கடந்த 20 ஆண்டுகளாக அனைத்துச் சமய மக்களிடமும் நட்புடன் பழகி வருவதுடன், மத ஒற்றுமை, கல்வியறிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்; கோயம்புத்தூர் பகுதியில் உருவான பதட்டமான சூழ்நிலைகளின்போதெல்லாம், காவல்துறையினருடன் இணைந்து அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்.
கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத வேறுபாடின்றிக் கல்வி நிதி உதவி வழங்கிவருகிற இவர், மனிதநேயம், மத ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படும் மத நல்லிணக்க விழாக்களில் கலந்துகொண்டு, இந்து, கிறித்துவ மதக் குருக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.
மேலும், கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார்க்குண்டு வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 03.11.2022 அன்று, திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்கள் அனைத்து சுன்னத் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளுடன் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று கோவில் நிர்வாகிகள் & அலுவலர்களைச் சந்தித்து, அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், கோயம்புத்தூர் நகரில் இந்து & முஸ்லீம் சமூகத்தினரிடையேயான சகோதரத்துவம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்.
மற்ற மதத்தவர்கள் செய்யத் துணியாத அல்லது, செய்யத் தயங்குகிற அரியதோர் நற்செயல் இதுவாகும்.
மனிதநேயம் போற்றி, எந்தவொரு சூழலிலும் மதக்கலவரங்கள் மூளாமல் தடுப்பதற்கு அனைத்து ஊர்களுக்கும் இனயதுல்லாக்கள் தேவை.
அவர்கள் எம்மதம் சார்ந்தவராயினும் அவர்களே உண்மையான மனிதர்கள் ஆவார்கள்.
=================================================================================