செவ்வாய், 12 ஜூலை, 2022

புத்தரின் தத்துவங்களில் புரிந்தவையும் புரியாதவையும்!!

*இயற்கை அநித்தியமானது[அநித்தியம் > நித்தியம் அல்லாதது. நித்தியம் > நிலையானது, அதாவது அழிவற்றது. இயற்கையில் எந்தவொரு பொருளும் உயிரும் நிலையானது அல்ல; அழியக்கூடியதே].

*இயற்கை துக்கமயமானது[உயிர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. இன்பமும் உண்டு என்றோ, இரண்டும் சம அளவிலானவை என்றோ கொள்வதற்கு இடமில்லை].

*அநான்மியம்[ஆன்மா இல்லாதது].

புத்தர் கண்டறிந்த தத்துவங்களில் மேற்கண்ட மூன்றும் முக்கியமானவை ஆகும்['புத்தரின் போதனைகள்', வ.உ.சி.நூலகம், சென்னை].

'இயற்கையிலுள்ள எல்லாமே தோன்றி அழியக்கூடியவை' என்பதும், வாழ்க்கை என்பது துன்பமயமானது[குறைந்த அளவில் இன்பமும் கலந்தது என்று புத்தர் சொல்லவில்லை. நாம் சொல்லிக்கொள்ளலாம்] என்பதும் எவராலும் மறுக்க இயலாத உண்மைகளாகும்.

இந்த உண்மைகள்தான் கடவுளின் 'இருப்பு' குறித்துக் கேள்வி எழுப்பத் தூண்டுபவை. அதாவது,  'கடவுள் இல்லை[கடவுள் நல்லவராக இருந்தால் அதிக அளவில் துன்பத்தை அனுபவிக்கும் வகையில் உயிர்களைப் படைத்திருக்க வாய்ப்பில்லை] என்று சொல்ல வைப்பவை.

கடவுள் உண்டா என்னும் கேள்விக்குப் புத்தர் மௌனத்தையே பதிலாகத் தந்தார் என்பதை இங்கு கருத்தில் கொள்க.

புத்தரின் இந்தத் தத்துவங்கள் எளிதில் புரிவனவாகவும், நடுநிலைச் சிந்தனையாளர்களால் ஏற்கத்தக்கனவாகவும் உள்ளன.

ஆன்மா உண்டு என்று சொன்னவர்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்காததாலும், இக்கால அறிவியலும் இதை ஏற்க மறுப்பதாலும் 'பொருள்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை' என்கிற புத்தரின் மூன்றாவது தத்துவமும் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.

அடுத்ததாக, 'துக்கம்' பற்றி விவரிக்கப் புகுந்த புத்தர், 'துக்கத்திற்குக் காரணம் பிறப்பு. பிறப்புக்குக் காரணம் ஆசை'; அதாவது, 'ஒரு பிறவியில் ஆசைப்படுவதால்தான் மீண்டும் பிறக்கிறோம்' என்று அவர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 

ஆன்மா என்ற ஒன்றே இல்லாதபோது[உயிர்களுக்கு ஆன்மா இல்லை என்பவர் புத்தர்] மறுபிறப்பு எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது.

எனவே, மறுபிறப்பில் புத்தர் நம்பிக்கை கொண்டிருந்ததாகச் சொல்லப்படுவது தவறு என்றே தோன்றுகிறது.

புத்தரின் காலத்திற்குப் பிறகு, அம்மதம் சார்ந்தவர்கள், அல்லது, பிற மதத்தவர் தம் மனம் போன போக்கில் பல திணிப்புகளைச் செய்தார்கள். அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

அவர் அறிவுறுத்தியதெல்லாம், இப்பிறப்பில் வாழும் முறைகள் பற்றி மட்டுமே.

'ஆசைக்குக் காரணம் 'அறியாமை'. அறியாமையிலிருந்து விடுபட்டு 'மெய்யறிவு பெற்றால் 'நிர்வாணம்' என்கிற 'முக்தி' நிலையை அடையலாம்' என்றும் சொல்கிறார்[இந்த நிர்வாணம், முக்தி பற்றியெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. இவையும், பின்னர் நிகழ்த்தப்பட்ட திணிப்புகளோ என்னும் ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை].

அறியாமையிலிருந்து விடுபட்டால் 'நிர்வாணம்'... சரி.

அதென்ன நிர்வாணம்?

விருப்பு வெறுப்பற்ற வெறுமையான நிலையா?

அந்நிலைதான் முக்தியா?

அதை உணர்வது எப்படி?

உணர முடிகிறதோ இல்லையோ, வெறுமை நிலையை[நிர்வாணம்] அடைந்த பிறகு நாம் என்ன ஆகிறோம்? அந்நிலையில் நம் செயல்பாடு என்னவாக இருக்கும்?!

புரியவில்லை!

                                    *   *   *   *   *

இதையும் வாசிக்கலாம்:

'புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததா?' 

https://kadavulinkadavul.blogspot.com/2017/03/blog-post_3.html [தேடுபொறியில் பதிவிடுக]

======================================================================================