அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 17 ஜூன், 2020

நடந்தது ‘தன்வந்திரி’ யாகம்! முடிந்தது கரோனாவின் கதை!!

#செய்திப்பிரிவு
Published : 17 Jun 2020 07:23 am
Updated : 17 Jun 2020 07:23 am
கரோனா ஒழிய தன்வந்திரி யாகம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா
dhanvandhiri-yaga-for-corona
பெங்களூரு: இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கரோனா வைரஸ் ஒழிய மகா தன்வந்திரி யாகம் நடத்தினார். சிருங்கேரியை சேர்ந்த புரோகிதர்கள் மந்திரங்களை ஓத எடியூரப்பா பூக்களைத் தூவியும், தீபாராதனை காட்டியும் வேண்டிக் கொண்டார்.

இதுகுறித்து ஒரு புரோகிதர்கள் கூறுகையில், “உலகத்தைக் காக்கவும், உலக நன்மைக்காகவும், கரோனா வைரஸ் ஒழியவும் இந்த மகா தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கரோனா கொள்ளை நோய் ஒழிந்து உலகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் நன்மை உண்டாகும். எடியூரப்பாவுக்கு ஆன்மீக நம்பிக்கை இருப்பதால் அவர் பங்கேற்றார்” என்று தெரிவித்தனர்#

இன்றைய[17.06.2020] ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தி இது.

அதென்ன ‘தன்வந்திரி’?

முன்னொரு யுகத்தில், பாற்கடல் கடையப்பட்டபோது, கிருஷ்ண பரமாத்மா புதுசா ஒரு அவதாரம்[இது தசாவதாரத்தில் அடங்காது] எடுத்து அமுதக் கலசத்தோட வெளிப்பட்டாராம். அந்த அவதாரம்தான் தன்வந்திரி[விக்கிப்பீடியா].

அசுரர்களுடன் நடந்த போரில் தோற்று, மனம் நொந்து நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தேவர்களுக்கு அமுதம் வழங்கிக் குணப்படுத்தினாராம் தன்வந்திரி[மோகினியாய் ஆட்டம் போட்டு அரக்கர்களை மயக்கி அமுதம் தராமல் ஏமாற்றியது தனிக்கதை]. அன்றிலிருந்து தேவர்களின் வைத்தியர் என்று அழைக்கப்பட்டாராம்.

இவரைத் தேவலோகத்திலிருந்து நாம் வாழும் பூமிக்கு வரவழைக்கத்தான் இந்தத் தன்வந்திரி யாகம்.

தன்வந்திரியார் தயவில் கரோனா பூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமா?. ஆள்வோரும், அதிகாரிகளும், மருத்துவர்களும், பிற துறைகளைச் சார்ந்தவர்களும் கொரோனாவை ஒழிப்பதற்கான அவசரகால நடவடிக்கைகளைக் கைவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாமா?

“ஆம்” என்று சொல்ல ஆசைதான். இருக்கிற கொஞ்சம் பகுத்தறிவு தடுக்கிறது.

மக்கள் ஆளாளுக்கு ஏதோவொரு தொழில் செய்து பிழைக்கிறார்கள். இல்லாத கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துகிற இந்தப் புரோகிதர்களுக்கு, உலகில் அசம்பாவிதங்கள் நேரும்போதெல்லாம் இம்மாதிரி யாகங்கள் நடத்துவது ஓர் உபதொழில்.

இந்த யாகத்தை நடத்துவித்தவர் கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா. மூடநம்பிக்கைகளைப் போற்றிப் பாதுகாப்பதிலும் முதல்வராக இருக்கிறார்.

எடியூரப்பா அவர்களே, 

கரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஓய்வின்றி உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். புரோகிதர்களுடன் இணைந்து, யாகம் வைபோகமெல்லாம் நடத்தி உங்களின் நேரத்தை இனியும் வீணாக்காதீர்கள்.

‘நேரம் பொன் போன்றது’ என்னும் வழக்கை நீங்கள் அறியாதவரா என்ன?
dhanvandhiri-yaga-for-corona
நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்