வியாழன், 5 ஜனவரி, 2023

காம உணர்வைக் கட்டுப்படுத்தி வாழ்ந்த ஒரு முதிர் காளையின் கதை!!!

எச்சரிக்கை: இது கதை. கதைமாந்தனே ‘கதை சொல்லல்’[‘நான்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தி] உத்தி இதில் கையாளப்பட்டுள்ளது. அந்த ‘நான்’உக்கும் இடுகையிட்ட ‘பசி’பரமசிவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை அறிந்திடுவீர்!

                                          *   *   *   *   *


து என் வாலிப வயதில் நடந்தது. 

முப்பது வயதைக் கடந்தவர்களை வாலிபர்கள் என்பது சரியென்றால், நான்  வாலிபன்தான். வயது முப்பத்தைந்து என்பதால் கொஞ்சம் முதிர் வாலிபன். காலாகலத்தில் திருமணம் ஆகியிருந்தால் ஏழெட்டுப் பிள்ளைகளுக்குத் தகப்பனாகி, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு நாயாய்ப் பேயாய் அலைந்துகொண்டிருப்பேன்.

இப்போது எனக்கும் என் அம்மாவுக்குமான வயிற்றுப்பாட்டுக்காக வேலை தேடி அலைவதை வழக்கமாககொண்டிருக்கிறேன்.

முதுகலைப் படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்தபோது, அம்மாவின் மனத் திருப்திக்காக வாரம் ஒரு முறை அந்த மலைக்கோயிலுக்குச் செல்வதைப் பழக்கப்படுத்தியிருந்த நேரம் அது.

அன்று அம்மாவாசையோ ஆத்தாவாசையோ, மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிடவும் அதிகம். கண்ணுக்கு விருந்தளிக்கும் கட்டழகுக் கன்னிகள் நிறையவே தென்பட்டார்கள்.

நிறைய என்றால், அங்கே இங்கே பராக்குப் பார்ப்பது போல் பாசாங்கு செய்துகொண்டே மனதுக்குப் பிடித்த ஒரு குமரிப் பெண்ணின் மார்பைப் புறங்கையால் தொடலாம். கொஞ்சம் தைரியத்தைச் சேர்த்துக்கொண்டால் உள்ளங்கையால் அவளின் வழவழத்த இடையைத் தடவிச் செல்லலாம்.

இதை ஒரு கலையாகச் செய்பவர்கள் உண்டு.  நான் முயற்சி செய்ததே இல்லை. எதிரில் வருவது வயசுப் பெண் என்றால், அவள் இடிப்பது போல் வந்தாலும் நான் அடங்கி ஒடுங்கி ஒதுங்கிச் செல்லும் ‘நல்ல’ பிள்ளையாகவே வாழ்ந்து பழகிவிட்டேன்[பிரச்சினையே இதுதான்].

அன்றையத் தினத்தின் அதிகாலையிலேயே சனிபகவானின் ‘துஷ்டப் பார்வை’யில் சிக்குண்டிருந்ததாலோ என்னவோ, காலம் காலமாக என் கட்டுப்பாட்டில் இருந்த  காம உணர்ச்சி கட்டவிழ்த்துக்கொண்டிருந்தது. காரணம், என் கண்களுக்கு அங்கு வந்திருந்த அத்தனைப் பெண்களும்[கிழவிகள் நீங்கலாக] காமதேவனால் அனுப்பப்பட்ட தேவலோகத்துக் குமரிகளாகத் தென்பட்டதுதான். விளைவு.....

நேற்றிரவு உறங்கச் செல்லும்வரை நான் நடைபயின்ற ஒழுக்கநெறியிலிருந்து தடம்புரண்டேன். 

பராக்கெல்லாம் பார்க்காமலே, பதித்த பார்வையை மீட்டெடுக்காமலே எதிர்ப்பட்ட ஓர் இளநங்கையின் இடது மார்பில் அழுத்தமாகவே விரல் பதித்துவிட்டேன்.

என்னை முறைத்த அந்த இளசு, “நீயெல்லாம் அக்கா தங்கையோடு பிறக்கலையா?.....” என்று உரக்கக் கத்தலானாள்.  அவள் கத்தி முடிப்பதற்குள்ளாகவே சுற்றியிருந்தவர்களின் கவனம் என் மீது பரவியது. அவர்களில் ஆண்களும் இருந்தார்கள்.

அவளின் தூண்டுதல் இல்லாமலே மூன்று நான்கு பேர்[சரியாகக் கணக்கிட்டுச் சொல்லும் நிலையிலா நான்?] என்னைத் தாக்கத் தொடங்கினார்கள்.

உதை, குத்து, மண்டையில் இடி என்று கலந்துகட்டி அடித்தார்கள். முன் அனுபவம் ஏதும் இல்லாததால் தப்பிகும் வழி தெரியாமல் நட்ட தலையுடன் மலைக்கோயிலின் படிகளில் சரிந்தேன்.

அடுத்து என்ன நடக்குமோ என்று சிந்திக்கும் நிலை இழந்து கிடந்தபோது, என் மீதான தாக்குதல் நின்றுபோயிருந்தது. அதற்குக் காரணமாக இருந்தவள் அந்தப் பெண்தான் என்பது சில வினாடிகளில் புரிந்தது.

