திங்கள், 11 ஏப்ரல், 2022

பாரதியின் 'இந்த'க் கனவு நனவாவது எப்போது?!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் தமிழ்க் கவிஞன் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமையாகுமா?

அறிவுடைமை அல்ல என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும். 

உலகை அழிப்பதல்ல அவனுடைய நோக்கம், எந்தவொரு மனிதனும் பட்டினி கிடந்து சாகக் கூடாது என்பதே.

ஒரு தனிமனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்த் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதைப் பிறரால் தடுக்க இயலாது; ஆனால், பட்டினியால் சாவதைத் தடுக்க இயலும்.

அந்த உதவியை மனித குலம் செய்யத் தவறுமேயானால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் முடிவு. எனவேதான்.....

"ஜகத்தினை அழித்திடுவோம்" என்று கொந்தளித்துக் குமுறினான்..

அந்தப் பாரதி இன்று இல்லை. 

ஆனாலும், அவன் விட்டுச் சென்ற அந்த அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருப்பதால், புதிய புதிய பாரதிகள் தோன்றுவார்கள்; பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்" என்று முழங்குவார்கள்.

அந்த முழக்கம் உலகிலுள்ள அத்தனை மனித மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இனவெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறி உணர்வுகள் அழிந்தொழிய மனித நேயம் மட்டுமே செழித்து வளரும். அதன் விளைவாக.....

இன்னும் சில நூறு ஆண்டுகளில் என்றில்லாவிட்டாலும், ஓர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தேனும், உண்ண உணவில்லை என்று சொல்லி எவரும் வருந்தும் நிலை முற்றிலுமாய் இல்லாமல் போகும் என்று உறுதிபடச் சொல்லலாம்!

https://kadavulinkadavul.blogspot.com/2022/04/blog-post_11.html

==========================================================================