பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 14 ஜூலை, 2022

கற்பழிப்புக் குற்றங்களும் காயடித்தலும் 'காணொலி' வெளியீடும்!!!

'தங்கள் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்திட வழிவகுக்கும் சட்ட மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு 'செனட் சபை' ஒப்புதல் அளித்துள்ளது' என்னும் செய்தி நேற்று[13.07.2022] வெளியானது[https://tamil.oneindia.com/news/international/thailand-approves-chemical-castration-for-sex-offenders/articlecontent-pf723786-466099.html]. - July 13, 2022


கற்பழிப்பில்[பாலியல் வன்புணர்வு என்பதே சரி] ஈடுபட்டவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தல் என்னும் இந்தச் செய்தி நம் கிராமப்புறங்களில் காளைகளுக்கு 'விரை நீக்கம்' செய்யும் வழக்கத்தை நினைவுபடுத்தியது. பசுக்களுடன் காளைகள் புணர்ச்சி செய்வதைத் தடுத்து, எருதுகளாக மாற்றி, ஏரில் பூட்டி உழுவதற்காக இம்முறை கையாளப்படுகிறது[திணவெடுத்துச் சேர்க்கைக்காக அலையும் காளைகள் விரை நீக்கம் செய்த பின்னர் சாதுவாக மாறிவிடும்].

இதைவிடவும் உலக நாடுகளில் சில மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றன.

*சீனா மரண தண்டனை விதிக்கிறது, அல்லது, குற்றவாளியின் ஆணுறுப்பையே வெட்டி எறிகிறது.

*வட கொரியா, வன்புணர்வுக் குற்றவாளிகளைப் பின்மண்டையில் சுட்டுக் கொல்கிறது.

*ஆப்கானிஸ்தானில், நான்கே நாட்களில் வன்புணர்வுக் குற்றங்கள் விசாரிக்கப்பட்டுக் குற்றவாளி தலையில் சுடப்பட்டுக் கொல்லப்படுகிறான்.

*சவுதி அரேபியாவில் குற்றம் நடந்த சில நாட்களிலேயே நீதி வழங்கப்படும். குற்றவாளி பொதுவில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுகிறான்.

*ஈரானும், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடுகிறது.

*ஐக்கிய அரபு நாடுகள் சிலவற்றில் கல்லால் அடித்துக் கொல்வதும் நடைமுறையில் உள்ளது.

*ஏதோ ஒரு நாட்டில் குற்றவாளியின் ஆணுறுப்பை நாய்களை ஏவிக் கடித்துக் குதறச் செய்வதும் வழக்கத்தில் உள்ளதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது.


ப்படியாகத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தும், இக்குற்றங்கள் குறைந்தபாடில்லை[உலகளவில், தினமும் 6 பெண்களில் ஒருவர் வீதம்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களாம். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பெண்கள்  இக்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். இங்கே குற்றம் புரிவோர் எண்ணிக்கை மிக மிக அதிகம்]. 

நுணுகி ஆராய்ந்தால், குற்றம் புரிந்தோர்க்குத் தண்டனைகள் வழங்கப்படும் நடைமுறை அனைத்து ஆடவர்களையும் சென்றடைவதில்லை என்பது புரியும்.

சில கூடுதல் வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் இதைச் செயல்படுத்தலாம். அவையாவன:

1.குற்றவாளி தண்டிக்கப்படுவதைக் காணொலியாக்கி யூடியூபில் வெளியிடுதல் அவசியம்[இதைக் காணும் வாய்ப்பை மக்கள் தவறவிடவே மாட்டார்கள்].

2.இக்காணொலியை அனைவருடைய அலைபேசிகளுக்கும் கணினிகளுக்கும் அனுப்பி வைத்தல் வேண்டும்.

3.திரைப்படங்களிலும், தொ.கா.தொடர்களிலும், புகை பிடிக்கும் நிகழ்வு இடம்பெறும்போது, 'புகைப் பழக்கம் புற்றுநோயை உண்டுபண்ணும்' என்று எச்சரிக்கை செய்து விளம்பரம் தருவது போல, வன்புணர்வுக் காட்சிகள் இடம்பெறுகையில்,  'வன்புணர்வில் ஈடுபடும் ஆடவன் காயடிக்கப்படுவான்' என்று செய்தி வெளியிடலாம்.

4.தண்டனைக்குரியவனின் பெயர், தண்டனை வழங்கப்படும் நாள், அதற்கான இடம் ஆகியவற்றை ஊடகங்கள் வாயிலாக முன்கூட்டியே செய்தியாக அறிவித்தல் அவசியம்.

பலரும் இணைந்து சிந்தித்தால் இன்னும் சிறந்த வழிமுறைகள் தென்படக்கூடும்.

======================================================================================