திங்கள், 13 மே, 2024

ஆன்லைனில் [திரு]அண்ணாமலையாரின் திவ்வியத் தரிசனம்?

ண்ணாமலையார் கோயிலுக்குக்[திருவண்ணாமலை] குடும்பத்துடன் திடீர்ப் பயணம் மேற்கொண்டேன்; முதல் முறைப் பயணமும்கூட.

முட்டி மோதி, நெருக்கியடித்து வரிசைகளில் அண்ணாமலையாரைத் தரிசிக்க அங்குலம் அங்குலமாக நகரும் பக்தர்கள் கூட்டம் என் மனதை நெருடியது. அழுகிற, எதற்கோ அடம்பிடிக்கிற குழந்தைகளைச் சுமப்பவர்கள் வேறு. கணிசமான அளவில் சிறுசுகளும் பெருசுகளும்.


கண்ணில்பட்ட அத்தனை முகங்களுமே, “இத்தனைக் கூட்டமா?” என்று மலையளவுக்குக் கவலையைப் பிரதிபலித்தன. “எப்படியும் ஆண்டவனைத் தரிக்கத்தானே போகிறோம்” என்று அவர்கள் தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திக்கொள்வதையும் உணரமுடிந்தது.


பிரபலமான கோயில் என்றால் இந்தச் சிரமங்கள் தவிர்க்க இயலாதவைதான். ஆனாலும், புதிய நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இவற்றைப் பெருமளவில் குறைக்கலாமே என்று எண்ணினேன்.


அதிக அளவில் நோயாளிகளை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் பலரும், இணையம் வழியாக ‘முன் பதிவு செய்தல்[Appointment] முறையைக் கையாளுகிறார்களே, அதைப் பிரபலக் கோயில்[திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சபரிமலை போன்றவை] நிர்வாகங்கள் பின்பற்றினால் என்ன என்றொரு கேள்வி என்னுள் முகிழ்த்தது.


நோயின் தாக்கத்தைப் பொருத்து, உரிய அவகாசத்துடன் நோயாளிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்; நோயாளியும் பயனடைகிறார்[பெரும்பாலும்?]. 


கடவுளைத் தரிசிக்கவரும் பக்தரும் நோயாளிதான்; அதாவது மனநோயாளி. தான் நாடிவந்த சாமியைத் தரிசித்துச் செல்ல அவர் படும் தொல்லைகள் அளப்பரியன.


கோயில் நிர்வாகத்திடம், முன்கூட்டித் தரிசனத்திற்கான நேரத்தைப் பக்தர்கள் அறிந்துகொள்ளும் முறை[சந்திப்பு நேரம்>Appointment] பின்பற்றப்பட்டால், சிரமமின்றிச் அவர்கள் சாமியைத் தரிசித்துச் செல்வது சாத்தியப்படும்.


இம்முறை மூலம், ஒரு பக்தர் குறைந்தபட்சம் அரை நிமிடமாவது சாமியைத் தரிசித்து இன்புறலாம்.


தரிசனத்துக்கான நேரத்தை அதிகாலை முதல் இரவு பத்து மணிவரை என்று வரையறுத்தால் ஒரு நாளில் சில ஆயிரம் பேராவது[நடைமுறைப்படுத்தும்போது சரியான எண்ணிக்கை தெரியும்; குறைகளையும் சரி செய்யலாம்] பயனடைவார்கள்.


விசேட நாட்களில், முழு இரவும் பக்தர்களை அனுமதிக்கலாம்.


கோயிலிலும், ஊடகங்களிலும் உரிய முறையில் அறிவிப்புச் செய்வதன் மூலம் இந்த முறையைப் பக்தர்களுக்குப் பழக்கப்படுத்துவது எளிதானதுதான்.


முன்பதிவு செய்யாமல் வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோயில் மண்டபங்களில் காணொலித் திரைகளில் சாமியைக் கண்டு தரிசிக்க ஏற்பாடு செய்தால் பின்னர் அவர்களும் முன்பதிவு முறையைப் பின்பற்றுவார்கள்.


ஒரு தற்காலிகப் பக்தனின்[பச்சோந்தி] இந்தப் பரிந்துரையைப் பிரபலக் கோயில் நிர்வாகிகள் பரிசீலிப்பார்களா?

                                      *   *   *   *   *

[அடியேனின் நெற்றிதான்! ஹி... ஹி... ஹி!!!]
* * * * *

*****சற்றே குறைவான கருத்துப் பகிர்வுடன் பின்வரும் காணொலி[யூடியூப்] வெளியிடப்பட்டுள்ளது.


காணொலி: