அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 12 ஜனவரி, 2023

ஒரு முறை மட்டும் ஓடிப்போனவள்!!![‘சுடு’கதை]

அன்று இரவு, உணவு உண்டு சிறிது நேரம் கழித்துப் உறங்கச் சென்றான் சாத்தையா. 

மனைவி மதியழகியின் வருகைக்குக் காத்திருந்தான்.

இரவு உணவுக்குப் பின்னரான அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வந்தாள் மதியழகி.

அவள் படுக்கையில் அமர்ந்தபோது, “ஏண்டி இன்னிக்கி அம்மாகிட்டே பிரச்சினை பண்ணினாயா?” என்ற சாத்தையாவின் கேள்வி அவளைத் திடுக்கிடச் செய்யவில்லை. காரணம், அன்று காலை நடந்த அந்த நிகழ்ச்சி அவன் மூலம் புதுப்பிக்கப்படும் என்பது அவள் எதிர்பார்த்ததுதான்.

சொன்னாள்: “அவங்க சாப்பிடும்போது, சோத்துக்கு நான் ரசம் ஊதினப்போ கை தவறி ரசக்குண்டா சாப்பாட்டுத் தட்டில் விழுந்திடுச்சி. ரொம்பத்தான் உனக்குத் திமிரு, எகத்தாளம்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாங்க. மரியாதையாப் பேசுங்கன்னு சொன்னேன். ஓடுகாலி நீ. உனக்கென்னடி மரியாதைன்னு எளக்காரமா கேட்டாங்க. இதுக்கு முந்தியும் எத்தனையோ தடவை இப்படி நடந்துகிட்டிருக்காங்க. இன்னிக்கி என்னால பொறுத்துக்க முடியல. ‘ஓடிப் போகாதவள் எல்லாம் உத்தமியா’ன்னு கேட்டேன். நான் கேட்டதில் என்ன தப்பு?” 

“என்ன தப்புன்னு கேட்கிறியா? நீதான் ஓடுகாலியாச்சே. நம்ம கல்யாணத்துக்கு முந்தியே ஒருத்தனோடு ஓடிப்போனவ நீ. அதை அம்மா சொன்னா உனக்கு ஏன் ரோஷம் பொத்துகிட்டு வருது?” என்றான் சாத்தையா.

“நான் ஒருத்தனோடு ஓடிப்போனவதான். இல்லேன்னு சொல்லல. அதுக்காக உன் அம்மாவும் நீங்களும், நான் சின்னச் சின்னத் தப்புப் பண்ணினாக்கூட இதைச் சொல்லிச் சொல்லி என்னை நோகடிக்கிறீங்க. ஒரே ஒரு தடவை உணர்ச்சி வசப்பட்டுச் செய்த தப்புக்காகக் காலமெல்லாம் உங்ககிட்ட நான் அவமானப்படணுமா?” -மதியழகியின் வார்த்தைகளில் அடர்த்தியான சோகம் அப்பிக்கிடந்தது.

“உனக்கு ஏதுடி மானம் அவமானமெல்லாம்? அதெல்லாம் இருந்திருந்தா அவனோடு ஓடிப்போயிருப்பியா?”

“அதெல்லாம் இல்லாமதான் அவனோடு ஊரைவிட்டு ஓடினேன். பெத்தவங்க தேடிக் கண்டுபிடிச்சிக் கூட்டிட்டு வந்தாங்க. ஆமா, அடுத்தவனோடு ஓடிப்போன என்னை நீ ஏன் கட்டிகிட்டே?” என்று ஒரு ‘சுருக்’ கேள்வி கேட்டாள் மதியழகி.

இந்தக் கேள்வியும், அவள் அவனை ‘நீ’ என்று விளித்துப் பேசியதும் சாத்தையாவின் அடி நெஞ்சைச் சுட்டது. பதில் சொல்லும் வகையறியாமல் ஜன்னல் வழியே தெரிந்த வெளிப்புறக் காட்சிகளை வெறித்துப் பார்க்கலானான்.

“நீ மட்டும் ஒழுக்கசீலனா? கல்யாணத்துக்கு முந்தியே ஊர் மேய்ஞ்சவன்தான் நீ. உனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரல. எனக்கும் மாப்பிள்ளை கிடைக்கல. வேறே வழியில்லாம என்னைப் பெத்தவங்க உனக்குக் கட்டிவைச்சாங்க...”

குறுக்கிட்ட சாத்தையா, “இப்ப எதுக்குடி அந்தப் பழைய கதையெல்லாம்?” என்றான்.

“காரணம் இருக்கு. நீயோ உன் அம்மாவோ இனிமேலும் நான் ஓடிப்போனதைச் சொல்லி அவமானப்படுத்தினா...” 

-சொல்லி நிறுத்திய மதியழகி,  சற்று நேரம் கமுக்கமாகச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள். “எவனோடு நான் ஓடிப்போனேனோ அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. என்னையே நினைச்சிட்டு இருக்கானாம். ‘வா ஓடிப்போகலாம்னு போன் பண்ணிட்டே இருக்கான். உன்னைக் கைவிட மாட்டேன்’னும் சத்தியம் பண்ணுறான்.  நாங்க ஓடிப்போனா என்னைப் பெத்தவங்க ரொம்பவே வருத்தப்படுவாங்கதான். ஆனா, நீயும் உன் அம்மாவும் திருந்தலேன்னா, அவனோடு ஓடிப்போறதைத் தவிர எனக்கு வேறு வழியில்ல. அடுத்த தடவை அவன் போன் பண்ணினான்னா, ஓகே சொல்லிடவா?” என்று சொல்லி முடித்து அழுத்தமானதொரு பார்வையைச் சாத்தையா மீது பதித்தாள்.

கடும் அதிர்ச்சிக்குள்ளான சாத்தையா, அறையின் ஒரு மூலையில் இருந்த பாயைத் தரையில் விரித்துச் சுருண்டு படுத்தான்.

===================================================================================