செவ்வாய், 16 ஜூன், 2020

பக்தகோடிகளுக்கு என் பணிவான வேண்டுகோள்!

இந்த உலகில் பிறந்து வாழும் மானுடர்களாகிய நாம் அனுபவிப்பது இன்பம் மட்டுமல்ல, துன்பமும்தான்.

இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?

கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப்படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதேனும் சிந்தியுங்கள்.

மனிதர்கள் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?[அவரவர் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தைப் பொருத்தது என்று கதை விடவேண்டாம்]. கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து ஒரு ‘முடிவு’ காணுங்கள்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம். இவை அனைத்திற்கும் மேலாக.....

உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழுதழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுவது ‘பேரின்பம்!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும் சிந்தியுங்கள்.

பிறந்ததிலிருந்து இறக்கும்வரை, நோய், வறுமை, பகைமை, இயற்கைச் சீற்றங்கள் என்றிவற்றால், நாம் நம் புலன்களால் அறிந்தும் உணர்ந்தும் பெறும் துன்பங்கள் அளவிடற்கரியவை. நமக்கு வாய்த்துள்ள அறிவைப் பயன்படுத்தி இவற்றை ஓரளவு தவிர்க்கலாம்; ‘இவ்வகைத் துன்பம் இனி இல்லை' என்னும் நிலைமையை உருவாக்குவது எக்காலத்தும் சாத்தியப்படாத ஒன்று.

எத்தனை முயன்றாலும் தவிர்க்கவே இயலாத துன்பங்களும் உள.

பிறத்தலும், வாழ்தலும், இறப்புக்குள்ளாதலும் ஏன்?

இறப்புக்குப் பின்னர் என்னவாகிறோம்?

சிந்திக்க வைக்கிற அறிவு வாய்த்திருப்பினும், எத்தனை சிந்தித்தாலும் இவை போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறிய இயலாத குறைபாட்டுடன் நாம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்?

இக்கேள்விகளுக்கான பதில்களைப் பெறாமலே நாம் செத்துவிடப் போகிறோம் என்று மனம் கலங்குவது, வாழ்நாள் முழுக்க நம்மை வாட்டி வதைக்கிற மிகக் கொடிய துன்பமாகும். 

ஆக, இவ்வாறான துன்பங்களை நாம் அனுபவித்து வாழ நேர்ந்தது இயற்கை நெறி எனின், குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. புதிர்கள் நிறைந்த அந்த இயற்கை நெறி குறித்து மனித இனம் அழியாமல் இருக்கும்வரை ஆராயலாம். அது எக்காலத்தும் முற்றுப் பெறாத ஓர் ஆய்வாகவே இருத்தல்கூடும்.

'எல்லாம் இறைவன் செயல். இன்பங்களுடனும் பெரும் துன்பங்களுடனும் மனிதர்களை அவன் வாழப் பணித்ததற்கான காரணத்தை அவனே அறிவான்' என்று சொல்லி, இயற்கை அமைவுகள் குறித்தும், கடவுளின் இருப்பு குறித்தும் நிகழ்த்தப்படும் ஆய்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மனித இனத்தின் எதிரிகள்; துரோகிகள்!
கோவை எம் தங்கவேல்: 2018
=======================================================================