புதன், 11 ஜனவரி, 2023

தமிழ்நாட்டில் வெகு விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?!?!?!


இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் சூழல், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியைக் கலைத்துவிட[வெகு விரைவில்] மேலிடம் முடிவெடுத்துள்ளதோ என்று எண்ண வைக்கிறது.

இதற்கானதொரு சூழலை உருவாக்கவே ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டரோ என்னும் சந்தேகமும் எழுகிறது.

உளவுத்துறையில் வேலை பார்த்த ரவி அவர்களுக்குத் தமிழ் மொழி, தமிழ் இனம், திராவிட மாடல் பற்றியெல்லாம் அரிவரிகூடத் தெரியாது என்னும் நிலையில், அவருடை பேச்சுகளும் செயல்களும் மேற்கண்ட சந்தேகத்துக்குக் காரணமாக உள்ளன.

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; “தமிழ்நாடு அல்ல தமிழகம்தான்” என்று பேசி, தமிழ் இன உணவாளர்களைச் சீண்டுவது; அண்ணா, அம்பேத்கார், பெரியார், கலைஞர் பெயர்களை உச்சரிக்காமல் உதாசீனப்படுத்திக் கொதிப்பேற்றுவது என்றிவையெல்லாம், ஆளுநரை எதிர்ப்பது என்னும் கட்டத்தையும் கடந்து நடுவணரசை எதிர்த்துத் தமிழர்களைப் போராட வைப்பதற்கான முன்னெடுப்புகளோ என்று அது நம்பத் தூண்டுகிறது.

போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தீவிரமடைந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவது தமிழ்நாடு அரசின் கடமை.

இந்த அரசு அதைச் செய்யத் தவறினால்.....

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று அறிவித்து, இப்போதுள்ள ஸ்டாலின் அவர்களின் ஆட்சியைக் கலைத்துவிட்டுக் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தலாம்.

அடுத்த ஆறு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் தேர்தலில், பண பலத்தையும், அதிகார பலத்தையும், இங்குள்ள அடிமைகளின் சேவகத்தையும் பயன்படுத்தித் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றலாம்; இங்குள்ளவர்களின் அதீதத் தமிழ்மொழிப் பற்றையும், அதி தீவிரத் தமிழின உணர்வையும்  காலப்போக்கில் நலிவடையச் செய்யலாம்.

ஆளுநர் ரவி, கலவரத்துக்கு வித்திட வந்தவர் மட்டுமல்ல, மேலிடம் சொல்லிக்கொடுக்கும் வாசகங்களை ஒன்றுவிடாமல்  திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளையோ என்று உள்மனம் எழுப்பும் சந்தேகத்தைத் தவிர்ப்பது அத்தனை எளிதல்ல!

===================================================================================