செவ்வாய், 24 ஜனவரி, 2023

மூளையுள்ள முதலாளியும் முட்டாள் தொழிலாளர்களும்!!![படைப்புத் தத்துவம்]

தொழில்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றில்லை, இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்து அழிகிற அத்தனை பேருமே தொழிலாளர்கள்தான்.

இந்த மண்ணுலகம் என்னும் தொழில்சாலையில் மனிதத் தொழிலாளர்கள் செய்கிற தொழில், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்து, பிள்ளைகளைப் பெற்று இனவிருத்தி செய்வதுதான்.

புணர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் அள்ள அள்ளக் குறையாத ஆசைகளை அவர்கள் நெஞ்சில் நிரப்பி வைத்திருக்கிறான் அவர்களுக்கான முதலாளி.

இனவிருத்தித் தொழிலைத் தொடர்ந்து செய்யவிருக்கும் பிள்ளைகளைப் பேணி வளர்த்து ஆளாக்குவதற்காகப் பெற்றவர்களைப் பற்று, பாசம், நேசம், என்னும் வலைகளில் சிக்கவைத்துக் காலங்காலமாய் விழிப்புடன் கண்காணித்துக்கொண்டிருக்கிறான் அவன்.

அதன் விளைவு.....

தடங்களேதுமின்றி மனித இன உற்பத்தித் தொழில்[மற்ற உயிரினங்களுக்கும் இது பெருமளவில் பொருந்தும்] சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு அவன் வழங்கும் ஊதியம், உண்ணுதல், உறங்குதல், புணர்தல் போன்றவை மூலமாகப் பெறும் சொற்ப சந்தோசங்கள் மட்டுமே[அற்ப வாழ்நாளில்].

அந்தச் சொற்பமான சந்தோசமும் வாய்க்கப்பெறாத பல மனிதர்கள் நிறைவேறாத ஏராள ஆசைகளையும், இச்சைகளையும் சுமந்து அலைந்து திரிந்து செத்தொழிகிறார்கள்.

மனித இனத்தை மட்டும் வாழவைத்து, அந்த  இனத்தைச் சார்ந்த எந்தவொரு தனி மனிதனையும் அற்ப ஆயுளில் அழித்துவிடுகிற அந்தக் கடவுள் என்னும் முதலாளியா கருணைவடிவானவன்?

அல்ல, கொடூரன்!

இந்த உண்மையை உணராமல், மக்கள் அவனுக்குக்  கோயில்கள் கட்டி விழாக்கள் எடுத்துக் கூத்தடித்துப் போற்றி வழிபடுவது அறியாமையின் உச்சம்!!   

===================================================================================       

***மனிதர்கள்[பிற உயிரினங்கள் உட்பட] கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுவதைக் கருத்தில் கொண்டு இப்பதிவு எழுதப்பட்டது.