அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளில் மனித மூளையின் அளவு ஏற்ற, இறக்கம் இல்லாமல் நிலையாக இருந்தது.
ஆனால், இங்கே கவனிக்கத்தக்க முக்கிய மாற்றம் என்னவென்றால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மனித மூளையின் அளவு, சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைய ஆரம்பித்ததுதான். விளைவு.....
இப்போதைய மனிதனின் சராசரி மூளையின் அளவு 1,090 -1,175 மி.லி.; கடந்த காலங்களில் மனித மூளை விரிவடைந்த வேகத்தைக் காட்டிலும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மூளை சுருங்கும் வேகம் ஐம்பது மடங்காக ஆனது.
விலங்கு உலகில் அவற்றின் உடல் எடையுடன் ஒப்பிடுகையில், எடை அதிகமான மூளை கொண்ட விலங்கு மனிதனே.
திமிங்கிலத்துக்கு 9 கிலோ மூளையும் யானைக்கு 6 கிலோ மூளையும் உள்ளன. மனித மூளையின் எடையோ சுமார் 1.5 கிலோதான்.
உடல் எடையோடு ஒப்பிட்டால் திமிங்கிலத்தின் உடல் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. யானையின் எடையில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. மனிதனுக்கு மட்டும் அவன் எடையில் ஐம்பதில் ஒரு பங்காக மூளை இருக்கிறது.
மனித உடலில், ஆற்றலை அதிக அளவில் செலவு செய்யும் உறுப்பு மூளைதான். உடலின் எடையில் வெறும் இரண்டு சதவீதமே இருந்தாலும் மூளை மட்டும் இருபது சதவீத ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. எனவே, உடல் எடையில் மூளையின் அளவு அதிகரித்தால், அதற்கு ஏற்ப ஆற்றலும் அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பழுதாகிவிடும்.
பரிணாமத்தில் நேராக நிமிர்ந்து நடந்த ஹோமினின் வகை உயிரினங்களின் மூளை அளவு விரிவடைந்தது. கைகளைப் பயன்படுத்திக் கற்கருவிகளைத் தயாரித்து, உழைப்பைச் செலுத்தி, உணவு உற்பத்தியில் ஈடுபட்டதால், அதிக உணவைப் பெற முடிந்தது. மூளையின் வளர்ச்சிக்குத் தீனியும் போட முடிந்தது. மூளையின் அளவு அதிகரித்தாலும் தாக்குப்பிடிக்க முடிந்தது.
குழுவாக வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதன் கருவிகளை மட்டுமல்ல, நெருப்பையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தினான். அதன் மூலம் அதிக உணவு கிடைத்து; ஆற்றலையும் பெற முடிந்தது.
காலங்காலமாக வளர்ச்சி நிலையிலிருந்த மனித மூளை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிலிருந்து குறைய ஆரம்பித்தது.
ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்ளும் மூளையின் அளவு கூடினால், உடலின் மற்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. மூளையின் அளவு சிறியது என்றால் தேவையான திறன் இருக்காது. எனவே, மூளை செலவிடும் ஆற்றலையும் திறனையும் சமன் செய்யும் வகையில் பரிணாமம் அமைகிறது.
நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, மனிதன் தனிமரமாக இல்லாமல், சமூகம் எனும் தோப்பில் ஓர் அங்கம் ஆனான்.
தனித்தனியாக வாழ்ந்தால் ஒருவருக்குத் தேவைப்படும் அதே அளவு மூளை, சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் தேவைப்படாது. சமூகத்தில் உள்ள வேலைப் பிரிவினை காரணமாக ஒவ்வொருவரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் பணிகளில் நிபுணத்துவம் பெற்று, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம். எனவே தனித்துக் காட்டில் வாழும்போது தேவைப்படும் அதே அளவு மூளை, நவீன மனிதனுக்குத் தேவையில்லை என்றாகிறது.
சமூக வாழ்க்கை முறை உருவானதன் தொடர்ச்சியாக, எந்தெந்தச் சூழலில் எல்லாம் மூளையின் அளவு அதிகரிக்கும், அல்லது குறையும் என்பதை எறும்புகளின் உலகத்தை ஆராய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் 'ஜெர்மி டிசில்வா' போன்ற ஆராய்ச்சியாளர்கள்.
எறும்புகள் உலகத்தில் ஒவ்வோர் எறும்பும் குறிப்பிட்ட பணியைச் செய்கிறது. மனிதன் விவசாயம் செய்வது போலவே, சில வகை எறும்புகள் தமது புற்றில் பூஞ்சைகளை வளர்த்துச் சாப்பிடுகின்றன. எறும்புகளின் சமூகத்தில் வேலைப் பிரிவினை காரணமாக அறிவு பகிரப்படுகிறது. ஒவ்வோர் எறும்பும் ஏதோ ஒரு வேலையைச் செய்வதற்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே, எறும்பின் மூளை இந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில், அளவில் சற்றே குறைந்திருக்கிறது. வேலைப் பிரிவினை, கூட்டு முடிவுகளை எடுத்தல் போன்றவை எறும்புகள் உலகத்துக்கும் மனித சமூகத்துக்கும் பொதுவானவை.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய நதிக்கரை நாகரிகம் போன்ற பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாகத் தனி மனிதர்களின் சராசரி மூளையின் அளவு சிறுத்துவிட்டது. ஆனாலும் அறிவு குறைந்துவிடவில்லை.
காட்டில் வாழ்ந்தபோது ஒவ்வொருவரும் தகவல்களைத் திரட்டி, நினைவில் தக்கவைக்கும் அளவுக்குத் தேவைப்பட்ட பெரிய மூளை இப்போது தேவையில்லை. சமூக அறிவு இருப்பதால் சற்றே சிறிய மூளைகூடப் போதுமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
*****கருத்துப் பிறழ்வு நேராத வகையில், மூலக் கட்டுரையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
==========================================================================
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com
நன்றி:
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/740425-why-is-the-human-brain-shrinking-4.html - வியாழன், பிப்ரவரி 17 2022