அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 2 ஜனவரி, 2023

தமிழ்நாடு காவல்துறையின் ‘அடடா!’ கிடா விருந்து!!!

‘புத்தாண்டில்[2023] குற்றச் சம்பவங்கள் குறைவதற்காக, வடமதுரை காவல்நிலையம் சார்பாக, திண்டுக்கல் அருகே திருச்சி சாலையில் உள்ள ‘வண்டி கருப்பண்ணசாமிக்குக் கிடா வெட்டி வழிபட்டு, விருந்து வைக்கப்பட்டது’ என்பது இன்றைய ‘தினகரன்’[02.01.2023] செய்தி.

மக்களைக் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்கும் காவல்துறையினரின் பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சட்டதிட்டங்களைக் காட்டிலும் சாமிகளின் மீது இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

கருப்பண்ணசாமிக்குக் கிடா விருந்து வைத்ததுபோல், மாடசாமி, முனியப்பசாமி, அய்யனாரப்பன், பெரியாச்சி அம்மன், கருவாச்சி அம்மன் போன்ற இன்னும் பல சாமிகளுக்கும் இவர்கள் கிடா விருந்து அளித்தல் வேண்டும்.

கிடா வெட்டு, பொங்கல் என்று நின்றுவிடாமல், திருப்பதி, பழனி போன்ற பிரபலமான சாமி கோயில்களுக்குச் சென்று மொட்டை[முடி காணிக்கை] போடலாம். 

உருளுதண்டம்[எச்சில் இலைகள் மீது உருளுதல்] போட்டு நேர்ந்துகொள்ளலாம்.

நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டும் என்னும் கோரிக்கை நிறைவேற, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் காசி, கைலாயம்[இமயமலை], ராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களுக்குக் காவலர்கள் பயணம் மேற்கொள்வது பெரிதும் வரவேற்கத்தக்கது.

ஜோதிடர்களைக் கலந்தாலோசித்து, நவக்கிரகப் பூஜை, நெய் தீபம் ஏற்றுதல் போன்ற சடங்குகளை உரிய நேரங்களில் தவறாமல் மேற்கொள்ளுதல் தவிர்க்கக் கூடாதது ஆகும்.

காவல்நிலையங்களைக் காற்று, கறுப்பு போன்ற தீய சக்திகள் அண்டாமலிருக்க, வாஸ்து மேதைகளின் அறிவுரைப்படி, காவல்நிலையக் கட்டடங்களை இடித்துப் புதுப்பித்தல் பெரிதும் பயன் தருவதாக அமையும்.

இவ்வாறாகக் காவல்துறையினர் தங்களின் கடமைகளைச் சிறப்பாக ஆற்றுவதற்கு, தமிழ்நாடு அரசு உரிய ஆணைகளைப் பிறப்பித்தல் உடனடித் தேவை ஆகும். 

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

*‘கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களைத் தவறாமல் உரிய காலங்களில் செய்துமுடித்தல் வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் ஆணை பிறப்பித்தல்.

*நேர்த்திக் கடன்களை மனப்பூர்வமாகச் செய்து முடித்திடத் தோதாகத் தீவிரப் பக்தியுள்ளம் கொண்டவர்களையே காவலர்களாகப் பணியமர்த்துதல்.

இவை தவிர, அடியேனை ஒத்த அறிவுஜீவிகளிடம்[ஹி... ஹி... ஹி!!!] ஆலோசனை கேட்பின், அவர்கள் நேர்த்திக்கடன் நிறைவேறுவதற்கான மேலும் பல அரிய ஆலோசனைகளை வழங்கி உதவுவார்கள் என்பது உறுதி!

===========================================================================