ஞாயிறு, 22 ஜனவரி, 2023

புனித கங்கையும் புடலங்காயும்!!!

‘உத்தரப்பிரதேச பிரயாக்ராஜில் வழக்கம்போல இந்த ஆண்டும், ‘மவுனி’[?]அமாவாசை நாளில்[நள்ளிரவு 12 மணி > மதியம் 12 மணி] நடத்தப்பட்ட ‘மகாமேளா’வில் மட்டும் ஒன்றரைக் கோடி[1,500,0000]பக்த சிரோமணிகள் புனித நீராடினார்கள்’ என்பது உலக அளவிலான அனைத்துப் பக்தர்களையும் பரவசம் கொள்ளச் செய்யும் செய்தி[தினத்தந்தி, 22.01.2023]]யாகும்.

கணக்குவழக்கில்லாமல் அழுகிய பிணங்களும் அசுத்தச் சாக்கடை நீரும் நாளும் கலந்துகொண்டிருக்கிற ஆற்று நீர் புனிதமானதா?

புனித நீராடக் கங்கை, திரிவேணி சங்கமம், காவிரி போன்ற ஆறுகளில் கோடிக்கணக்கில் குவியும் மூடர்களின் மண்டையில் இந்த உண்மையை உணரவைக்க எந்தவொரு நாதியும் இல்லை.

ஆண்டவன் அணுவிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறார்கள். அவ்வாறாயின், அவன் படைத்த அத்தனைப் பொருள்களுமே புனிதமானவைதானே?  ஓடும்  ஆற்று நீரை மட்டும் பக்தி ஞானம் போதிப்போர் ‘புனிதம்’ ஆக்கியது ஏன்? 

மக்கள் மூடர்களாகவே இருந்தால்தான் கடவுளுக்கு இணையான அந்தஸ்துடன் அவர்களால் சொகுசு வாழ்க்கை நடத்த முடியும் என்பதே காரணம்.

பொதுமக்கள் எப்போதும் முட்டாள்களாகவே இருந்தால்தான் தேர்தல்களில் வாக்குகளை அள்ள முடியும் என்பது  ஆட்சியாளர்களின் கணிப்பு.

இந்த இரு சாராரும் மக்கள் திருந்தி வாழ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

5000 போலீசார் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு காவல்துறை அதிகாரி தந்த தகவல்.

புனித நீராடிய அத்தனை பேரும்[திருடர்கள், பெண்களைச் சீண்டுபவர்கள் உட்பட] புனிதர்களாகவும், பரமயோக்கியர்களாகவும் ஆகிவிடுவார்களே, அப்புறம் எதற்காக அங்கே போலீஸ் பாதுகாப்பு?

யாரெல்லாமோ எப்படியெல்லாமோ நம்மை முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.

நம்மை வேதனைக்குள்ளாக்கும் கசப்பானதொரு உண்மை என்னவென்றால்.....

புண்ணியம் சேரும் என்று நம்பிக் கங்கையிலும் திரிவேணி சங்கமத்திலும் குவிந்த பக்திப் பித்தர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடி.

மனித நேயம் போற்றலாம் என்றோ, பகுத்தறிவு வளர்க்கலாம் என்றோ பரப்புரைக் கூட்டம் நடத்த அழைப்புவிடுத்தால் வந்து கூடுவோர் எண்ணிக்கை ஒரு நூறுகூடத் தேறுவதில்லை.

இந்த நாடு இப்போதைக்கு உருப்படாது முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறாது.

இது 100% உறுதி!

===================================================================================