திங்கள், 17 ஏப்ரல், 2023

மனித உருவில் நடமாடும் ‘பலி' ஆடுகளா நாம்?!?!

சிந்திக்கும் அறிவு வாய்க்கப்பெற்ற நாளிலிருந்து அறிஞர்களும் அறிவியலாளரும் கேட்டுச் சலித்த, விடை அறியப்படாத கேள்விகளைப் புதிய வடிவில் இங்கே பதிவு செய்கிறேன்.

“அண்டவெளியிலுள்ள அனைத்துப் பருப்பொருள்களையும் நுண்ணுயிர்களையும் கடவுள் படைத்தாரா, அணுக்கள்[‘எல்லாம் இயற்கை நிகழ்வுகளே’ என்பதும் ஒரு கோட்பாடு] நடத்தும் குத்தாட்டத்தின் விளைவா?” என்னும் முடிவு எட்டப்படாத விவாதம் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விவாதத்தின் முடிவு, கடவுளின் திருவிளையாடலோ, அணுக்கள் நிகழ்த்தும் குத்தாட்டமோ, இந்த இரண்டில் எதுவாகவோ இருந்து தொலையட்டும்.  அது குறித்து நமக்குக் கவலையில்லை.

நாம் கவலைப்படுவதெல்லாம், இம்மண்ணில் வாழ்ந்து முடிக்கும்வரை வறுமை, பகைமை, நோய்மை என்று பலவற்றையும் எதிர்த்துச் செத்தொழியும்வரை போராடும் வகையில்  படைக்கப்பட்டிருப்பது பற்றித்தான்.

நம்மை மனிதர்கள் என்பதைவிடவும், கடவுளின் திருவிளையாடலுக்கு, அல்லது, அணுக்களின் குத்தாட்டங்களுக்குப் பலியிடப்படும் ஆட்டு மந்தைகள் என்பதே ஏற்புடையதாக இருக்கும்.

“நாம் ஏன் இப்படிப் பலி ஆடுகளாகப் படைக்கப்பட வேண்டும்?” என்பது நம் கேள்வி.

“இக்கேள்வியைக் கேட்பதற்கான அறிவு நமக்குத் தரப்பட்டிருப்பது ஏன்?” என்பது நாம் எழுப்பும் கூடுதல் கேள்வி[ஆறறிவு வாய்க்காமல் இருந்திருந்தால், மற்ற உயிரினங்களைப் போல், மன உளைச்சலின்றி வாழ்ந்து அழிந்துபோகலாம்]. 

அனைத்திற்கும் மேலாக, ‘இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்நாளும் விடை கிடைக்கப்போவதில்லை’ என்பது உயிர் வாழும்வரை நாம் அனுபவிக்கும் மிகப் பெரிய துயரம் ஆகும்!

====================================================================================

***இம்மாதியான, மண்டை காய வைக்கும் பதிவுகளால் பயன் ஏதும் உண்டா?

‘உண்டு’ என்பது என் அழுத்தமான நம்பிக்கை. 

சிந்திக்கத் தூண்டுவதும், கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட ஏராளமான மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடவைப்பதும் இவற்றின் நற்பயன்களாகும்.