என் மீது குடை போலக் கவிழ்ந்த நிலையில், “தப்புப் பண்ணின இவனை நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் விலகிப் போங்க” என்று கண்டிப்பான குரலில் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் எழுந்து உட்கார்ந்தேன். அண்ணாந்து பார்ப்பதற்கான திராணியை முற்றிலுமாய் இழந்திருந்தேன்.

சில நிமிடங்களுக்கு வேடிக்கை பார்த்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.

அது மலைக்கோயில் என்பதால் பக்தர்கள் மேலே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

“சாமி கும்பிடத்தானே வந்தே?” -சுரணையற்ற குரலில் அவள் கேட்டாள்.

தலை நிமிராமலே, “ம்ம்ம்...” என்று முனகினேன்.

“எழுந்து நட. சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீடு போய்ச் சேரு.”

எழுந்து, கலைந்திருந்த தலையையும் ஆடைகளையும் சரிசெய்துகொண்டு அவளை ஏறிட்டுப் பார்க்காமலே படிகளில் ஏறத் தொடங்கினேன்.

திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். பின்னால் வருகிறாளா, இறங்கிப் போகிறாளா என்று கவனிக்கும் நிலையில் நான் இல்லை.

தொடர்ந்து படிகளைக் கடந்துகொண்டிருந்தேன். முன்பின்னாக வருபவர்கள் அத்தனை பேரும் என்னைப் பரிதாபமாகப் பார்ப்பது போன்ற ஓர் உள்ளுணர்வு உடம்பெங்கும் பரவிக்கொண்டிருந்தது. 

நடந்தேன். 

கோயிலுக்குள் நுழையக் கொஞ்சம் படிகளே இருந்த நிலையில், சற்றுத் தொலைவிலிருந்த செங்குத்தான குன்று தெரிந்தது. அங்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையில் நடந்தேன்.

அதன் ஒரு பக்கத்தில் கிடுகிடு பள்ளத்தாக்கு இருப்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து குதித்தால் வழியில் சிறு சிறாய்ப்புக்கூட இல்லாமல் பள்ளாத்தக்கில் விழுந்து உடம்பு சிதறிச் செத்துப்போகலாம் என்பதும் எனக்குத் தெரிந்தே இருந்தது.

நடந்தேன்; சில நிமிடங்களில் குன்றின் உச்சியை அடைந்தேன்.

சுமார் பத்துத் தப்படிகள் வைத்தால்  அங்கிருந்து குதிப்பது சாத்தியமாகும். மெல்ல அடியெடுத்து வைக்கலானேன்.

ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு...

ஐந்தாவது தப்படிக்காகக் காலை உயர்த்தியபோது ‘விசுக்’ என்று பின்னாலிருந்து யாரோ என்னை இழுப்பது தெரிந்தது.

இழுத்தவள் அவள்தான். என்னால் நாலுபேர் முன்னிலையில் சிறுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்தான் என்னைத் தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்துவிட்டிருந்தாள். இழுத்த வேகத்தில் பின்னோக்கித் தள்ளாடியபடி அவளின் நெஞ்சு மீது சரிந்தேன்.

அவள் சினம் கொள்ளவில்லை. என் மீது அனுதாபப் பார்வையைப் படரவிட்டு ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

“நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாத் தெரியுறே. உன் மனநிலை எதுவாக இருந்திருந்தாலும் என்னைத் தொடக்கூடாத இடத்தில் நீ தொட்டது தப்புதான். அதுக்கான தண்டனையும் உனக்குக் கிடைச்சிட்டுது. இப்போ நானும் உன்னை மன்னிச்சிட்டேன். என்னை நம்பு. தற்கொலை முடிவைக் கைகழுவிட்டுத் தைரியமா வீடு போய்ச்சேர்” என்றாள்.

சற்றே தாமதித்து, “என் முன்னால நட. சாமி கும்பிட்ட அப்புறம் உன்னை வழியனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னதோடு, என் பின்னால் நகர்ந்து இரு கைகளாலும் என் தோள் பற்றித் தள்ளினாள்.

அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்தேன். 

சாமி கும்பிட்ட பிறகு, “இனிமேலாவது மனசைக் கட்டுப்படுத்திக்கப் பழகு” என்று சொல்லிக் கையசைத்து வழியனுப்பினாள்.

மலைக்கோயிலிலிருந்து இறங்க ஆரம்பித்தேன் நான்.  

==========================================================================================

முக்கியக் குறிப்பு: ‘ஆதரவாக அணைத்துக்கொண்டாள்’ என்னும் வரியை வாசித்தபோது, ‘அவர்களுக்குள் காதல் மலரும். பின்னர் அது கல்யாணத்தில் முடியும்’ என்றெல்லாம் கற்பனை செய்திருந்தால் அடியேனை மன்னியுங்கள்,

இது நண்பர் சொன்ன உண்மைக் கதை என்பதால் செயற்கையானதொரு சுப முடிவைத் தருவது சாத்தியப்படவில்லை!