எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 31 ஜூலை, 2025

மனிதரும் கடவுளும் ‘ஏறத்தாழ’க் கடவுள்களும்!!!

பொருள்களோ உயிர்களோ மாறாதவை என்று எவையும் இல்லை[அணுக்கள் உட்பட>https://www.google.com/search]  உரு மாறி மாறி ஒரு கட்டத்தில் அழிந்துபோகின்றன.

மாற்றமோ அழிவோ இல்லாத ஒன்று உண்டா என்பது எவருக்கும் தெரியாது[ஆராய்ந்து கண்டறியப்படவில்லை].

ஆனாலும், அழிவே இல்லாத ஒன்று இருந்தால், அதை வழிபட்டுச் செத்தொழிந்த பின்னரும் ஏதோ ஒரு வடிவில்[கண்ணுக்குப் புலனாகாதது] வாழ்ந்திட ஆசைப்பட்டான் மனிதன்.

அதன் விளைவு..... 

‘கடவுள்’ உண்டு என்றான்; அவர் அழிவே இல்லாதவர், அதாவது என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவர் என்றான். தனக்காக அழிவில்லாத ‘ஆன்மா’ வையும் கற்பித்தான்.

கற்பனை செய்வதில் முன்னிலை வகித்தவர்களை அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும், ஞானிகள் என்றும் புகழ்ந்தான். அவர்களையும் ‘ஏறத்தாழ’ கடவுள்கள் ஆக்கினான்.

உண்மையில் கடவுளையோ ஆன்மாவையோ கண்டவரில்லை; பிறருக்குக் காட்டியவரும் இல்லை; உணர்ந்ததாகச் சொன்னவர் உண்டே தவிரப் பிறருக்கு உணர்த்தியவரும் இல்லை.

ஆசை காரணமாக இவன் கடவுளைக் கற்பித்ததன் விளைவு, குரங்கு[எங்கள் ஊர் குரங்குக் கடவுள் ‘ஆஞ்சநேயர்’ உலகப் புகழ் பெற்றவர். ஹி... ஹி... ஹி!!!], சிங்கம்[நரசிங்கம்] மயில், மாடு, கழுகு, நாய், பன்றி[வராகம்], பாம்பு போன்ற ஆறறிவில்லாத உயிரினங்கள் எல்லாம் கடவுள்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

மனிதன் மட்டும் ஆறறிவு இருந்தும் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஐந்தறிவு விலங்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

பாவம் மனிதன்!