செவ்வாய், 10 ஜனவரி, 2023

பட்டும் திருந்தாத இவர்கள் பாவிகளா, அப்பாவிகளா?!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது மலையோர நகரமான ஜோஷிமத். இதை ஆன்மிக நகரம் என்கிறார்கள். இந்த நகரம் இப்போது பூமிக்குள் புதைந்துகொண்டே இருக்கிறது.


600க்கும் மேற்பட்ட வீடுகளும் சாலைகளும் புதைந்தவாறு உள்ளன.

இந்த நகரில் 3000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளைக் காலி செய்துகொண்டு இரவு முழுவதும் கடும் குளிரில் மைதானங்களில் தங்கியுள்ளனர்; பல குடும்பங்கள் வெளியேறியுள்ளன.

இந்த நகரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள பகவதி கோயில் சேதம் அடைந்துவிட்டது. லட்சுமி நாராயணர் கோயிலிலும் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.  சங்கராச்சாரிய மாதவ் ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திலேயும் விரிசல்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,

50 ஆண்டுகளுக்கு முன்பே நிலவியல் நிபுணர்கள் ஜோஷிமத் நகரில் இப்படியொரு பேரழிவு நிகழும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அழிவு நேரப்போவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், நகரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் உத்தரகாண்ட் அரசு முழுமூச்சுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மக்களும் அரசுக்குத் தங்களால் இயன்றவரை ஒத்துழைப்பு நல்கியிருக்க வேண்டும்.

அழிவு தடுக்கப்படுவது சாத்தியமே இல்லை என்று நிபுணர்கள் சொல்லியிருந்தால்[இது குறித்த ஆராய்ச்சியில் அரசு இவர்களை முழுமையாக ஈடுபடுத்தியிருக்க வேண்டும்], மக்கள் நகரத்தைக் காலிசெய்துவிட்டு வேறு பாதுகாப்பான இடத்தைக் கண்டறிந்து வாழ்விடத்தைக் கட்டமைத்திருக்க வேண்டும்.

செய்யவில்லை. காரணம்.....

அவர்கள் வாழ்ந்தது ஆன்மிக நகரம் அல்லவா? இப்போது உடைந்து சிதைந்த சாமிகளும், உடைந்துகொண்டிருக்கும் சாமிகளும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்.

இப்போது சங்கராச்சாரியார் கவலைப்படுகிறாராம்[ஜோசிமத் மக்களுக்காக அல்ல, சிவலிங்க வடிவிலிருந்த பகவானுக்காக]; பண்டிதர்கள் கவலைப்படுகிறார்களாம்; இவர்களோடு சேர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களும் கவலைப்படுகிறார்களாம்.

படட்டும். போதும் போதும் என்னும் அளவுக்குப் படட்டும்[வெறும் வாய் வார்த்தைகள்தான்]. கற்றுத் தேர்ந்த நிலவியல் நிபுணர்களை நம்பாமல் வெறும் கற்பனைக் கடவுள்களை நம்பிய இவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!

=========================================================================

https://tamil.oneindia.com/news/india/joshimath-is-sinking-there-is-a-crack-in-shivalinga-ahead-of-landslide/articlecontent-pf842144-493401.html