கீழே உள்ள செய்திப் பதிவுகள் ‘தமிழ் இந்து’[15.04.2023] நாளிதழிலிருந்து நகலெடுக்கப்பட்டவை.
அனுப்பப்பட்ட ‘கருணை மனு’க்களைப் பரிசீலித்து முடிவெடுப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் தாமதம் செய்ததால், 16 குழந்தைகளைக் கடத்தி, அவர்களில் 9 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக உள்ளூர் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு[2001], உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும்[2006] உறுதி செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவேண்டிய மகாராஷ்டிர மாநிலப் பெண்கள்[சகோதரிகள்] இருவருக்கான அந்த ‘மரண தண்டனை’ நிறைவேற்றப்படாமல், மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது[என்பது செய்தி]. அதாவது.....
ஈவிரக்கமின்றி, கள்ளங்கபடமற்ற 9 குழந்தைகளைக் கொன்ற அரக்கிகள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள்!
இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தவர் மும்பை உயர் நீதிமன்ற நீதியரசர். அந்த இரு சகோதரிகளின் கருணை மனுக்களைப் பரிசீலித்து முடிவு அறிவிப்பதற்கு ‘ஆளுநரும்[2013இல் நிராகரிக்கிறார்] குடியரசுத் தலைவரும்[2014இல் நிராகரிக்கிறார்] எடுத்துக்கொண்ட 7 ஆண்டுத் தாமதமே அவரின் தீர்ப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறது.
மகாராஷ்டிர அரசு, தண்டனைக் குறைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள், அரசும் அதிகாரிகளும்[குடியரசுத் தலைவர் என்றோ ஆளுநர் என்றோ குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது] செய்த தாமதத்தால்தான் உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்கிறது என்று கூறியதோடு, அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
இந்தத் தாமதம் குற்றவாளிகள் உரிய தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைந்தது என்று அவர்கள்[அமர்வு நீதிபதிகள்] கூறியிருப்பது.....
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள் அத்தண்டனையிலிருந்து தப்பியதற்குத் ‘தாமதம்’ மட்டுமல்ல, அதைச் செய்தவர்களும் காரணம்தானே? அவர்களுக்குத் தண்டனை இல்லையா என்று கேட்கத் தூண்டுகிறது.
இந்தக் கேள்வியை இங்கு எவரிடமும் கேட்க இயலாது; கூடாது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரிடம் கேட்கலாம்.
கடவுள் இருக்கிறாரா?!