அசிம் ஹுசைன் என்னும் வர்த்தகர், பத்மாவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லியில் இருந்து மொராதாபாத்துக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்[வியாழன், 12.01.2023], “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பாததற்காக இந்துத்துவ வெறியர்கள்[ஸ்ரீராம் சேனா?] சிலர் இவரைத் தாக்கி நிர்வாணப்படுத்தியிருக்கிறார்கள்[ANI].
நிர்வாணப்படுத்தியதோடு, தாடியைப் பிடித்து இழுத்து, ”நீ திருடன்” என்று அவருக்குத் திருட்டுப் பட்டம் சூட்டியிருக்கிறார்கள்; “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
மயக்கம் வரும்வரை அவரைப் பெல்ட்டால் அடித்திருக்கிறார்கள்.
ரயில் ‘மொராதாபாத்’ வந்தபோது, அது நடைமேடையை அடைவதற்கு முன்பே அவரை வெளியே தூக்கி வீசியுள்ளார்கள்.
ரயிலில் நிறையப் பேர் இருந்தனர், இருப்பினும் யாரும் அவரைப் பாதுகாக்க முன்வரவில்லை. ரயில் மொராதாபாத் நிலையம் அருகே வந்தபோது, ரயில் நடைமேடையை அடைவதற்கு முன்பே அவரைத் தாக்கிய குண்டர்கள் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தனர்[ஒற்றை மனிதரை அடித்துத் தூக்கி எறிந்திருக்கிறார்கள் அயோக்கியர்கள்].
எப்படியோ உயிர்பிழைத்து அறிமுகமானவர்களின் உதவியுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார் அசிம் ஹுசைன்.
யாரோ ஒரு மனிதாபிமானி இந்த அவல நிகழ்வை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார். பெரும் எண்ணிக்கையிலானவர்களால் பார்க்கப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது இந்தக் காணொலி[தேடி எடுத்துப் பதிவு செய்வது சாத்தியப்படவில்லை].
வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்த இஸ்லாமியரோ பயம் காரணமாகக் காவல் நிலையத்தில் புகார்கூட அளிக்கவில்லை. ஒரு பெண் புகார் செய்திருக்கிறார்.
குற்றவாளிகளில் இருவரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள் என்பது பின்னர் வெளியான செய்தி[அவர்கள் தண்டிக்கப்படுவார்களா?].
இம்மாதிரி அட்டூழியங்களைச் செய்வதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன?
இங்குள்ள அத்தனை இஸ்லாமியரையும் இந்துக்களாக மதமாற்றம் செய்ய நினைக்கிறார்களா?
அது நடைமுறை சாத்தியமில்லை.
அது சாத்தியம் இல்லாதபோது, அனைத்து இஸ்லாமியரையும் இந்திய நாட்டைவிட்டே விரட்டுவது இவர்களின் நோக்கமா?
ஒரு காலக்கட்டத்தில் இவர்களின் இந்த நோக்கம் நிறைவேறிவிட்டால் அப்புறம் இவர்களின் செயல்பாடு என்னவாக இருக்கும்?
“இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்கமாட்டா” என்பார்கள். அதுபோல, இஸ்லாமியரை அடித்துப் பழக்கப்பட்ட இவர்கள், கண்ட கண்ட இடங்களில், நெற்றியில் பட்டை நாமம் போடாதவர்களையெல்லாம் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்கச் சொல்வார்கள். சொல்லாதவர்களையெல்லாம் அடித்து உதைத்து நிர்வாணம் ஆக்குவார்கள்.
மொழி, இனம் என்னும் அடையாளங்களை எல்லாம் அழித்துவிட்டு அனைத்து இந்தியர்களுமே இந்து ஆக வேண்டும் என்பார்கள்.
எதிர்ப்பவர்களுக்கெல்லாம் அடியும் உதையும் நிர்வாணம் ஆக்கப்படுதலும் பரிசாகக் கிடைக்கும்.
இவர்களின் இந்தக் கொலைபாதகச் செயல் தொடருமேயானால், பிழைப்புக்காக இஸ்லாம் நாடுகளுக்குச் சென்றவர்கள் அடி&உதை வாங்கிக்கொண்டு இங்கே ஓடிவருவார்கள் என்பது 100% உறுதி.
இந்தக் குண்டர்கள் இஸ்லாமிய நாடுகளில் ஒரு இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுத்திருந்தால், அப்போதே கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.
மேற்கண்ட இந்தவொரு நிகழ்வு மட்டுமல்ல, இம்மாதிரியான அட்டூழியங்கள் வேறு வேறு வடிவங்களில் இந்த நாட்டில் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன[இஸ்லாமியர்கள் தவறு செய்தால் அவர்களைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் தவறு என்பது நம் வாதமல்ல].
இந்தக் குண்டர்களைக் கட்டுப்படுத்துவது, அல்லது இம்மாதிரி அடாவடித்தனங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்துவது நடுவண் ஆட்சியாளர்களின் கடமையாகும்.
அவர்கள் இனியேனும் தங்களுக்குரிய கடமையைச் சரிவரச் செய்வார்களா, அல்லது கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா?
காலம் பதில் சொல்லும்!
===================================================================