‘பெங்களூரு அருகே உள்ள நந்தி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலைத் திறப்பு & ஈஷா யோகா மையத் திறப்பது ஆகியவற்றிற்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் புதன்கிழமை[11.01.2023] தடையுத்தரவு பிறப்பித்துள்ளது’ என்பது புதிய புளகாங்கிதம் அளிக்கும் செய்தி.
சுற்றுச்சூழல் மோசமாக உள்ள நிலையில், நந்திமலை அடிவாரத்தில் அமையவுள்ள வணிக நிறுவனத்திற்கு[ஈஷா மையம்] அரசு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதை எதிர்த்துப் பொதுநல வழக்கு(பிஐஎல்) தொடுக்கப்பட்டுள்ளது.
சிக்கபல்லாபுரத்தைச் சேர்ந்த எஸ்.கியாதப்பா என்பவரும், கிராம மக்களும் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளனர்.
இதை எதிர்த்து, மத்திய வனம் & சூழலியல் அமைச்சகம், கர்நாடக அரசு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவல்துறை, கோவை ஈஷா யோகா மையம் உள்ளிட்டவை சார்பாக எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.
மக்களின் பொதுநல மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்:
*கால்நடைகள், காட்டு விலங்குகள் ஆகியவற்றின் வாழ்வாதாரத்தில் நேரடிப் பாதிப்பை இது ஏற்படுத்தும்.
*வடக்குப் பினாகினி மற்றும் தெற்குப் பினாகினி ஆறுகள் நந்தி மலையில் உருவாகின்றன. அவையும் இதனால் பாதிக்கப்படும்.
*சிவபெருமானின் உலோகச் சிலையைக் கொண்டுவந்து ஒரே இரவில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நிலங்கள் சிதைவடையும்.
*யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ், பச்சை மலையின் மையப் பகுதியில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கும்.
ஜக்கி மேற்கொள்ளவிருக்கும் வணிகத்திற்காக, நந்தி மலையின் கோர் கமாண்ட் பகுதி, சிக்கபல்லாபுரா ஹோப்ளியில் உள்ள NDB அடிவாரம் ஆகியவற்றை, சுற்றுச் சூழல் சட்ட விதிகளை மீறி, அதிகாரிகள் அனுமதித்ததாகவும் பொதுநல மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை ஜக்கியின் ஈஷா அறக்கட்டளை ஜனவரி 15ஆம் தேதி திறந்துவைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் அரசு, யோகா மையம் மற்றும் 14 எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், இதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
======================================================