பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 13 ஜூலை, 2022

வாழ்க கடவுள்! வாழ்க கடவுளர்கள்!!

'கடவுள் இருப்பது உண்மையே' என்னும் 'தற்காலிக' நம்பிக்கையுடன் கீழ்க்காணும் பதிவை வாசித்திட வேண்டுகிறேன்.

                                                          *   *   *   *   *

உருண்டை வடிவிலான கோளமா, சதுரமா, நீள்சதுரமா, முக்கோணமா என்று கணித விதிப்படி கணிக்க இயலாத வகையில் விரிந்து பரந்து கிடக்கும் 'வான்வெளி'க்கு எல்லை கிடையாது; மையப் புள்ளியும் இல்லை. 

மேற்கண்டவற்றில் அது எதுவாகவும் இல்லை. 

எல்லை என்று எதை நிர்ணயத்தாலும் அந்த எல்லைக்கப்பாலும் கோள்களும் நட்சத்திரங்களும் உள்ளடங்கிய வெளியோ, வெற்றிடமோ, வேறு எதுவோ, எதுவெல்லாமோ இருந்தாக வேண்டும். அந்த அவற்றிற்கு எல்லை வகுத்து வரம்பு கட்டுதல் சாத்தியமே இல்லை. 

ஆக, மனித அறிவால் எந்தவொரு அளவுகோல் கொண்டும் கணிக்கவே இயலாதது வான்வெளி என்பது உறுதியாகிறது.

வான்வெளி எந்தவொரு கணிப்புக்கும் கட்டுப்படாதிருத்தல் போலவே கடவுள் எனப்படுபவரும் எவ்வகையானதொரு கணிப்புக்கும் கட்டுப்படாதவர் ஆவார்.

கட்டுக்குள் அடங்காதவரான இந்தக் கடவுளை, 'ஒன்று' என்னும் எண்ணுக்குள் அடக்கியிருக்கிறார்கள் மதவாதிகளும் ஆன்மிகர்களும். அதாவது, கடவுள் ஒருவரே என்பது அவர்களின் திடமான முடிவு.

ஒரு காலக்கட்டத்தில், ஞானிகள் என்று அழைக்கப்பட்டவர்களோ, கடவுளின் அதி தீவிர அபிமானிகளோ 'கடவுள் ஒருவரே' என்று சொல்லிவைக்க, ஆன்மிகவாதிகளும் மதவாதிகளும் அதை அன்றிலிருந்து இன்றுவரை வழிமொழிந்தார்கள்; மொழிந்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாக, 'கடவுளர் பலர் உளர்' என்னும் ஆதிகாலத்து நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழிக்கப்பட்டது.

பல கடவுள்கள் இல்லை என்பதை அவர்கள் எப்படிக் கண்டறிந்தார்கள்? போதிய ஆதாரங்கள் உண்டா?

இல்லை; இல்லவே இல்லை.

மனிதர்களாகிய தங்களைப் போலவே, ஆதிக்க மனப்பான்மையால் அவர்களும் சண்டையிட்டுக்கொண்டார்கள். அத்தனைக் கடவுள்களும் அழிந்தொழிய, பலசாலியான 'ஒருவர்' மட்டுமே மிஞ்சினார் என்பது அவர்களின் கணக்கு போலும்.

அவர்கள் வணங்குகிற அந்த 'ஒரு' கடவுளைக் கருணாமூர்த்தி என்கிறார்கள்.

அது உண்மையானால்.....

அவர்களின் அந்த ஒரு கடவுள் மட்டுமல்ல, கடவுள்கள் எத்தனைப் பேர் இருந்தாலும் அத்தனைப் பேரும் கருணாமூர்த்திகள்தான். அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்துவிட வாய்ப்பே இல்லை.

ஆக,

மேற்கண்ட காரணங்களாலும், கடவுள் 'ஒருவர்' என்பதையோ, 'பலர்' என்பதையோ அறிவியல் ஆதாரங்களுடன் இந்நாள்வரை எவரும் நிரூபிக்கவில்லை என்பதாலும்.....

"கடவுள் எனப்படுபவர் 'ஒத்தை' நபராகத்தான் இருத்தல் வேண்டும் என்பதில்லை; மிகப் பலராகவும் பல்லாயிரவராகவும் இருத்தல்கூடும்" என்று சொல்லிக்கொள்ளலாம்; உலகெங்கும் பரப்புரை செய்யலாம்!

வாழ்க கடவுள்! வாழ்க கடவுளர்கள்!! ஹி... ஹி... ஹி!!!

                                             *   *   *   *   *

தொடர்புள்ள பழைய இடுகை:

அதென்ன, ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு?! https://kadavulinkadavul.blogspot.com/2019/11/blog-post_6.html

======================================================================================