}

Sep 22, 2012

பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘விறுவிறு’ சரித்திரக் கதையும் ஒரு ‘சுறுசுறு’ விமர்சனமும்!

கவனியுங்கள்: நேற்று விகடனில் [26-09-2012]வெளியான சிறுகதைக்கு, இன்றைய தினமே ’சுடச்சுட’ ஒரு விமர்சனம்!

பட்டுக்கோட்டை பிரபாகரின் ’விறுவிறு’சரித்திரக் கதையும் ஒரு ‘சுறுசுறு’ விமர்சனமும்!

நீங்கள் சரித்திரக்கதைப் பிரியரா?

அதில் எதையெல்லாம் எதிர்பார்ப்பீர்கள்?

வரலாற்றில் இடம் பெற்ற இரு பெரும் மன்னர்களிடையே முரண்பாடு. அதன் விளைவாக நிகழ்த்தப்படும் போர்கள். அவை பற்றிய தத்ரூபமான வர்ணனைகள்.

கதைக்கு உயிரோட்டமாக இருக்கும் கதாநாயகன். அவன் நிகழ்த்தும் வீரதீர சாகசங்கள். அவன் தன் காதலியுடன் புரியும் சரச சல்லாபங்கள்.

விதம் விதமான குணாதிசயங்கள் கொண்ட கதை மாந்தர்கள் [கதாபாத்திரங்கள்]. அவர்களின் நடையுடை பாவனைகள். அவர்கள் பேசும் மொழி. அந்தக் காலத்து நாகரிகம் பண்பாடு. பழக்க வழக்கங்கள். வாழ்ந்த காலம்; இடம் என்று இவை அனைத்தும் இணைந்து உங்களைக் கதை நிகழும் காலத்துக்கே கதாசிரியன் இட்டுச் செல்ல வேண்டும். 

கதையின் இடையிடையே, ’எதிர்பாராத திருப்பங்கள்’ [turning points] வரவேண்டும். ‘இனி என்ன நடக்குமோ’ன்னு வாசகனைத் துடிப்புடன் எதிர்பார்க்க வைக்கிற [suspense] காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும். கதைத் தலைவனுக்கும் தீயவனுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்து, கதை உச்சக் கட்டத்தைத் [climax] தொட்டு, வாசகன் உள்மனதைத் தொடும்படியான ஒரு ‘முடிவு’ அமைய வேண்டும்.

 இப்படி, இன்னும் நிறையவே  நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்புகள் அவ்வளவையும் நிறைவேற்றுவது சரித்திர நாவல்’களில் மட்டுமே சாத்தியம்.


பட்டுக்கோட்டைப் பிரபாகர் எழுதியிருப்பது ஒரு சரித்திரச் சிறுகதை. [’ஆனந்தவல்லியின் காதல்’]

உங்கள் எதிர்பார்ப்புகளில் கொஞ்சமே கொஞ்சம்தான் அவரால் நிறைவேற்ற முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

‘விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான, மான் கொடி பறக்கும் அரண்மனையின் உப்பரிகை.....’ இப்படிக் கதையைத் தொடங்கும் போதே, கடந்த காலத்தில் ஒரு நாட்டை ஆண்ட மன்னனின் அரண்மனையின் முன்னால் நம்மை இழுத்துச் சென்று நிறுத்திவிடுகிறார் பிரபாகர்.

கதையின் நடுநடுவே.............

‘அன்று சித்ரா பவுர்ணமி என்பதால், சுந்தரபுரத்தின் கடற்கரை முழுதும் மக்கள் அலையலையாய்க் கூடியிருந்தனர். உறவினர்களும் நண்பர்களுமாக, நிலவொளியில் சித்ரான்னங்கள் சமைத்து உண்டு, ஆடியும் பாடியும் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க.......’

‘இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கிய நிலையில், சுந்தரபுரத்தைவிட்டு வெகு தூரத்தில்.....நடுக் கடலில், எந்தத் திசையிலும் நகராமல் ஒரே இடத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெரிய படகு....’

இப்படியெல்லாம் தத்ரூபமாகக் கதை நிகழும் இடங்களை வர்ணிப்பதன் மூலம், நிகழ் காலத்துக்கு நாம் திரும்பிவிடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டுவிடுகிறார் கதாசிரியர்.

‘ஆடைகளின் சரசரப்பும் வளையல்களின் சிணுங்கலும் தண்டைகளின் ஒலியும் கேட்டு அவள் திரும்ப.....எதிரே வந்து நின்றாள் இளவரசி ஆனந்தவல்லி. அவளை வர்ணிக்க ஒரே வார்த்தை போதும். ‘பேரழகி’. ...ஏதோ பேசத் துடிக்கும் ஈர மினுமினுப்புடன் இருந்த அவளின் அதரங்கள்....’ என்று கதைத் தலைவியை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இடமும்,

‘இளவரசியின் அதரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை’ என்று கதைநாயகன் நந்தகுமாரன் அவளை இழுத்து அணைத்துச் சொல்லும் சல்லாப வார்த்தைகளும் நம்மை இன்பலோகத்துக்கு இட்டுச் செல்கின்றன!

