'union' என்பதும் 'united' என்பதும் ஒன்றல்ல என்று சொல்லி, அவற்றுக்கிடையே உள்ள வேறுபட்ட அர்த்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருக்கிறார் இந்தக் கட்டுரையில்.
'united' என்றால், தனித்தனி அடையாளங்களுடன் ஒரு பொது நோக்கிற்காக இணைந்து செயல்படல் என்று பொருள் சொன்ன இவர், 'union' என்பதற்கும் 'இணைந்து செயல்படுதல்' என்று பொருள் கொள்ளாமல், 'பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலத்தல்' என்று விளக்கம் தருகிறார்.
மேற்கண்ட 'இரண்டு ஆங்கிலச் சொற்களும் ஒன்றல்ல' என்பதை மிகவும் வலியுறுத்தியிருக்கிறார். இதிலிருந்து இவருக்குள்ள ஆங்கில அறிவு எத்தனை அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது[அடியேனுக்கும் அரைவேக்காடு அறிவுதான். அவருடையதைக் காட்டிலும் என்னுடையது கொஞ்சம் 'உசத்தி'!].
ஆங்கில அகராதிகளின் உதவியுடன் இவ்விரு சொற்கள் பற்றியும் அறிந்துகொள்வது எளிதான செயல்தான்.
'Union' is a noun, describing something made up of united parts; unity... noun.
'unite' is a verb.
United is an adjective, or the past tense of the verb.
ஆக, union என்றாலும் united என்றாலும் பொருள் ஒன்றுதான்.
'indian union' என்றால், 'மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியா' என்பது இதற்கான தமிழ்.
'ஒன்றியம்'[ஒன்றுதல் > ஒன்று சேர்தல்] என்றாலும் ஒன்றிணைந்த என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
அதற்கு[ஒன்றியம்], 'பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலத்தல்' என்று விளக்கம் தருவது மிகத் தவறானது ஆகும்.
'இரண்டறக் கலத்தல் என்பதற்கு உரிய ஆங்கிலச் சொல். 'merge' என்பதாகும். இதற்கு, 'தங்கத்துடன் செம்பு கலப்பது' என்பது சரியான உதாரணம்.
மாநிலம் என்பது வெறும் நிலப்பரப்பைக் குறிக்கிறது என்பதைவிடவும் அதில் வாழ்கிற மக்களைக் குறிக்கிறது என்று சொல்வதே ஏற்புடையதாகும்.
இந்திய மாநில மக்கள் ஒன்றிணையாமல்[ஒன்றிணைந்து செயல்படுதல்], மாலன் சொல்வது போல், பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலப்பது சாத்தியமா?
அது சாத்தியப்பட வேண்டும் என்று இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆசைப்படுவது போல், மாலனும் ஆசைப்படுகிறாரா? அதாவது, ஏனைய இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லாம் தங்களுடை தாய்மொழிகளை மறப்பதோடு, தத்தம் மாநிலத்தையும்[தமிழ்நாடு, கேரளா.....] மறந்து இந்தி பேசுவோரின் மாநிலத்தவராகவே இரண்டறக் கலந்துவிடுதல் வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா? 'union' என்னும் சொல்லுக்குப் படாத பாடுபட்டு, 'இரண்டறக் கலத்தல்' என்று வலிந்து விளக்கம் தந்தது இதற்காகத்தானா?!
"ஆம்" என்றால், தமிழனாகப் பிறந்த இவர், இதைவிடவும் ஒரு பெரிய துரோகத்தைத் தன் இனத்தவருக்கு இனியும் செய்துவிட முடியாது.
மாலன் செய்யும் இந்தத் துரோகத்தை 'இவர் ஒரு தமிழன்' என்பதற்காகத் தமிழர்கள் மன்னிக்கக்கூடும். இந்தி அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மன்னிப்பார்களா?
'குமுதம்' ஆஸ்தான எழுத்தாளரான மாலன் இனியேனும் இம்மாதிரியான 'அபத்த'க் கட்டுரைகளை எழுதாமலிருப்பது இவருக்கு மட்டுமல்ல, குமுதம் இதழுக்கும் நல்லது!
==========================================================================