“பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகளை[சமத்துவம்]ப் பெறுவது இன்னும் 300 ஆண்டுகளுக்குச் சாத்தியமே இல்லை. நம் கண் முன்னே படிப்படியாக அது குறைந்துவருவதையும் காண்கிறோம்.”
கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.வின் பெண்கள் உரிமைக் குழுவிடம் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மேற்கண்டவாறு கூறி வருந்தியுள்ளார்.
=பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல்.
=சிறுமிகள் சிறுவயதிலேயே திருமணத்திற்குத் தள்ளப்படுவதும் பள்ளிக்குச் செல்லாமல் தடுத்துத் தாக்கப்படுவதுமான கொடூரச் செயல்கள்.
=அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்.
=கல்வி கற்றல், வேலை வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான பங்கு மறுக்கப்படுதல்.
=அறிவியல், தொழிநுட்பத் துறைகளில் அவர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படாத அவலம்[நோபல் பரிசு பெற்றவர்களில் 3% மட்டுமே பெண்கள்].
=அவர்களுக்கான இனப்பெருக்க உரிமைகள் மறுக்கப்படும் கொடுமை.
என்றிவ்வாறு, உலக அளவில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதைத் தம் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டும் அன்டோனியோ குட்டரெஸ், சில இஸ்லாமிய நாடுகள் அவர்களுக்கு இழைக்கும் சொல்லொணாத் தீங்குகளையும் கீழ்க்காணும் வகையில் பட்டியலிட்டிருக்கிறார்.
*ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களில் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை
*தலிபான்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது விதித்துள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்.
*பெண்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்படாத அவலம்.
*பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொதுக் குளியல் இல்லங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லவும் அவர்கள் அனுமதிக்கப்படாதது.
*தலிபான்கள், ஆகஸ்ட் 2021இல் அதிகாரத்தை மீட்டெடுத்ததிலிருந்து, ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பதற்கு விதித்துள்ள தடை.
*[உக்ரைன் போர் பெண்களையும் சிறுமிகளையும் வெகுவாகப் பாதித்துள்ளமை].
இப்படி, இஸ்லாமியப் பிற்போக்குவாதிகள் பெண்ணினத்திற்கு இழைக்கும் அநீதிகளைச் சுட்டிக்காட்டும் குட்டரெஸ், பெண்ணுரிமைக்கு எதிராகச் செயல்படும் வேறு சில நாடுகளின் பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு, உலக நாடுகள் பலவும் இப்போதைய தங்களின் பெண்களுக்கு எதிரான போக்கைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.
இங்கே கவனிக்கத்தக்கது, கடவுளின் பெயரால் பெண்ணுரிமைகளைச் சிதைத்து அவர்களைத் தங்களின் நிரந்தர அடிமைகளாகவே இருக்கச் செய்யும் சில இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பது.
எனவே, பெண்ணுரிமை பேணும் வலிமை பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து அவர்களை அடக்கி ஒடுக்கி நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை ஆகும்.
======================================================================================