நம் பிரதமர் 'நரேந்திர மோடி’ அவர்கள் நம் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்; ஆத்திகர், நாத்திகர், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்று அனைத்துக் குடிமக்களாலும் மதிக்கப்படுபவரும்கூட.
பிரதமர் ஆவது என்பது அத்தனை எளிதல்ல; மக்களின் மனங்களைப் படிக்கும் உளவியல் அறிந்த அறிஞர்களுக்கே அது சாத்தியம்.
நாட்டு நடப்பை மட்டுமல்லாது உலக நடப்பையும் அறிந்து செயல்பட வல்லவராகவும் அவர் இருத்தல் மிக அவசியம். அதற்குப் பரந்த அனுபவ அறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் அவசியத் தேவைகள் ஆகும்.
இத்தனைத் தகுதிகளையும் பெற்றவர் நம் பிரதமர் மோடி என்பது நம் நம்பிக்கை.
இவர் ஆன்மிகவாதியும்கூட.
இன்னொரு ஆன்மிகவாதியைச் சந்திக்க நேரிடும்போது, அவர் உண்மையான ஆன்மிகவாதியா அல்லது போலியா என்பதைக் கண்டறியும் கூர்த்த மதியும் வாய்க்கப்பெற்றவர் இவர் என்பது நம் எண்ணம்.
‘ஈஷா’ ஆசிரம[?] உரிமையாளர் ஜக்கி வாசுதேவ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ‘ஆதியோகி’ சிலையை நம் பிரதமர் 2017ஆம் ஆண்டில் திறந்துவைத்தார் என்பது பலரும் அறிந்த நிகழ்வு ஆகும்.
அங்கு இடம்பெற்ற வேறு சில நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்துகொண்டார்.
தியான லிங்கத்தை இவர் வழிபட்டது அவற்றில் ஒன்று.
அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவராகக் கருதப்படும் பிரதமர், பிரதமர் என்ற முறையில் இம்மாதிரி மதச் சார்புள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பதே நம் கருத்து.
ஆயினும், இவர்[நம் பிரதமர்] அதீத இந்துமதப் பற்றாளர் என்பதால் இதிலிருந்து இவருக்கு [விருப்பம் இல்லாமலே] விதிவிலக்கு அளிக்கலாம்.
ஜக்கியுடன் இணைந்து இவர் பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார்[அனைத்தும் ஊடகங்களில் வெளியாயின]. இதையும்கூட நம்மால் அலட்சியப்படுத்திட இயலும். ஆனால்.....
கற்கச் செல்வோரின் அறிவை, ‘யோகப் பயிற்சி’ என்னும் பெயரில் முடமாக்குதல்; தன்னைத்தானே ‘சத்குரு’ என்றுசொல்லிக்கொண்டு நாடி வருவோரை நம்பவைத்துச் சொத்து சேர்த்தல்; பெண்களைத் தன்வயப்படுத்தல்; கொலை செய்து மூடி மறைத்தல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்[ஆதாரம்: ஊடகச் செய்திகள்&காணொலிகள்] ஜக்கியுடன் இவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது விரும்பத்தகாதது. இதையும் பெரிதுபடுத்துவது நம் நோக்கமல்ல. எனினும்.....
ஜக்கி என்னும் நபர் ஆன்மிகம் போதிப்பதுபோல் பாவனை செய்ய, அவர் முன்னால் கைகட்டிய கோலத்தில் பிரதமர் நரேந்திர மோடி காட்சி தருவதை நம்மால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை.
இந்த நாட்டின் உண்மைக் குடிமகன் என்றவகையிலும், பிரதமர் மோடி மீது அளப்பரிய மதிப்புக்கொண்டவன் என்ற முறையிலும், இந்தவொரு புகைப்படத்தை அனைத்து ஊடகப் பதிவுகளிலிருந்தும், இணையத் தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கும்படி பிரதமர் உத்தரவிடுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.
கோரிக்கை நம் பிரதமரால் ஏற்கப்படும் என்பது நம் நம்பிக்கை.
===================================================================================
*** 2017இல் எழுத நினைத்த பதிவு இது. சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.