வியாழன், 18 ஜூன், 2020

‘சிகரங்கள்’...கதையின் தலைப்பு ‘பழசு’! ‘கரு’...புத்தம் புதுசு!!

கிஞ்சித்தும் கவர்ச்சி சேர்க்கப்படவில்லை; ‘கலகல’ உரையாடல் இல்லை; சிலிர்ப்பூட்டும் வர்ணனை இல்லை; எதிர்பாராத முடிவுகூட இல்லை. ஆனாலும், இது கதைதான்; ‘நல்ல’ கதையும்கூட.!


கதைத் தலைப்பு:                         ‘சிகரங்கள்’

காந்திநேசன், அன்று காலை தான் வகித்துவந்த ‘முதல்வர்’ பதவியை உதறித் தள்ளினார். மாலையில்  வீடு திரும்பினார்.

வீட்டிற்குள் நுழையும்போதே, அவர் மகன் சத்தியன், “ஏம்ப்பா வயசான காலத்தில் உங்களுக்கு இப்படிப் புத்தி போகுது?” என்று கேட்டு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.

மனைவி மெய்யம்மை அவள் பங்குக்கு, “உங்களுக்குப் பித்தம் தலைக்கேறிடிச்சா?” என்று கடிந்துகொண்டாள்.

‘உட்கார்ந்து பேசுவோம்’ என்பது போல, சாய்வு நாற்காலியில் சரிந்தார் காந்திநேசன்.

மகனையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். இருவரும் சண்டைக் கோழிகளாய்த் தெரிந்தார்கள். “நேரே விசயத்துக்கு வரலாம்” என்றார்.

“நீங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டதா உங்க கல்லூரிக் கணிதப் பேராசிரியர் கணேசன் தொலைபேசியில் சொன்னார். ஏன் அப்படிச் செஞ்சீங்க?” -சத்தியன் கணை தொடுத்தான்.

“காரணத்தையும் அவரே சொல்லியிருப்பாரே?”

“சொன்னார். இத்தனை காலமும் தகுதி அடிப்படையில் நீங்கள் மாணவர்களச் சேர்த்தீங்களாம். இந்த ஆண்டு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரணும்னு புதிய நிர்வாகி உங்களுக்கு உத்தரவு போட்டாராம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையாம். அவரோட சண்டை போட்டீங்களாம். பதவியை உதறித் தள்ளிட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களாம்.” -சத்தியன் குரலில் எகத்தாளம். 

“அவரே எல்லாம் சொல்லிட்டார். அப்புறம் எதுக்கு என்னிடம் அனாவசியக் கேள்வி?”

“கல்யாணத்துக்கு ஒரு மகள் காத்திருக்கிறது ஞாபகம் வந்து ராஜினாமாவை வாபஸ் வாங்கிட மாட்டீங்களான்னு ஒரு நப்பாசைதான்” என்றாள் அவரின் மனைவி மெய்யம்மை குத்தலாக.

“பதவியில் நேர்மையைக் கடைபிடிப்பது என் கொள்கை. எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துப் பழக்கமில்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் காந்திநேசன்.

“பெத்த மகன் தனியார் கம்பெனியில் அற்பமான சம்பளத்துக்கு நாயாய்ப் பேயாய் அலையுறான். சின்னதா ஒரு தொழில் தொடங்கப் பத்து லட்சம் கேட்குறான். திரட்டித் தர வக்கில்ல. வீட்டுமனை வாங்கிப்போட்டு நாலு வருசம் ஆகிப்போச்சு. ஒரு வீடு கட்ட யோக்கியதை இல்ல. உங்க சிநேகிதர்  சிதம்பரம் பள்ளிக்கூட வாத்தியார். வேலையையும் பார்த்துகிட்டே டியூசன் நடத்துறது, கல்வித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து வாத்தியார்களுக்கு மாறுதல் வாங்கித் தர்றது, விடைத்தாளில் தில்லுமுல்லு பண்றதுன்னு ஏதேதோ செஞ்சி ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சுட்டார். நீங்கதான் நேர்மை நியாம்னு சம்பளம் மட்டுமே வாங்கிட்டு இருக்கீங்க.” -பொரிந்தாள் மெய்யம்மை.

சத்தியன் வரிந்து கட்டினான்: “அப்பா, தெரியாமத்தான் கேட்குறேன், உங்கள மாதிரி இளிச்சவாயனுங்க நாட்டுல எத்தனை பேர் தேறுவாங்க?” என்றான்.

“எனக்குத் தெரியாதுப்பா.”

“நேர்மையா வாழ்ந்து நீங்க சாதிச்சது என்ன? ஒன்னுமில்ல. சம்பாதிச்சது எவ்வளவு? வெறும் சம்பளம்தான். எதுக்காக நேர்மையைக் கட்டிகிட்டு அழறீங்க? ஊர் உலகம் பாராட்டணும்னா?” 

“இல்ல.”

“அரசாங்கம் உங்க நேர்மையை மெச்சி, உத்தமர், சத்தியர்னு பட்டம் கொடுக்கும்னு எதிர்பார்க்கிறீங்களா?’

“இல்லப்பா.”

“பாவம் புண்ணியம்னு.....”

“இல்லவே இல்ல.”

“பின்ன ஏம்பா நேர்மை நியாயம்னு கிடந்து சாகறீங்க?” -ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டான் சத்தியன்.

கொஞ்சமும் நிதானம் இழக்காமல் காந்திநேசன் சொன்னார்: “ஊருலகத்தைப் பத்திக் கவலைப்படாம, பலாபலன்களை எதிர்பார்க்காம நேர்மையா வாழுறவங்க இன்னிக்கும் இருக்கத்தான் செய்யுறாங்க. அவர்களால ஈர்க்கப்பட்டு நேர்மையா வாழ்க்கை நடத்துறவங்களும் இருக்கவே செய்யுறாங்க. நான் இரண்டாம் வகை.” -பெருமிதத்துடன் புன்னகைத்துக்கொண்ட காந்திநேசன், தொடர்ந்தார்.

“இந்தக் கல்லூரிக்கு நான் வேலை தேடிப் போனபோது, அப்போதிருந்த கல்லூரி நிர்வாகி, தன் சொந்தபந்தங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, தகுதி அடிப்படையில் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுத்தார். உண்மையா உழைச்சேன். அனுபவ அடிப்படையில் கல்லூரி முதல்வராகவும் ஆனேன்.....

.....மாணவர் சேர்க்கையிலும், தேர்வுகள் நடத்துவதிலும் நேர்மையைக் கடைபிடிச்சேன். நிர்வாகி அதற்கு முழு ஆதரவு தந்தார். அவருக்கப்புறம் பொறுப்புக்கு வந்த அவரின் மகன், வழக்கமா வர்ற வருமானம் போதாதுன்னு, மாணவர் சேர்க்கையில் நன்கொடைங்கிற பேரில் லஞ்சம் வாங்கச் சொன்னார். எனக்கு விருப்பம் இல்ல. அவரைப் பகைச்சுகிட்டுப் பதவியில் நீடிப்பது முடியாதுன்னு தெரிஞ்சுது. விலகிட்டேன். இதே ஊரில் உள்ள இன்னொரு கல்லூரி நிர்வாகி, அவர் கல்லூரிக்கு என்னை முதல்வராக்க விருப்பம் தெரிவிச்சிருக்கார். அவர் என் மாணவர். நேர்மை வாழும்; வாழவைக்கும்.”

கண்மூடி மவுனத்தில் ஆழ்ந்தார் காந்திநேசன்.
=======================================================================