகள் இறைவனைத் துருவித் துருவி ஆராய முற்பட்டு, வேதத்தைப் பிரபஞ்சத்தின் வடிவமாக முனிவர்களும், ரிஷிகளும் மகான்களும் கேட்டுணர்ந்தார்கள்'[https://temple.dinamalar.com/news_detail.php?id=84759].

ஆக, மேற்கண்ட மூன்று மதங்களும் கடவுள்களிடமிருந்து பெறப்பட்டவை என்பது உறுதியாகிறது.

மதவாதிகள் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள், சரி. மூன்று முன்னணி மதம் சார்ந்தவர்களும் இணைந்து, "நாங்கள் குறிப்பிடுவது ஒரே கடவுளைத்தான்" என்று ஒருபோதும் கூட்டறிக்கை வெளியிட்டதில்லை. அவரவர்க்கு அவரவர் கடவுளே உயர்ந்தவர் ஆவார்.

கடவுள் ஒருவரோ பலரோ, இது குறித்த வாதப் பிரதிவாதம் ஒருபுறம் இருக்கட்டும். கடவுளுக்குரிய தகுதிகள் பற்றியும் அவரால் படைக்கப்பட்ட மதங்களின் செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் சிந்திப்போம்.

'அனைத்தையும் படைத்தவன் அவன்; அனைத்து நற்குணங்களும் அமையப் பெற்றவன்; ஒப்புமைக்கு அப்பாற்பட்டவன். ஆதியும் அந்தமும் இல்லாதவன்' என்றிப்படிப் பல்லாற்றானும் மதவாதிகளால் சிறப்பிக்கப்படும் கடவுள் சின்னஞ்சிறு குறைகள்கூட இல்லாதவர்[அப்படி இருந்தால்தான் அவர் கடவுள்] என்பதை அறிய முடிகிறது.

இதன் மூலம், குறைபாடு ஏதும் இல்லாத கடவுளால் உருவாக்கப்பட்ட மதங்கள் சிறு சிறு குறைபாடுகளுக்குக்கூட இடம் தராதவையாக இருந்திட வேண்டும் என்பது உறுதியாகிறது.

இங்கே நாம் முன்வைக்கும் கேள்வி.....

இந்த மூன்று முன்னணி மதங்களிலும் குறைகளே இல்லையா? மதவாதிகள் குற்றம்புரிந்ததே இல்லையா?

உண்டு... உண்டு... உண்டு.

இவை மூன்றுமே பெண்ணினத்தை அடிமைப்படுத்திச் சொல்லொணாத கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளன[சதவீதம் மாறுபடலாம்].

மூன்றுமே மூடநம்பிக்கைகளை வளர்த்து, மக்களை மடையர்கள் ஆக்கியதோடு, பெரும் பெரும் மதக்கலவரங்களை உருவாக்கி, லட்சக்கணக்கான[கோடிக்கணக்கில் என்பதே சரி?] மனித உயிர்களைப் பலிகொண்டன[உயிர்ப்பலி இன்றளவும் தொடர் நிகழ்வாக உள்ளது].

மனித இனத்தின் நலனுக்காகப் பாடுபட்டதைக் காட்டிலும், கடவுளைப் போற்றுவதிலும், அவரின் புகழை நிலைநிறுத்துவதிலும் இதுகளால் வீணடிக்கப்பட்ட காலத்தின் அளவு மிக மிக மிக அதிகம்.

ஆக.....

கடவுள் உண்டென்று சொல்லுகிற மதங்கள் அனைத்துமே குறைபாடு உடையவைதான்; குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவைதான்.

கடவுளின் 'இருப்பு' உண்மையானதாக இருந்து, அவர் குறைகளே இல்லாதவராகவும் இருந்திருந்தால் மேற்கண்டவை போன்ற மதங்களை நிச்சயமாகப் படைத்திருக்கமாட்டார்.

மறுக்கவே இயலாததும் என்றென்றும் மாறாததுமான உண்மை இதுவாகும்!

==========================================================================

***எந்தவொரு தனிப்பட்ட மதத்தையும் கருத்தில்கொண்டு எழுதப்பட்டதல்ல இந்தப் பதிவு. மதங்கள் கடவுளால் அருளப்பட்டவை[உருவாக்கப்பட்டவை] என்பதற்கு மட்டுமே மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.

==========================================================================

***நினைவூட்டல்:

இப்போதெல்லாம் என் பதிவுகள் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படுவதில்லை. தவறுதலாக, அதன் இடுகைப் பட்டியலில் என் இடுகை[பதிவு] இடம்பெற்றிருப்பின், அதைக் 'கிளிக்' செய்யாமல், நேரடியாக இந்த[https://kadavulinkadavul.blogspot.com] என் தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.