‘அவள் மார்பகம் சிறிதாய் இருந்தாலும் வாலிபத்தின் வேகத்தைக் காட்டியது. கழுத்தில் வளைந்து வந்து அவற்றைச் சுற்றிய ஆடையையும் இரட்டை அழகு அலட்சியம் செய்தது. விஷமத்தால் கன்னங்கள் இரண்டும் நன்றாகக் குழிந்து அங்கும் இரண்டு கண்கள் இருப்பது போல் பிரமையை ஏற்படுத்தின. அவள் முகம் குழந்தை போலிருந்தது. பருவத்தை எட்டிவிட்டாளா எட்டப் பார்க்கிறாளா அந்தத் திருடி என்று சந்தேகப்படும்படி இருந்தது அவள் திருக்கோலம்’ [இன்னும் முடியவில்லை!]. இது சாண்டில்யனின் ‘பல்லவ திலகம்’ நாவலில் வர்ற‘கிளுகிளு’ வர்ணனை. 

இந்த மாதிரி மிக நீண்ட வர்ணனையெல்லாம் சிறுகதையில் எதிர்பார்க்கக் கூடாதுங்க!

கதைமாந்தர்களுக்கு ஆசிரியர் சூட்டியுள்ள அத்தனை பெயர்களும் பழங்காலத்தவைதான்; பொருத்தமாவே இருக்கு.

ஆக, இது ஒரு சரித்திரக் கதை என்பதை வாசகர் மனதில் பதிய வைப்பதில் பட்டுக்கோட்டையார் முழு வெற்றி ஈட்டியிருக்கிறார் என்று துணிந்து சொல்லலாம்.

இனி, கதைக்கு வருவோம்.

அரகதத்தின் அரசன் அனிருத்தன் [சரித்திரக் கதைகளின் பாத்திரங்களுக்குப் பேர் வைக்கவே படாத பாடு படனுங்க]; படைபலம் உள்ளவன்; தன் ராச்சியத்தின் எல்லையை விரிவுபடுத்துபவன்.

விஜயநந்தன் என்னும் அரசன் ஆண்ட சுந்தரபுரத்தை அடிமை நாடா அறிவிச்சிக் கப்பம் கட்டணும்னு முதலில் ஓர் ஓலை அனுப்புறான். அடுத்து அனுப்புன இன்னொரு ஓலையில்,”உன் பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுய்யா”ன்னு சொல்றான்.

படையெடுபை நினைச்சிக் கவலைப்பட்ட நம்ம விஜயநந்தன் சந்தோசமா இதுக்கு ஒத்துக்குறார்.

ஆனா, அவர் பொண்ணு இளவரசி ஆனந்தவல்லிக்கு அதில் விருப்பம் இல்ல.

அரண்மனைக்கு வேலைக்கு வந்த சாதாரண  குடிமகன் நந்தகுமாரனை அவ காதலிக்கிறா.

ரெண்டு பேரும் இலங்கைக்கு ‘ஓடிப் போயி’ சாதாரணக் குடிமக்களா வாழ முடிவு பண்றாங்க.

இளவரசின்னா கடுமையான கட்டுக் காவல் இருக்குமே? மந்திரம் சொல்லி எல்லார் கண்ணையும் கட்டிப் போட்டுட்டுத் தப்பிச்சிப் போறது நடக்குமா  என்ன?

அதுக்குன்னு, தன் அபார மூளையைக் கசக்கித் திட்டம் தீட்டுறான் நம்ம கதாநாயகன் நந்தகுமாரன்.

அவங்க எப்படித் தப்பிச்சி ஓடிப்போறாங்க என்பதுதாங்க கதை.

இளவரசி ஆனந்தவல்லியைச் சந்திச்சித் திரும்பும் போது, காவலன்கிட்ட  மாட்டிகிட்டா  சிறையில் தள்ளப்பட்டு,  உயிரோட  சமாதி
கட்டப்படுவோம்கிறது நந்தகுமாரனின் கணிப்பு.

சமாதி எழுப்புற தீரனைக் கைக்குள்ள போட்டு,  காவலர்கள் போனதும் அதைப் பெயர்த்து எடுத்துட்டு வெளியே வர்ற மாதிரி, ஒரு கல்லுக்கு மட்டும் சுண்ணாம்பு வைக்காம மணல் வெச்சிக் கட்டச் சொல்றான். தீரனும் அதுக்குச் சம்மதிக்கிறான்.

இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டிச் சமாதியிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் நந்தகுமாரன்.

இவன் தப்பிக்கிற அதே நேரத்தில், ராஜகுமாரி, தன் தோழியோட, சித்ரா பவுர்ணமி அன்னிக்கிக் கடலாடப் போயி, அலை அடிச்சிப் போற மாதிரி போக்குக் காட்டி, நீந்திப் போய்,  சில காத தூரத்தில்  தயாரா நிறுத்தி வெச்சிருக்கிற படகில் ஏறிடுவா.

சமாதியிலிருந்து தப்பிச்ச கதைத் தலைவன் அவகிட்ட போய்ச் சேர்ந்துடுவான்.

இப்படி ஒரு திட்டத்தை, நாயகன் நாயகியிடம் சொன்ன போது, “என் தந்தை வாக்குத் தந்தபடி என்னை மணம் செய்து கொடுக்காம ஏமாத்துறாரேன்னு அநிருதத்தன் படையெடுப்பானே?”ன்னு நாயகி ஒரு சந்தேகத்தைக் கிளப்புறா.

“நான் சமாதியில் இருத்திக் கொல்லப்பட்டுட்டேன். நீயும் அலையில் சிக்கிச் செத்துட்டேங்கிற செய்தி அநிருத்தன் காதுக்குப் போகும். உன் தந்தை தன் மகளை இழந்துவிட்டார்ங்கிற சோகமான சூழ்நிலையில் அவன் படியெடுப்பு நிகழ்த்த மாட்டான்” என்கிறான் நந்தகுமாரன்.

[கதையின் ஆரம்பத்திலேயே, இளவரசியை அழைச்சிட்டு எப்பாடு பட்டோ இலங்கைக்கு இவன் தப்பிப் போயிருந்தா அநிருதத்தன் விஜயநந்தனைப் பழி வாங்கிடுவான்கிறதை மறந்துடாம எத்தனை கவனமா ஆசிரியர் நிகழ்ச்சிகளை அமைச்சிருக்கார் பாத்தீங்களா?]

இந்தக் கட்டத்தில், அட்டகாசமான  ஒரு ‘திருப்பத்தை’த் தர்றார் ஆசிரியர்.

கடலுக்குள்ள  நீந்திப் போயி, படகில் நந்தகுமாரனை எதிர்பார்த்து ஆனந்தவல்லி  காத்திருக்கிற காட்சி வருது.

அவ எதிர்பார்த்த படகும் வருது.

ஆனா, அதில் நந்தகுமாரன் வரல.

சமாதி கட்டின தீரன் வர்றான்.

‘நானும் உன் அழகில் என் மனதைப் பறி கொடுதேன். திட்டமிட்டபடி, ஒரு கல்லை மணல் வெச்சிக் கட்டாம சுண்ணாம்பு வெச்சிக் கட்டிட்டேன். நந்தகுமாரன் இந்நேரம் யமலோகம் போயிருப்பான். என்னை நீ ஏத்துக்கோ”ங்கிறான்.

மறைச்சி வெச்சிருந்த கத்தியை வீசித் தீரனைக் கொல்ல நினைக்கிறா இளவரசி........

இந்தக் கட்டத்தில் மீண்டும் ஒரு ஆனந்தத் திருப்பத்தைக் கொடுக்கிறார் எழுத்தாளர்.

இளவரசி கையில் ஏந்திய குறுவாள் வீசப்படாத நிலையில், வேறு ஒரு குறுவாள் தீரன் நெஞ்சில் பாயுது.

அதை வீசியவன் நந்தகுமாரன்.

சமாதியான அவன் எப்படி இங்கே முளைத்தான்?

அவன் வாயால் சஸ்பென்ஸை உடைக்கிறார் பிரபாகர்.

“தீரன் கண்களில் துரோகம் எட்டிப் பார்ப்பதை ஆரம்பத்திலேயே நான் கண்டுகொண்டுவிட்டேன். நான் சமாதி கட்டப்படும் போது என் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் சோறு ஊட்ட வந்த என் சகோதரி, மஜ்ஜை நீக்கிய பெரிய எலும்பில் சிறு கத்தி வைத்து ஊட்டினாள்.. அதை வைத்து என் கட்டுகளை அவிழ்த்து, கற்களைப் பெயர்த்து, மீண்டும் கற்களை வைத்துப் பூசிவிட்டு வந்தேன். நான் நிறுத்தி வைத்த படகில் தீரன் ஏறுவதைப் பார்த்துப் படகில் இருந்த வலைகளுக்குப் பின்னால் ஒளிந்து வந்தேன். அவன் எனக்கிழைத்த துரோகத்தையும் புரிந்துகொண்டேன்” என்கிறான்.

