அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 31 ஜனவரி, 2023

வந்து குவியும் வட இந்தியத் தொழிலாளர்கள்! வரவழைக்கும் சுயநலத் தமிழர்கள்!!

தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் வேலை செய்வதை ஊடகச் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.

உண்மையை ஒளிக்காமல் சொன்னால் அவர்களின் வருகைக்கு இங்குள்ள தமிழர்களே காரணம் ஆவார்கள். காரணங்களாவன.....

*லட்சக்கணக்கில் அவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள் என்றால், வணிக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் அவர்கள் பணியமர்த்தப்பட்ட இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்தவை என்பதில் சந்தேகமில்லை.

அவை ஏன் நிரப்பப்படவில்லை?

நிரப்புவதற்கு இங்குப் போதுமான அளவில் ஆட்கள் இல்லையா?

இல்லை என்றால், இங்கு அவர்கள் வேலை தேடி வந்ததிலோ, வேலையில் சேர்ந்திருப்பதிலோ தவறே இல்ல.

*காலி இடமெல்லாம் இல்லை. இங்குள்ளவர்கள், உரிய நேரத்திற்கு வருகை தந்து, ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தராததால், அப்படிப்பட்டவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வந்தேறிகள் அவ்விடங்களில் சேர்க்கப்பட்டார்கள் என்றால்.....

பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒருங்கிணைந்தோ, தொழிற்சங்கங்களின் உதவியுடனோ போராடாதது ஏன்?

ஓசைப்படாமல் இருந்துவிட்டு, இப்போது வடவர்கள் வந்து குவிகிறார்கள்; நாளை அவர்கள் ‘பெரும்பான்மையினர்’ ஆகி நம் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூச்சல் எழுப்புவதில் அர்த்தமே இல்லை.

வட மாநிலத்தவர் வரவுக்கு முக்கியக் காரணக்கர்த்தாக்களாக இருப்பவர்கள் வணிக நிறுவன& தொழில் நிறுவன முதலாளிகளும்கூட.

இவர்களுக்கு, தமிழன் என்னும் இன உணர்வு எப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இல்லை. குறைவான சம்பளத்தில் நிறைய வேலை செய்யும் ஆட்களே இவர்களுக்குத் தேவை.

அந்தத் தேவை வடவர்களால் நிறைவேறுவதால், இரு கரம் கூப்பி அவர்களை வரவேற்கிறார்கள்.

அடுத்து, வடமாநிலங்களில் வேலையில்லாதவர்களைத் திரட்டி, கூட்டம் கூட்டமாக இங்கே அழைத்துவந்து நிறுவனங்களில் வேலையில் சேர்த்துக் ‘கமிஷன்’ பெறும் ஏஜண்டுகளும் வட மாநிலத் தொழிலாளர்களின் வரவுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே, இங்கு வேலை செய்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், அங்கு வேலையில்லாமல் அலையும் தங்களின் சொந்தபந்தங்களை அழைத்து வருவதும் ஒரு காரணமாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களையெல்லாம் மறந்து இருந்துவிட்டு வடவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூச்சல் எழுப்புவதால் எந்தவொரு பயனும் இல்லை.

இனி நாம் செய்யவேண்டியவை பற்றி யோசிக்கலாம்.

செய்ய வேண்டியவை:

1.நிறுவன உரிமையாளர்களிடம், தம்மிடம் வேலை செய்யும் வடவரை நீக்கிவிட்டு, அவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும், மனசாட்சிப்படி, ஊதியத்தேற்ற உழைப்பை வழங்கும் தமிழர்களை அவ்விடங்களில் நியமிக்கப் பரிந்துரை செய்யலாம். மறுப்பவர்களை வழிக்குக் கொண்டுவர, நிறுவனத்தை நடத்த அனுமதி வழங்குதல், புதுப்பித்தல் போன்ற அதிகாரங்களை அரசு பயன்படுத்தலாம்.

2.இங்குள்ள தொழிற்சங்கங்கள் மூலம் வேலையில்லாமல் அலையும் இஞைர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

3.பட்டங்கள் பெற்று, படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் காலத்தை விரயம் செய்யும் இளைஞர்கள், தாம் விரும்பும் வகையிலான வேலை கிடைக்கும்வரை வடவர் செய்யும் வேலையைச் செய்திட முன்வருதல் வேண்டும்[பானிபூரி விற்பது உட்பட].

4இலவசங்கள் வழங்குவதில், அரசு இப்போதுள்ள தன் நிலையை மாற்றி, கடின உழைப்பைத் தர இயலாதவர்களுக்கும், முதியோர்களுக்கும் மட்டுமே ‘இலவசங்கள்’ என்னும் முடிவை மேற்கொள்ளுதல் வேண்டும்.

5.அரசும் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களிடையே உண்மையான தமிழின உணர்வைப் பரப்ப உரிய வழிமுறைகளைக் கையாள்வது உடனடித் தேவை.

அனைத்திற்கும் மேலாக, அரசு, இதற்கென வாழ்வியல் அறிஞர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, தக்க ஆலோசனைகளை வழங்கச்செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

***மேற்கண்ட வழிமுறைகளை உரிய வகையில் அரசு நடைமுறைப்படுத்தினால், இனி வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே இங்கு வேலை செய்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சாத்தியம் ஆகலாம்.

==============================================================================

***கருத்துகளைப் பதிவு செய்வதில் முழுக் கவனம் செலுத்தியதால், மொழியைக் கையாண்டதில் குறைகள் இருக்கலாம் என்பது அறியத்தக்கதாகும்.