பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

குட்டை ஒன்று! மட்டைகள்[மதங்கள்] இரண்டு!!





'ஆண்டுகள், மாதங்கள், கிழமைகள் என்றிவை எல்லாமே மனிதர்கள், தங்களின் செயல்பாடுகளை ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு நிகழ்த்துவதற்காகவும், கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவும், வருங்காலத்திற்கான பணிகளைத் திட்டமிட்டுச் செய்துமுடிப்பதற்காகவும் சூரியன், சந்திரன், பூமி போன்றவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர, இயற்கையாக அமையப்பெற்றவை அல்ல. 'இது நல்லது, இது கெட்டது' என்று பாகுபாடு செய்வது அறியாமையின் பாற்பட்டது. இந்தவொரு கருத்தாக்கத்தை மனதில் இருத்திக் கீழ்வரும் பதிவைப் படியுங்கள்.  

ஞாயிற்றுக்கிழமை:

இந்துக்களுக்கு இது நல்ல நாள் அல்ல. புதிதாக எந்தவொரு செயலையும் இந்தக் கிழமையில் செய்யத்தொடங்குதல் கூடாது என்பது இவர்களின் நம்பிக்கை. பழங்கள் காய்கறிகள் உட்பட எதையும் 'வெட்டுதல்' கூடாது என்பதும் இவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய நெறியாகும்.

இசுலாமியர்களும்கூட அனைத்து ஞாயிற்றுகளையும் நல்ல கிழமைகள் என்று நம்புவதில்லை. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை மட்டும் சிறப்பானதாகக் கருதுகிறார்கள். மதம் சம்பந்தப்பட்ட, மசூதிகளைப் பெருக்கித் தூய்மைப்படுத்தல் போன்ற முக்கியக் கடமைகளை இந்த நாளில் செய்வார்கள்.

திங்கள்:

இது சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால் இந்துமதம் சார்ந்த பெண்கள் 'ஊசிநூல்' கொண்டு ஆடைகளைத் தைக்கமாட்டார்கள். இந்த நாளில் மாலை நேரத்தில் உணவு உண்டால் ஆண் குழந்தை பிறக்காது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தலைவாரக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இசுலாமியர்களும் இந்தச் செவ்வாயைப் புனிதமற்ற நாளாகவே கருதுகிறார்கள். ஆவிகள் சுறுசுறுப்புடன் இயங்கும் இந்த நாளில், வீடு கட்டத்தொடங்குதல் போன்ற காரியங்களைச் செய்தல் கூடாது என்று எண்ணுகிறார்கள்.

புதன்:

பயணம் மேற்கொள்வது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, அறுவடை செய்வது, தானியங்களை அளப்பது என்றிவ்வாறான சில செயல்களைச் செய்தல் கூடாது என்பது இந்துக்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகளாகும்.

இசுலாமியர்கள் இதை 'லாபம் தரும் நாள்' என்று கருதுகிறார்கள். 'சுன்னத்' என்னும் சடங்கைச் செய்வதற்கு உரிய 'புனித' நாள் என்று நம்புகிறார்கள். புதனில் குழந்தை பெறுவது மிக நல்லது என்றும் நினைக்கிறார்கள்.

வியாழன்:

இந்து, இசுலாம் ஆகிய இரு மதங்களைச் சார்ந்தவர்களுமே, உழவுப் பணிகளை மேற்கொள்ளுதல், பயணம் புறப்படுதல் போன்றவற்றிற்கு உகந்த நாள் வியாழன் என்று கருதுகிறார்கள். இந்த நாளில் இரவு நேரத்தில் பிறக்கும் குழந்தை சிறப்பான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகுமாம்.

வெள்ளி:

இது சக்திக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்துவதற்கான நாள். தானியங்களை அரைப்பது, உரலில் இட்டுக் குத்துவது போன்ற செயல்களைச் செய்தல் கூடாது என்கிறார்கள் இந்துக்கள்.

இந்தக் கிழமையில் பிறப்பது இறப்பது என்னும் இரண்டுமே நற்பேற்றினை வழங்குபவை என்பது இசுலாமியர் நம்பிக்கை. இந்த நாளில் தானதருமங்கள் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்குமாம்.

சனி:

சனிக் கிரகத்துடன் தொடர்புள்ள இந்தச் சனிக்கிழமை தீய சக்திகளுக்குரிய நாளாம். உழுதல், பயணம் போவதெல்லாம் கூடாதாம். புத்தாடை உடுத்துவது, முகச்சவரம் செய்வதெல்லாம்கூடத் தீமை பயக்குமாம். இந்த நம்பிக்கைகள் இந்து மதத்தினர்க்கானவை.

இந்த நாட்கள் திருமணம், சுன்னத் சடங்கு போன்றவற்றிற்கு உரிய நாளல்ல என்கிறார்கள் இசுலாமியர்கள். இந்த நாளில் வேட்டைக்குச் செல்வதுகூடத் தடை செய்யப்பட்டுள்ளதாம்.

                                        *   *   *   *

*****இரண்டு முக்கிய மதங்களின் 'கிழமை' குறித்த நம்பிக்கைகள் மேலே விவரிக்கப்பட்டுள்ளன.

தலைப்பில் உள்ள 'குட்டை' என்னும் சொல் 'மூடநம்பிக்கை'யைக் குறிக்கிறதா, 'அறிவார்ந்த வாழ்க்கை நெறி'யைச் சுட்டுகிறதா என்பதை முடிவு செய்வது அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது!

ஹி...ஹி...ஹி!!!

==========================================================================

குறிப்பு:

'குட்டை ஒன்று! மட்டைகள்[மதங்கள்] மூன்று!!' என்ற தலைப்பில்தான் எழுத இருந்தேன். தகவல் சேகரிப்பதில் நேர்ந்த இடர்ப்பாடு காரணமாக அது இயலாமல்போனது.

பதிவுக்கான தகவல்கள் கொஞ்சம் நாட்களுக்கு முன்பே சேகரித்தவை. உதவிய நூல் குறித்த விவரங்கள் இருப்பில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.