நாயகனை இழுத்தணைத்து நாயகி முத்தமிட, ”ஐயே, என் இளவரசியின் அதரம் இப்படி உப்புக் கரிக்கிறதே” என்று சொல்லி நாயகன் சிரிப்பதாக முடிகிறது கதை.

கதைக்குச் சுவை கூட்டக் கூடிய வர்ணனைகள், திருப்பங்கள், எதிர்பார்ப்பு நிலைகள், உச்சக்கட்டப் போராட்டம், இன்பமான முடிவு என்று சிறுகதைக்குரிய முக்கிய கூறுகளையெல்லாம் பக்குவமாகச் சேர்த்து அருமையான ஒரு சரித்திரச் சிறுகதையைப் பட்டுக்கோட்டை பிரபாகர் நமக்கு வழங்கியிருக்கிறார் என்று நான் சொன்னால்...............

“யோவ் அறுவை, நீ பிரபாகருக்கு ரொம்பத்தான் ஜால்றா தட்டுறே. கதையில் குறை சொல்லும்படியா ஒன்னுமே இல்லையா?”ன்னு நீங்க கேட்பது புரியுதுங்க.

அதையும் சொல்லிடறேங்க.

இளவரசியைக் காதலிச்சதுக்குச் சமாதி கட்டுறது தண்டனைன்னு நந்தகுமாரன் நினைக்கிறானே, அது எப்படி?

இளவரசிகளைக் காதலிக்கிறவனுக்கெல்லாம் சமாதி கட்டுறதுதான் தண்டனைன்னு அந்த நாட்டில் ஒரு சட்டம் இருந்துதா?

’சிரச்சேதம்’ போன்ற வேறு தண்டனையும் தரலாம்தானே?

அதில்லாம, நாயகன் சமாதி கட்டப்படுறதும் சித்ரா பவுர்ணமி விழாவும் ஒரே நாளில் நடந்தது எப்படி?

சமாதி கட்டினதும், அது நல்லா கெட்டிப்படுற வரைக்கும் காவல் போட மாட்டாங்களா? சமாதியின் ஈரப்பதம் காயறதுக்குள்ளேயே காவலர்கள் இடத்தைக் காலி பண்ணிடறாங்களே அது ஏன்?

இப்படி சில குறைகள் இருந்தாலும், இது நல்லதொரு பொழுது போக்குக் கதைன்னு நான் நினைக்கிறேங்க.

போயும் போயும் ஒரு பொழுது போக்குக் கதைக்கு இப்படியொரு நீஈஈஈஈளமான பதிவு தேவையான்னு நீங்க கேட்கிறீங்களா?

தேவைதாங்க.

உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறதும், வாழ்க்கைப் பிரச்சினைகளை மையப்படுத்துறதுமான கதைகளை மட்டுமே படிச்சிட்டிருந்தா வாழ்க்கை போரடிச்சிப் போடிடும். சிரிப்பூட்டக் கூடிய , இது மாதிரி ஏதோ ஒரு வகை சந்தோசத்தில் ஆழ்த்தக் கூடிய பொழுது போக்குக் கதைகளும் தேவைதாங்க.

இது என் தனிப்பட்ட கருத்துன்னு சொல்வதோடு, விறுவிறுப்பான சரித்திரக் கதை வழங்கிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும், அதை வெளியிட்ட விகடனுக்கும் நம் அனைவருடைய சார்பாகவும் நன்றி சொல்றேங்க.

நன்றி....................................நன்றி..............................................நன்றி...........................

************************************************************************************************************************


6 comments :

 1. சிறுகதையும் சூப்பர்....உங்கள் விமர்சனமும் சூப்பர்..தொடருங்கள்...

  ReplyDelete
 2. //சிறுகதையும் சூப்பர்.....உங்கள் விமர்சனமும் சூப்பர்//

  மனம் நிறைந்த நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. //@NKS ஹாஜா மைதீன் said

  தம 2//

  பாராட்டுகள் ஹாஜா மைதீன்.

  ReplyDelete
 4. பி.கே பி சரித்திரக் கதை எழுதி இருக்கிறாரா?
  விரிவான விமர்சனம் நன்று.நானும் படிக்க இருக்கிறேன்.

  ReplyDelete
 5. பி.கே.பி. எழுதிய சரித்திரச் சிறுகதை ‘ஆனந்தவல்லியின் காதல்’.

  இந்த வார விகடனில் [26-09-2012] வெளியாகியிருக்கிறது.

  அதைத்தான் விமர்சனம் செய்திருக்கிறேன்.

  விகடன் படியுங்கள்.

  பாரட்டுக்கு நன்றி முரளிதரன்.

  ReplyDelete