சனி, 7 ஜனவரி, 2023

அத்துமீறும் ஆளுநருக்குச் சில சத்தான ஆலோசனைகள்!!!

“இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும்போது அதற்குள் இருக்கும் ‘தமிழ்நாடு’ ஒரு நாடாக இருக்க முடியாது. தமிழகம் என்று சொல்வதே சரி. அப்படிச் சொன்னால்தான் தமிழகம் பாரதத்தின் அடையாளத்தைப் பெறும்” என்று சொல்லியிருக்கிறார் நம் மதிப்பிற்கும் மிகு மரியாதைக்கும் உரிய ஆளுநர் ரவி அவர்கள். இப்படிச் சொன்னதன் மூலம், தமிழ்நாட்டை ஆள்பவன்[ஆளுநர்] நானே என்பதையும் உறைக்கும் வகையில் சொல்லி உறங்கும் தமிழனுக்கு விழிப்பூட்ட முயன்றிருக்கிறார்[https://www.bhoomitoday.com/not-tamil-nadu-tamilagam-is-correct-word-says-govenrnor-rn-ravi/].

உத்தரப்பிர‘தேசம்’, மத்தியப்பிர‘தேசம்’, மஹா’ராஷ்ட்ரா’[பெரிய தேசம்], ஆந்திரப்பிரதேசம் எல்லாம் இருக்கும்போது தமிழ்த்‘தேசம்’[நாடு] இருக்கக்கூடாதா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநரை மூச்சுத் திணறச் செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழினப் பற்றாளர் பலரும்.

‘தமிழகம்’ என்பதே சரி என்கிறார் இந்தப் பத்தரைமாற்று ‘இந்தி’யர்.

திருவாய் மலர்வதற்கு முன் ’தமிழகம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரிந்துகொண்டாரா இவர்?[இங்குள்ள அண்ணாமலையார், வானதி அம்மையார், பொன்னார், எச்சி ராஜார் போன்ற ‘பரிசுத்த’ இந்தியர்களைக் கேட்டிருக்கலாம். அவர்களுக்கும் தெரியாது என்பது வேறு விசயம்].

'அகம்’ என்னும் சொல், மனம், மனை[வீடு], இடம் என்று பல பொருள்களை[அர்த்தம்] உள்ளடக்கியது[https://ta.wiktionary.org/s/guo].

’தமிழ்+அகம்’... தமிழ் மொழி வழங்கும் இடம் என்றும், தமிழர் வாழும் இடம் என்றும், தமிழர் ஆளும் இடம் என்றும் கொள்ளுதல் வேண்டும்.

தமிழர் வாழும்/ஆளும் இடம்தான் தமிழகம், அதாவது நீங்கள் வெறுக்கும் ‘தமிழ்நாடு’.

ஆளுநப் பெருந்தகை அவர்களே,

தமிழ்நாடு என்னும் மாநிலத்தைத் தமிழகம் என்று சொல்லலாம் என்று நீங்கள் பேசியிருப்பது தவறு என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். எனவே.....

“தமிழ்நாடு என்று மட்டுமல்ல, தமிழகம் என்றும் சொல்லக்கூடாது” என்று உடனடியாக அறிவித்துவிடுங்கள்.

அறிவிப்பதோடு இந்த மாநிலத்திற்கு, தமிழ் என்னும் சொல்லோ, தமிழர் என்னும் சொல்லோ இடம் பெறாத வகையில் வேறு ஒரு சொல்லைக் கண்டுபிடித்து, இந்த மாநிலத்தின்[தமிழ்நாடு] பெயரையே மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த மாநிலத்தை ஆளுபவர்[ஆளுநர்] என்ற வகையில் உங்களின் இந்த முடிவை நடுவணரசிடம் எடுத்தோதி, அவசர ஆணை[அவசரச் சட்டம்] பிறப்பிக்கச் செய்யுங்கள்.

இதைவிடவும், இயலுமாயின்.....

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் இப்போதைய பெயர்களை நீக்கிவிட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுக்கச் சொல்லுங்கள்[‘இந்திய மாநிலம் 1’, மாநிலம் 2... 3...4...5 என்றிப்படி.

இது, அவரவர் தாய்மொழிப் பற்றையும், இனப்பற்றையும் முற்றிலுமாய் இழந்து, “நான் ’இந்தி’யன்” என்னும் ஒத்த உணர்வுடன் வாழ்ந்திட வழிவகுக்கும்.

செய்வீர்களா மேதகு, திருமிகு, சீர்மிகு ஆளுநர் அவர்களே?
=========================================================================================