மனம்போன போக்கில் சாமிகளை[கடவுள்கள்]க் கற்பித்து, கோடிக்கணக்கில் ரூபாய் செலவழித்துக் கோயில்கள் கட்டி, சிலைகளை நிறுவி, விஷேச நாட்கள் என்று ஒரு பட்டியலும் போட்டு, அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து, காலங்காலமாய் விஷமிகள் கூட்டம் அடிக்கும் கொட்டத்திற்கு ஓர் எல்லையே இல்லை[அன்று நாடாண்ட மன்னர்கள் என்றால், இன்று அதிகார வர்க்கம் இவர்களை ஆதரிக்கிறது].
கீழ்க்காண்பது, சாமிகளுக்கு அபிஷேகம்[பக்தர்கள் திருப்திக்காக, சிலையை நீரால் குளிப்பாட்டி, தூய்மைப்படுத்தி, தீபாராதனை காட்டிப் பூஜை செய்தால் போதாதா?] செய்வதற்குரிய நாட்களென இந்த மோசடிக் கும்பல்கள் போட்ட பட்டியல்.
+++ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கும், நவக்கிரகங்களுக்கும்.
+++திங்கட்கிழமை சிவனுக்கு.
+++செவ்வாய்> முருகன்
+++புதன்கிழமை> பெருமாள்
+++வியாழன்> தெட்சிணாமூர்த்தி
+++வெள்ளி> அம்பாள்
+++சனிக்கிழமை > ஆஞ்சநேயன்[ராமாயணக் கதை எழுதிய வால்மீகியால் கடவுள் ஆக்கப்பட்ட குரங்கு]
எதற்கு இந்த நாட்கணக்கு?
இவர்கள் ஒதுக்கிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் அபிஷேகம் செய்யப்படும் சாமிகள் தோஷங்களுக்கு உள்ளாகுமா?
குளிராமல் சூடேறிக் கொதித்து உடம்பெல்லாம் கொப்புளங்கள் தோன்றுமா? ஒட்டுமொத்த உடம்பும் கருகிச் சாம்பலாகுமா?
எதற்கய்யா இந்தக் குளிர்ச்சியூட்டி, கமகமக்கச் செய்யும் வாசனைத் திரவியங்களால் செய்யப்படும் அபிஷேகம்?
உடம்பு நாறும் அளவுக்கு அழுகிய உணவுப் பண்டங்களைத் தின்று ஜீரணிக்கிறதுகளா இந்தச் சாமிகள்?
உடல் உழைப்பே இல்லாமலும் குளிக்காமலும், ஒட்டுமொத்த உடம்பும் நாறிக் கிடக்கும் சோம்பேறிகளா இதுகளெல்லாம்?
கேள்வி கேட்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லையா லட்சக்கணக்கில் குவிந்து மூடத்தனத்தை விலை கொடுத்து வாங்கும் பக்தர்களுக்கு?
அபிஷேகங்கள் செய்து பிரார்த்திப்பதால் விளையும் பயன்களையும் பின்வருமாறு அடுக்குகிறார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
சுத்தமான தண்ணீர் அபிஷேகம் - காரியச் சித்தி உண்டாகும்.
நல்லெண்ணைய் அபிஷேகம் - வீட்டுப் பிரச்னைகள் தீரும்.
பால் அபிஷேகம் - ஆயுள் அதிகரிக்கும்.
பசுந்தயிர் அபிஷேகம் - குழந்தைப் பாக்கியத்தை உண்டாக்கும்.
பஞ்சாமிருதம் அபிஷேகம் - உடல் நலம் பெறுவதோடு செல்வமும் பெருகும்.
நெய் அபிஷேகம் - மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்கும்.
தேன் அபிஷேகம் - வாழ்வு இனிமையாகும்.
மாப்பொடி அபிஷேகம் - கடன் தொல்லை தீரும்.
இளநீர் அபிஷேகம் - குடும்பம் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்..
கரும்புச்சாறு அபிஷேகம் - பிணிகள் அகன்று, ஆரோக்கியம் பெருகும்.
மஞ்சள் பொடி அபிஷேகம் - பிறரை வசியமாக்கும் வசீகரம் கிட்டும்.
சந்தன அபிஷேகம் - எட்டுவிதச் செல்வங்களும் கிடைக்கும்.
சாணம் +கோமியம் கலந்தகலவை - பாவங்கள் போக்கும்.
நெல்லி முள்ளிப் பொடி அபிஷேகம் - நம்மைப் பிடித்திருக்கும் நோய்கள் நீங்கும்.
வாழைப்பழம் அபிஷேகம் - உணவு மற்றும் வாணிபப் பயிர்கள் செழித்து வளரும்.
எலுமிச்சை சாறு அபிஷேகம் - மனதில் தோன்றும் இனம்புரியாத பயம் நீங்கும்.
இப்படி இன்னும் எப்படியெல்லாமோ மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன இந்த நாசகாரக் கும்பல்கள். ஆட்சியாளர்கள் திருந்தினால் மட்டுமே இவர்களின் கொட்டம் அடங்கும்!
* * * * *

